search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தலைவர்கள், அமைச்சர்கள் வருகை:  கரூர், அரவக்குறிச்சியில் லாட்ஜூகள்- விடுதிகளுக்கு கடுமையான கிராக்கி
    X

    தலைவர்கள், அமைச்சர்கள் வருகை: கரூர், அரவக்குறிச்சியில் லாட்ஜூகள்- விடுதிகளுக்கு கடுமையான கிராக்கி

    அரவக்குறிச்சி தொகுதியில் உள்ள அரசியல் கட்சி பிரமுகர்கள் தங்களுக்கு தெரிந்தவர்கள் மூலம் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக கவனித்து வருகின்றனர்.

    அரவக்குறிச்சி:

    தமிழகத்தில் இடைத்தேர்தல் வந்துவிட்டாலே அந்த தொகுதிக்கு தனி மவுசுதான். தற்போது தமிழகத்தை ஆளும் கட்சியும், ஏற்கனவே ஆண்ட கட்சியும் எத்தனையோ இடைத்தேர்தல்களை சந்தித்து இருந்தாலும் கடந்த தி.மு.க. ஆட்சியின்போது வந்த திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலே இத்தனை எதிர்பார்ப்பு மற்றும் மவுசுகளுக்கு காரணமாகி விட்டது.

    பொதுத்தேர்தலின்போது வாக்காளர்களை வேட்பாளர்கள் அணுகும் முறைக்கும், இடைத்தேர்தலின் போது அணுகும் முறைக்கும் எண்ணற்ற வித்தியாசங்கள் உண்டு. ஆளும் கட்சியே இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்று வந்திருந்தாலும் அதனை முன்கூட்டியே உறுதி செய்யும் வகையில் தனித்துவம் அந்த தொகுதிக்கு அளிக்கப்படுவதில் எள்ளளவும் மாற்றம் இருந்ததில்லை.

    கவுரவ பிரச்சினையின் உச்சமாக கருதப்படும் இந்த இடைத்தேர்தல்கள் ஆட்சியின் நம்பகத்தன்மைக்கு பொதுமக்கள் அளிக்கும் சான்றாகவும் கருதப்படுகிறது. தற்போது தேர்தலை சந்திக்கும் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளிலும் அதே நிலைமையே நீடிக்கிறது.

    தீபாவளிக்கு பண்டிகைக்கு பின்னர் தேர்தல் பிரசாரம் களை கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழுவில் சேலம், திருப்பூர், திருவண்ணாமலை, நாமக்கல் உள்ளிட்ட மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் இடம் பெற்றுள்ளனர்.

    மேலும் பிரசாரத்திற்காக கட்சி தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் வர உள்ளனர். அவர்கள் தொகுதியிலேயே தங்கி பிரசாரம் செய்ய உள்ளனர். இதற்காக அரவக்குறிச்சி தொகுதியில் தங்க பல்வேறு முன்னேற்பாடுகளை அரசியல் கட்சியினர் மேற்கொண்டு வருகிறார்கள்.

    குறிப்பாக அரவக்குறிச்சியில் இரண்டு விடுதிகள் மட்டுமே உள்ளன. ஒன்றில் 10 அறைகளும், மற்றொன்றில் 7 அறைகளும் இருக்கிறது. தேர்தல் தேதி அறிவித்த மறுநாளே இந்த அறைகள் அனைத்தும் புக்கிங் செய்யப்பட்டுவிட்டன. எனவே மாவட்ட தலைநகரான கரூரில் தங்கியிருந்து அரவக்குறிச்சியில் பிரசாரம் செய்யவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    அரவக்குறிச்சியில் காலியாக கிடந்த வீடுகளை வாடகைக்கு விடுவதில் வீட்டின் உரிமையாளர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள். குறைந்த பட்சம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து வாடகைக்கு விடப்படுகிறது. இதனால் பாழடைந்து கிடந்த வீடுகளை மராமத்து பார்த்து, வண்ணப்பூச்சு அடிக்கும் பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது.

    அதேபோல் அரவக்குறிச்சியில் அதிகபட்சமாக 10 ஓட்டல்கள் மட்டுமே உள்ளன. எனவே புதிதாக தற்காலிக ஓட்டல்களை திறக்கவும் பலர் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அரவக்குறிச்சி தொகுதியில் உள்ள அரசியல் கட்சி பிரமுகர்கள் தங்களுக்கு தெரிந்தவர்கள் மூலம் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக கவனித்து வருகின்றனர். இதனால் அரவக்குறிச்சியில் வீடு மற்றும் தங்கும் விடுதிகளுக்கு கடுமையான கிராக்கி ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×