search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூரில் ரூ.6 கோடி கேட்டு சாயப்பட்டறை அதிபர் கடத்தல் வழக்கு: இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் கைது
    X

    திருப்பூரில் ரூ.6 கோடி கேட்டு சாயப்பட்டறை அதிபர் கடத்தல் வழக்கு: இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் கைது

    திருப்பூரில் ரூ.6 கோடி கேட்டு சாயப்பட்டறை அதிபர் கடத்தல் வழக்கில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமாரை போலீசார் கைது செய்தனர்.
    திருப்பூர்:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 46). இவர் திருப்பூர் கொங்கு மெயின்ரோட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மங்களம் ரோடு அணைப்பாளையத்தில் சாயப்பட்டறை நடத்தி வருகிறார்.

    கடந்த ஜூலை 15-ந்தேதி வழக்கம்போல் இவர் காரில் சாயப்பட்டறைக்கு புறப்பட்டார். அப்போது போலீஸ் சீருடையில் வந்த 6 பேர் கும்பல் ஆறுமுகத்தை காருடன் கடத்தினர். 2 செல்போன்கள், ரூ.15 ஆயிரத்தை பறித்தனர்.

    காரில் சென்றபடி கடத்தல் கும்பல் ரூ. 6 கோடி கேட்டு ஆறுமுகத்தை சித்ரவதை செய்தனர். விடியவிடிய சித்ரவை செய்த பின்னர் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சென்றபோது போதிய பணம் அவரிடம் இல்லை என்பது குறித்து கடத்தல் கும்பல் தெரிந்து கொண்டனர். அதனால் காரில் இருந்து அவரை குண்டுகட்டாக தூக்கி வெளியே வீசிச்சென்றனர்.

    இது குறித்து ஆறுமுகம் ஆத்தூர் போலீசில் புகார் செய்தார். ஆத்தூர் போலீசார் திருப்பூர் வீரபாண்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். திருப்பூர் போலீசார் அங்கு சென்று ஆறுமுகத்தை மீட்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கடத்தல் கும்பலை தேடி வந்தனர்.

    இந்நிலையில் கோவை ஈச்சனாரியில் ஹவாலா பணம் ரூ.4 கோடி கொள்ளையில் கரூர் மாவட்டம் க. பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சரவணன், ஏட்டு தாமோதரன் மற்றும் குருவாயூரை சேர்ந்த சுதீர் ஆகியோர் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

    இவர்கள் மீது அவினாசி போலீஸ் நிலையத்தில் கடத்தல் வழக்கு உள்ளது. சாயப்பட்டறை உரிமையாளர் ஆறுமுகம் கடத்தலில் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் அடைந்த திருப்பூர் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் க. பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சரவணன், ஏட்டு தாமோதரன் உள்பட 6 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    கடத்தலில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் ஏட்டு உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் போலீசார் அவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
    Next Story
    ×