search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தனி ஆளாக களம் இறங்கி தஞ்சையில் அகழியை சுத்தப்படுத்திய ஆசிரியை
    X

    தனி ஆளாக களம் இறங்கி தஞ்சையில் அகழியை சுத்தப்படுத்திய ஆசிரியை

    தஞ்சை கொடிமரத்துமூலை அகழியை சுத்தப்படுத்த தனி ஆளாக களம் இறங்கிய சென்னை பெண்ணுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    தஞ்சாவூர்:

    சென்னை அண்ணாநகர் மாணிக்கவாசகர் தெருவை சேர்ந்தவர் நிர்மலா (வயது38). இவரது கணவர் நந்தகுமார். தனியார் கம்பெனியில் பணியாற்றுகிறார். இவர்களுக்கு கதிரொலி என்ற மகளும், கோவிந்தராஜன் என்ற மகனும் உள்ளனர். நிர்மலா கடந்த வருடம் வரை சென்னையில் ஒரு பள்ளியில் பணியாற்றி வந்தார்.

    பின்னர் வேலையை விட்டுவிட்டு பொது சேவையாற்ற விரும்பி அதில் ஈடுபட்டு வருகிறார். இதையடுத்து கடந்த 26-ந்தேதி அம்பத்தூர் ஏரிக்கு சென்ற நிர்மலா அங்கு செடிகொடிகள் மண்டி தண்ணீர் செல்ல வழியில்லாமல் இருப்பதை கண்டார். நம்மால் என்ன செய்ய முடியும் என்று யோசித்த அவர் உடனடியாக களத்தில் இறங்கி தண்ணீர் செல்ல முடியாமல் மண்டிக்கிடந்த செடி, கொடிகளை அகற்றும் சேவையில் ஈடுபட்டார்.

    இவரது சேவையை கண்ட பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் ஆதரவு அளித்ததோடு நிர்மலாவை பாராட்டி உள்ளனர்.

    இந்நிலையில் இன்று காலை தஞ்சைக்கு வந்த அவர் கொடிமரத்து மூலையில் உள்ள அகழியில் வெங்காயதாமரைகளால் அப்பகுதியே மூடிக்கிடப்பதை கண்டு தனி ஆளாக களத்தில் இறங்கி அதனை அகற்றும் வேலையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து அவர் கூறுகையில், ஆசிரியர் பணியாற்றி வந்த நான் பொது சேவையில் ஈடுபட வேண்டும் என பல நாட்களாக நினைத்து வந்தேன். இதையடுத்து ஆசிரியர் பணியை விட்டேன். பின்னர் அம்பத்தூர் ஏரியை சுத்தப்படுத்தினேன்.

    இந்நிலையில் தஞ்சைக்கு நான் பஸ்சில் வந்து கொண்டிருந்தேன். நகருக்கு வந்தபோது கொடிமரத்து மூலையில் உள்ள அகழி வெங்காயத்தாமரை செடிகளால் மூடிக்கிடப்பதை பார்த்து வேதனை அடைந்தேன்.

    உடனடியாக பஸ்சில் இருந்து இறங்கி அகழியை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டேன். ஆனால் தஞ்சை எனக்கு அறிமுகமில்லாத ஊர். இங்கு எங்கு தங்குவது என்று தெரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×