search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணையில் இருந்து 2 வாரங்களே தண்ணீர் திறக்க வாய்ப்பு
    X

    மேட்டூர் அணையில் இருந்து 2 வாரங்களே தண்ணீர் திறக்க வாய்ப்பு

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிவதால் இன்னும் 2 வாரங்களுக்கு மட்டுமே அணையில் இருந்து தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது.
    மேட்டூர் :

    காவிரி டெல்டா பாசனத்திற்காக இந்தாண்டு வழக்கத்தை விட 3 மாதம் தாமதமாக கடந்த மாதம் 20-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    அப்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 87.68 அடியாகவும், அணைக்கு நீர்வரத்து 10 ஆயிரத்து 68 கன அடியாகவும் இருந்தது.

    கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கு திறந்து விட்ட தண்ணீரை படிப்படியாக கர்நாடக அரசு குறைத்து முற்றிலும் நிறுத்தியது.

    இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து முற்றிலும் சரிந்ததால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

    மேட்டூர் அணைக்கு நேற்று 322 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் குறைந்து 143 கன அடியானது. நேற்று 55.92 கன அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 54.43 அடியானது.

    அணைக்கு நீர்வரத்து முற்றிலும் சரிந்துள்ள நிலையில் அணையில் இருந்து 12 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் ஒரு நாளைக்கு ஒன்றரை அடிக்கும் மேல் வேகமாக நீர்மட்டம் சரிந்து வருகிறது.

    அணை நீர்மட்டம் 30 அடியாக இருக்கும் வரை மட்டுமே மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும். மீதம் உள்ள தண்ணீர் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்படும்.

    வட கிழக்கு பருவ மழை தொடங்குவதும் இந்தாண்டு வழக்கத்தை விட தாமதமாகி வருகிறது. இனிவரும் நாட்களில் மழை பெய்யாமல் இதே நிலை நீடித்தால் இன்னும் 2 வாரங்களுக்கு மட்டுமே மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது.
    Next Story
    ×