search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூரில் பனியன் கம்பெனி குடோனை உடைத்து ரூ.13 லட்சம் கொள்ளை: போலீசார் விசாரணை
    X

    திருப்பூரில் பனியன் கம்பெனி குடோனை உடைத்து ரூ.13 லட்சம் கொள்ளை: போலீசார் விசாரணை

    திருப்பூரில் பனியன் கம்பெனி குடோனை உடைத்து தொழிலாளர்களுக்கு போனஸ் கொடுக்க வைத்திருந்த ரூ.13 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக கண்காணிப்பு கேமராவில் பதிவான 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    திருப்பூர்:

    திருப்பூர் ராயபுரம் பெத்திசெட்டிபுரம் 2-வது வீதியில் பூமிநாதன்(45), அவரது நண்பர் ரமேஷ் ஆகியோர் பனியன் வியாபாரம் செய்து வருகிறார்கள். இதற்காக அந்த பகுதியில் ஒரு குடோன் வைத்துள்ளனர். பல்வேறு இடங்களில் இருந்து வாங்கி வரும் பனியன்கள் இங்கிருந்து வெளிஇடங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

    இங்கு வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு இன்று தீபாவளி போனஸ் கொடுப்பதற்காக ரூ.13 லட்சத்து 27 ஆயிரத்தை உரிமையாளர்கள் 2 பேக்குகளில் வைத்து குடோனை நேற்று இரவு பூட்டி சென்றனர்.

    இன்று காலை குடோனின் ஷெட்டர் உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதாக உரிமையாளர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் விரைந்து வந்து பார்த்தனர். அப்போது போனஸ் கொடுக்க வைத்திருந்த ரூ.13 லட்சத்து 27 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து அவர்கள் திருப்பூர் வடக்கு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் குடோனில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது 2 வாலிபர்கள் முகமூடி அணிந்தபடி குடோனுக்குள் நுழைந்து பணத்தை கொள்ளையடித்து செல்வது பதிவாகி இருந்தது.

    எனவே பணம் இருப்பது பற்றி தெரிந்த நபர்களே இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இதுதொடர்பாக உரிமையாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பணம் கொண்டு வரும் தகவல் யாருக்கெல்லாம் தெரியும் என்று விசாரணை நடத்தினர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் சிலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான வாலிபர்கள் யார்? என்றும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×