search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உல்லாசத்துக்கு மறுத்ததால் நர்சை கழுத்தை நெரித்து கொன்று நாடகமாடிய கணவன் கைது
    X

    உல்லாசத்துக்கு மறுத்ததால் நர்சை கழுத்தை நெரித்து கொன்று நாடகமாடிய கணவன் கைது

    புதுக்கோட்டை அருகே உல்லாசத்துக்கு மறுத்த நர்சை கழுத்தை நெரித்து கொன்று கணவன் நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மாத்தூர்:

    புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் அருகே கொல்லுப்பட்டியில் உள்ள குளத்தில் கடந்த 19-ந் தேதி பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த மாத்தூர் போலீசார், அந்த பெண் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    விசாரணையில் அந்த பெண், திருச்சி மாவட்டம் துவாக்குடி அண்ணாவளைவு வடக்குத்தெருவை சேர்ந்த செந்தில்குமாரின் மனைவி பவானி(33) என்பது தெரியவந்தது. இதையடுத்து செந்தில்குமாரை மாத்தூர் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர், பவானியை கொலை செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அப்போது செந்தில் குமார் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

    எனக்கும், பவானிக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. பவானி பட்டதாரி ஆவார். ஆனால் நான் 7-ம் வகுப்பு வரையே படித்துள்ளேன். நான் தனியார் நிறுவனத்தில் வெல்டராக வேலை பார்த்து வந்தேன். பவானி திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்தார். இதனால் அவள் என்னை மதிக்கவில்லை. மேலும் என்னுடன் குடும்பம் நடத்தவும் மறுத்தார். மேலும் நான் திக்கித்திக்கி பேசுவதை கேலி செய்தார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    இதையடுத்து அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். அதன்படி கடந்த 18-ந் தேதி மாலை பவானியை கோவிலுக்கு செல்லலாம் என்று கூறி, அவரை துவாக்குடியில் இருந்து கீரனூர் செல்லும் சாலையில் மலைக்குடிப்பட்டிக்கு ஸ்கூட்டரில் அழைத்து சென்றேன். அப்போது கோவில் பூட்டியிருந்தது.

    இதையடுத்து அவரை கொல்லுப்பட்டியில் உள்ள குளக்கரைக்கு அழைத்து சென்றேன். அங்கு அவருடன் உல்லாசமாக இருக்க முயன்றபோது, நான் மது அருந்தியிருப்பதை தெரிந்து கொண்ட பவானி, என்னை தள்ளிவிட்டார். இதனால் பலவந்தமாக அவருடன் உல்லாசமாக இருக்க முயன்றேன். ஆனால் முடியவில்லை.

    இதையடுத்து நான் ஏற்கனவே மறைத்து வைத்திருந்த கயிறை எடுத்து, பவானியின் கழுத்தை சுற்றி இறுக்கினேன். இதில் அவர் இறந்தார். பின்னர் பவானியின் கழுத்தில் கிடந்த தாலியை கழற்றிக்கொண்டு, ஸ்கூட்டரில் நான் வீட்டிற்கு வந்து விட்டேன். அப்போது வீட்டில் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்ததால், எனது அறைக்கு சென்று படுத்துக்கொண்டேன். காலையில் எனது தாய், என்னிடம் பவானி எங்கே என்று கேட்டபோது, தாலியை வீட்டில் கழற்றி வைத்து விட்டு எங்கோ சென்றுவிட்டதாக கூறினேன்.

    மேலும் இது பற்றி பவானியின் அண்ணனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவருடன், நானும் சேர்ந்து பவானியை தேடுவது போல் நடித்தேன். பின்னர் பவானியின் அண்ணனுடன் துவாக்குடி போலீஸ் நிலையத்திற்கு நானும் சென்றேன். அங்கு அவர் கொடுத்த புகாரில் என்மீதும் சந்தேகம் இருப்பதாக கூறியிருந்தார்.

    இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் சிக்கி கொண்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கைதான செந்தில்குமார் கீரனூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    Next Story
    ×