search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாய்க்காலில் மூழ்கி பலியான மாணவர் சரவணன்
    X
    வாய்க்காலில் மூழ்கி பலியான மாணவர் சரவணன்

    பெருந்துறை அருகே வாய்க்காலில் மூழ்கி மாணவர் பலி

    வாய்க்காலில் மூழ்கி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    பெருந்துறை:

    பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் பாய்ந்து வந்து கொண்டிருக்கிறது.

    பெருந்துறை அருகே உள்ள வாய்க்கால்மேட்டில் தண்ணீர் சீறி சென்று கொண்டிருக்கிறது. இந்த தண்ணீரை பார்த்ததும் பொதுமக்கள், விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்த மகிழ்ச்சியில் நேற்று மாலை சோகமான ஒரு சம்பவமும் நடந்து விட்டது.

    திருப்பூர் மாவட்டம், அவினாசி சிந்தாமணி பகுதியை சேர்ந்த மாரப்பன் என்கிற கண்ணன் என்பவரது மகன் சரவணன் (வயது 19). இவர் ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி பயோ கெமிஸ்டிரி 3ம் ஆண்டு படித்து வருகிறார்.

    தினமும் கல்லூரிக்கு பஸ்சில் வந்து செல்லும் இவர் நேற்று காலை கல்லூரிக்கு வந்து விட்டு அங்கிருந்து மதியம் தனது நண்பர்களுடன் குளிப்பதற்காக அருகேயுள்ள கீழ்பவானி வாய்க்காலுக்கு சென்றுள்ளார். அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்ட நிலையில் அப்பகுதியில் நேற்று காலை தான் தண்ணீர் வந்து சேர்ந்தது.

    இதனால் மாணவர்கள் ரோட்டை விட்டு சற்று ஒதுக்குப்புறமான பகுதியில் இவர்கள் அனைவரும் மதியம் 2 மணியளவில் ஆவலுடன் குளிக்க சென்றுள்ளனர். நீச்சல் தெரியாத சரவணன் தண்ணீருக்குள் சற்றே ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டார்.

    இதனால் தண்ணீருக்குள் திடீரென மூழ்கினார். இதனைக்கண்ட நண்பர்கள் அவரை காப்பாற்ற போராடினர். கதறினர், பரிதவித்தனர் அங்கும் இங்கும் ஓடினர். அக்கம் பக்கத்தினர்களை உதவிக்கு அழைத்தனர். அவர்களும் முயன்று பார்த்தும் முடியாமல் போய் வந்தனர். தங்கள் கண் எதிரே நண்பனை பறிகொடுத்த மற்ற மாணவர்கள் அழுத காட்சி உலுக்கியது.

    பெருந்துறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெருந்துறை தீயணைப்பு நிலைய அலுவலர் பாஸ்கரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தண்ணீருக்குள் மூழ்கி நீண்ட நேரம் தேடினர். இவர்களுடன் பவானி பரிசல் துறையை சேர்ந்த மீனவர்களும் சரவணனை தேடினர். சுமார் 5 மணியளவில் அதே பகுதியில் சற்று தொலைவில் சரவணனின் உடலை மீட்டனர்.

    இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து சரவணனின் உடலை கைப்பற்றி பெருந்துறை அரசு மருத்துவமணைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    வாய்க்காலில் மூழ்கி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×