search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியலூர் சமூக ஆர்வலர் கொன்று புதைப்பு: ரியல் எஸ்டேட் அதிபர்- தி.மு.க.பிரமுகர், அதிகாரிகள் சிக்குகிறார்கள்
    X

    அரியலூர் சமூக ஆர்வலர் கொன்று புதைப்பு: ரியல் எஸ்டேட் அதிபர்- தி.மு.க.பிரமுகர், அதிகாரிகள் சிக்குகிறார்கள்

    அரியலூர் சமூக ஆர்வலர் கொலையில் தொடர்புடைய ரியல் எஸ்டேட் அதிபர், தி.மு.க. பிரமுகர் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சோழன்குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 70). சமூக ஆர்வலரான இவர், ஊழலுக்கு எதிராக அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மீது உயர் அதிகாரிகளிடம் பல்வேறு புகார்களை அளித்து வந்தார்.

    2008 ஆம் ஆண்டு அந்த பகுதியில் பணியாற்றிய கிராம நிர்வாக அதிகாரி ஒருவர் மீது லஞ்ச ஒழிப்பு துறையில் விஸ்வநாதன் புகார் கொடுத்தார். அதன்பேரில் அந்த கிராம நிர்வாக அதிகாரி கைது செய்யப்பட்டார்.

    இந்தநிலையில் கடந்த மாதம் 15-ந்தேதி மாத்தூருக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து விஸ்வநாதனின் மருமகள் அமுதா குவாகம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே விஸ்வநாதன் குடும்பத்தினர் சென்னை ஐகோர்ட்டில் ஆட் கொணர்வு மனுவை தாக்கல் செய்தனர். அதன் பேரில் சோழன்குடிகாடு கிராமத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    சில நாட்களுக்கு முன்பு கூலிப்படையை சேர்ந்த சந்தன கடத்தல் வீரப்பனின் கூட்டாளி பாலமுருகன், சிறுகளத்தூர் கிராமத்தை சேர்ந்த பாஸ்கர், நெல்லை மாவட்டம் சங்கரன் கோவிலை சேர்ந்த அழகர் ஆகிய 3 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் விஸ்வநாதனை கடத்தி கொன்று, புதைத்தது தெரிய வந்தது.

    விஸ்வநாதன் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்னவென்று கைதான பாலமுருகனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பரபரப்பு தகவல் கிடைத்தது.

    கடலூர் மாவட்டம் முருகன் குடியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் அரியலூர் மாவட்டம் ஆர்.எஸ். மாத்தூர் பகுதியில் உள்ள ஒரு சினிமா தியேட்டரை விலைக்கு வாங்க முடிவு செய்தார். அந்த தியேட்டரை மற்றொருவரும் அதிக விலை கொடுத்து வாங்க முயற்சித்தார். இதற்கு விஸ்வநாதன் உறுதுணையாக இருந்தார்.

    இதனால் விஸ்வநாதனுக்கும், ரியல் எஸ்டேட் அதிபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

    விஸ்வநாதனை கொலை செய்ய திட்டமிட்ட ரியல் எஸ்டேட் அதிபர், இது பற்றி நல்லூரை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் ஒருவரிடம் கூறினார். அவர் அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். அதன் படி கூலிப்படையை சேர்ந்தவர்களான பாலமுருகன், பாஸ்கர், அழகர் ஆகியோரிடம் தெரிவித்தார்.

    அவர்கள் விஸ்வநாதனை கடத்தி சென்று, முருகன்குடியில் உள்ள செங்கல் சூளையில் அடைத்துவைத்து சித்ரவதை செய்தனர். விஸ்வநாதன் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு ரூ.10 லட்சம் வரை பணம் கேட்டும் மிரட்டினர்.

    இந்நிலையில் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட பாலமுருகனை, ஒரு வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். அவரிடம் விசாரணை நடத்தும் போது முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தார்.

    போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்திய போது, அவர் கூட்டாளிகளுடன் சேர்ந்து விஸ்வநாதனை கொன்று புதைத்ததாக கூறினார். இதைத் தொடர்ந்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.

    இதில் வீரப்பனின் கூட்டாளியான பாலமுருகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேலம் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

    இந்த சம்பவத்தில் தொடர்புடைய ரியல் எஸ்டேட் அதிபர், தி.மு.க. பிரமுகர் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

    விஸ்வநாதன் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் மீது புகார் கூறியதால் அவர்களுக்கும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்பு உள்ளதா ? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×