search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரகாட்டக்காரி மோகனாம்பாள் அக்காள் மகன் கொலை: ரவுடி ஜானி உள்பட 8 பேரை பிடிக்க 3 தனிப்படை அமைப்பு
    X

    கரகாட்டக்காரி மோகனாம்பாள் அக்காள் மகன் கொலை: ரவுடி ஜானி உள்பட 8 பேரை பிடிக்க 3 தனிப்படை அமைப்பு

    வேலூரில் கரகாட்டக்காரி மோகனாம்பாளின் அக்காள் மகன் கொலையில் தொடர்புடைய ரவுடி ஜானி உள்பட 8 பேரை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
    வேலூர்:

    வேலூர் கஸ்பா வசந்த புரத்தை சேர்ந்தவர் மோகனாம்பாள் (வயது 54). கரகாட்டக்காரி. செம்மரக்கட்டை கடத்தல் வழக்கில் கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார்.

    அவருடன் தொடர்புடைய மோகனாம்பாளின் அக்காள் நிர்மலாவும் கைதானார்.அவரது மகன் சரவணன் (33) காஞ்சீபுரம் கோர்ட்டில் சரண் அடைந்தார். மேலும் இந்த வழக்கில் பலரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கைதான மோகனாம்பாள், நிர்மலா, சரவணன் ஆகியோர் ஜாமீனில் வெளியே வந்தனர். வேலூர் வசந்தபுரத்தில் சரவணன் தனது மனைவி தேவி பாலாவுடன் வசித்து வந்தார். சரவணனுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    கடந்த 23-ந் தேதி வீட்டில் இருந்து சரவணன் வெளியே சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் சரவணன் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் சரவணனின் மனைவி தேவிபாலாவுக்கு தொலைபேசியில் அழைப்பு வந்தது. அதில் பேசியவர்கள், ‘‘சரவணனை நாங்கள் கடத்தி வைத்திருக்கிறோம். எங்களுக்கு ரூ. 3 கோடி பணம் வேண்டும். பணத்தை கொடுத்தால் சரவணனை விட்டு விடுவோம். இல்லாவிட்டால் கொன்றுவிடுவோம்’’ என்று கூறினர்.

    போனில் பேசியவர்கள் காட்பாடியை சேர்ந்த ரவுடி ஜானியும், அவரது கூட்டாளிகளும் என்பதை தேவிபாலா அறிந்தார். எனவே பயந்து போன அவர் தனது கணவரை ரவுடி ஜானியின் கும்பல் கடத்தி சென்று விட்டதாக வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இதைத்தொடர்ந்து போலீசார் சரவணனை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஜானியும், அசேனும் மற்றும் கூட்டாளிகளும் ஓல்டு டவுன் மலைக்கு சென்றதை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்துள்ளனர். இதனால் சரவணனை மலைக்கு கடத்தி சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர்.

    மேலும் ஜானியுடன் தொடர்புடையவர்கள் பற்றியும் போலீசார் விசாரித்தனர். அப்போது ஓல்டு டவுன் பகுதியை சேர்ந்த அசேன் (30) என்பவரும் ஜானியின் கூட்டாளி என்பது தெரிய வந்தது.

    அவரை போலீசார் ரகசியமாக கண்காணித்து பிடித்தனர். அவருடன் அதே பகுதியை சேர்ந்த 17 வயது வாலிபரும் போலீசில் சிக்கினார். அவர்களிடம் போலீசார் விசாரித்தபோது முன்னுக்குப்பின்னாக பதில் அளித்தனர்.

    எனவே போலீசார் அவர்களிடம் தங்கள் பாணியில் விசாரித்தனர். அப்போது ரவுடி ஜானியும், தாங்களும் சேர்ந்து சரவணனை ஓல்டு டவுன் மலைக்கு கடத்தி சென்று கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். இதைத் தொடர்ந்து அசேனையும், அந்த 17 வயது வாலிபரையும் போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர்களை அழைத்துக்கொண்டு ஓல்டு டவுன் மலைக்கு போலீ சார் சென்றனர். அங்கு சர வணனை கொன்று வீசிய இடத்தை கைதான 2 பேரும் அடையாளம் காட்டினர். கை, கால் கட்டப்பட்ட நிலையில், கழுத்து அறுபட்டு, கத்திக்குத்து காயங்களுடன் சரவணன் பிணமாக கிடந்தார்.

    உடலை கைப்பற்றிய போலீசார் சார்பனா மேடு வழியாக மலையில் இருந்து கீழே கொண்டு வந்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக சரவணனின் உடல் அடுக்கம் பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    கைதான 2 பேரிடமும் விசாரணை நடத்தியபோது, இந்த கொலையில் ரவுடி ஜானி என்கிற ஜான் பால் ராஜ், கொசப்பேட்டையை சேர்ந்த சின்னா என்கிற சந்திரன், ஓல்டு டவுனை சேர்ந்த சதீஷ்குமார், மாரி, அரவிந்தன், ரகுவரன், மணி என்கிற கொலைகார மணி, மணியின் தம்பி ஆகிய 8 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    சரவணனிடம் ஜானி ரூ.3 கோடி பணம் கேட்டதாகவும், அதை கொடுக்க மறுத்ததால் சரவணன் கொலை செய்யப்பட்டதாகவும் கைதானவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து அசேன், 17 வயது வாலிபரை தவிர மற்ற 8 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள். இதற்காக டி.எஸ்.பி. ஆரோக்கியம் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் நாக ராஜன், அறிவழகன் ஆகியோர் அடங்கிய 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த தனிப்படையினர் காட்பாடி, ஓல்டு டவுன் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
    Next Story
    ×