search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க முயற்சியா? திருமாவளவன் பேட்டி
    X

    தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க முயற்சியா? திருமாவளவன் பேட்டி

    காவிரி பிரச்சினையை தீர்ப்பதற்காக தி.மு.க.வால் நடத்தப்பட்ட அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததன் மூலம் தி.மு.க.வுடன் மீண்டும் கூட்டணி வைக்க முயற்சி நடக்கிறதா? என்ற கேள்விக்கு விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பதிலளித்துள்ளார்.

    சென்னை:

    காவிரி நதி நீர் விவகாரம் தொடர்பாக தி.மு.க. கூட்டிய அனைத்து கட்சி கூட்டம் மக்கள் நலக் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அனைத்து கட்சி கூட்டத்தில் மக்கள் நலக் கூட்டணி பங்கேற்காது என்று வைகோ அறிவித்த போதிலும் அந்த முடிவை விவசாயிகள் நலன் கருதி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று திருமா வளவன் வலியுறுத்தினார்.

    ஆனாலும் அவரது கருத்தை மக்கள் நலக் கூட்டணியில் உள்ள மற்ற தலைவர்கள் ஏற்கவில்லை. இதனால் கூட்டணிக்குள் குழப்பம் நிலவியது. இதனையடுத்து திருமாவளவன் தனது முடிவை மாற்றிக் கொண்டார். தி.மு.க.வின் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

    மேலும் அதற்கான காரணத்தையும் மு.க.ஸ்டாலி னுக்கு கடிதம் மூலம் தெரியப் படுத்தினார்.

    அரசியல் களத்தில் மாறுபட்டு இருந்தாலும் காவிரி பிரச்சினைக்காக ஒன்று பட வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் குரல் கொடுத்தாலும் கூட்டணிக் குள் விரிசல் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் கடைசி நேரத்தில் திருமாவள வன் தனது நிலையை மாற்றினார்.

    திருமாவளவனின் கூர்நோக்கு பார்வை அரசியல் வட்டாரத்தில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தொல். திருமாவளவன் மாலை மலருக்கு அளித்த சிறப்பு பேட்டி:-

    கேள்வி:- தி.மு.க. நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தில் உங்கள் கட்சியினர் பெரும் பாலானோர் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறியும் நீங்கள் தவிர்த்தது ஏன்?

    பதில்:- எங்கள் கட்சியின் உயர்நிலை கூட்டத்தில் பெரும்பாலானோர் அப்படி சொன்னது உண்மைதான். ஆனாலும் மக்கள் நலக் கூட்டணியில் சிக்கல் எழாமல் முடிவு எடுக்கும் அதிகாரத்தை எனக்கு வழங்கினார்கள். அந்த அடிப்படையில்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

    கே:- மக்கள் நலக்கூட்டணியில் மற்ற தலைவர்கள் உங்களுக்கு ஏதும் நெருக்கடி கொடுத்தார்களா?

    ப:- மக்கள் நலக் கூட்டணியில் யார் மீதும் யாரும் கருத்தை திணிக்க மாட்டோம். எந்த நெருக்கடியும் தர மாட்டோம். அதனால்தான் எங்கள் கருத்தை வெளிப்படையாக கூட்டணி தலைவர்களோடு பேச முடிந்தது. ஆனாலும் கூட்டணியின் பெரும்பான்மை கருத்து என்பதால் இறுதியில் நாங்கள் உடன் பட்டோம். இதில் எந்த திணிப்பும் நெருக்கடியும் இல்லை.

    கே:- அ.தி.மு.க.வின் தூண்டுதலில் தான் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் இந்த முடிவை எடுத்தார்கள் என்று சொல்லப்படுகிறதே?

    ப:- இது முற்றிலும் தவறான கருத்து. அக்டோபர் 6-ந்தேதி நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் மக்கள் நலக் கூட்டணி மட்டுமின்றி தி.மு.க.வும் கலந்து கொண் டது. அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி அனைத்து கட்சியினரும் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோம். அதற்கு அடுத்து மாபெரும் பேரணி நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது.

    அதனை நடைமுறைப்படுத்தாமல் திடீரென தி.மு.க. அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியதால் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் இதில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாக அச்சப்பட்டனர். மேலும் எதிர்க்கட்சி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினால் ஆளும் கட்சியினரும் அதன் தோழமை கட்சியும் புறக் கணித்து விடும்.

    எனவே தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் ஒற்றுமையாக இல்லை என்ற தோற்றத்தை உருவாக்கி விடும் என்று தங்களின் அச்சத்தை வெளிப்படுத்தினார்கள். அதனால் தான் தி.மு.க. அந்த கூட்டத்தை நடத்துவதில் உடன்பாடு இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

    கே:- அப்படி என்றால் நீங்கள் மட்டும் ஏன் அதில் பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்?

    ப:- இதில் எங்களுக்கு எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை. அக்டோபர் 13-ந்தேதி நடந்த தி.மு.க. ஒருங்கிணைந்த அனைத்து விவசாயிகள் பிரதிநிதிகள் கூட்டத்தில் 2 கம்யூனிஸ்டு கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். காவிரி பிரச்சினை என்பது அரசியல் மாறுபாடுகளை கடந்த ஒரு பொது பிரச்சினை என்பதால் கம்யூனிஸ்டுகள் அதில் கலந்து கொண்டதை நாங்கள் வரவேற்றோம். அதே அடிப்படையில்தான் தி.மு.க. கூட்டுகிற கூட்டம் என்று பார்க்காமல் காவிரி பிரச்சினைக்காக அனைவரும் ஒன்றுபட்டு இருக்கிறோம் என்று மத்திய அரசுக்கு உணர்த்த இதில் பங்கேற்கலாம் என்று கூறினோம்.

    கே:- ஸ்டாலினுக்கு நீங்கள் கடிதம் எழுதியது தி.மு.க. அணிக்கு தாவ வேண்டும் என்ற அச்சாரம் என்று கருதலாமா?

    ப:- அப்படியென்றால் அழைத்தவுடன் நாங்கள் போயிருக்கலாமே. அதற்கு கடிதம் எழுதி அச்சாரம் போட வேண்டிய தேவை இல்லை. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில ஆண்டுகள் உள்ளன. இந்த நேரத்தில் காவிரி பிரச்சினையை கூட்டணி அரசியலோடு முடிச்சு போட்டு பார்க்க நாங்கள் விரும்பவில்லை.

    கே:- மு.க.ஸ்டாலின் உங்களுக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதி இருக்கிறாரே?

    ப:- நாங்கள் எழுதிய கடிதத்திற்கு அவர் பதில் அனுப்பி இருக்கிறார். இது அவரது அரசியல் நாகரீகத்தை காட்டுகிறது.

    கே:- தி.மு.க. நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வரவேற்று உள்ளீர்களே? இது மக்கள் நலக்கூட்டணியில் அதிருப்தியை ஏற்படுத்தாதா?

    ப:- அப்படி அதிருப்தி எதுவும் எழ வாய்ப்பு இல்லை. சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை நடத்த வேண்டும் என்பதும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பதும் மக்கள் நலக்கூட்டணிக்கு முரண்பாடான தீர்மானங் கள் அல்ல.

    கே:- மக்கள் நலக்கூட்டணி உடையும் என்று சொல்லப் படுகிறதே?

    ப:- இது சிலரின் விருப்பமாகும். தொடங்கிய நாளில் இருந்தே இதோ உடையப் போகிறது என்று எவ்வளவோ பேர் சொல்லிக் கொண்டே இருந்தார்கள். சட்டசபை தேர்தலுக்கு முன்பே உடையும் என்றார்கள். தேர்தலுக்கு பிறகு சிதறும் என்றார்கள். ஆனால் நாங்கள் நெருக்கடியான சூழலிலும் மக்கள் நலக் கூட்டணியை வெற்றிகரமாக முன் எடுத்து செல்கிறோம்.

    தேர்தல் களத்தில் கூட்ட ணியாகவும், போராட்ட களத்தில் கூட்டு இயக்க மாகவும், இயங்கி வருகிறோம். கருத்து முரண்பாடுகள் எழும்போது நாங்கள் அதனை தோழமையோடு பக்குவமாக எதிர் கொள்வோம்.

    கே:- வைகோ தி.மு.க.வை கடுமையாக விமர்சிக்கிறார். நீங்கள் தி.மு.க.வை வரவேற் கிறீர்கள். இது உங்களுக்கிடையே முரண்பாடு இல்லையா?

    ப:- இதனால் எங்களுக்கு இடையே எந்த இடை வெளியும் ஏற்படாது. ம.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக் கும் நீண்ட காலமாக அரசியல் ரீதியான பிரச்சினைகளை சந்தித்து வருகின்றன. அதன் அடிப்படையில்தான் வைகோ தி.மு.க. மீதான விமர்சனங்களை வைக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததுதான். இதனால் விடுதலை சிறுத்தைக்கும், ம.தி.மு.க.விற்கும் எந்த பிரச்சினையும் வராது.

    இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

    Next Story
    ×