search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோட்டில் இடி-மின்னலுடன் பலத்த மழை
    X

    ஈரோட்டில் இடி-மின்னலுடன் பலத்த மழை

    ஈரோட்டு மாவட்டத்தில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் நிலத்தை மட்டுமல்ல மக்கள் மனதையும் இந்த குளிரவைத்து உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வதைத்ததால் கடும் வறட்சி ஏற்பட்டது. இந்த வறட்சியால் குடிக்க தண்ணீருக்கு கூட பஞ்சம் ஏற்பட்ட நிலையில் மழை பெய்ய வேண்டி பொதுமக்கள் நூதன வழிபாடு செய்தனர்.

    மொடக்குறிச்சி பகுதியில் பெண்கள் மழைக்கஞ்சி எடுத்து ஒப்பாரி பாட்டுபாடி வழிபாடு செய்தனர்.

    மழை பெய்யாத ஊர்களில் குடியிருக்க மாட்டோம் என்று ஊரை விட்டு பெண்கள் சென்றனர். ஊர் எல்லைக்கு ஆண்கள் சென்று பெண்களை சமாதானப்படுத்தி அழைத்து வந்தனர்.

    இப்படி செய்தால் மழை பெய்யும் என்பது அவர்களின் நம்பிக்கை விவசாய நிலங்கள் எல்லாம் தரிசு நிலமாக மாறிய நிலையில் மழை பெய்யாதா? என்று பொதுமக்களும் விவசாயிகளும் ஏங்கி கொண்டிருந்தனர்.

    ஈரோடு நகர மக்களின் இந்த ஏக்கத்தை போக்கும் வகையில் நேற்று இரவு மழை கொட்டியது. இரவு 7 மணியளவில் சில துளிகளாக தூறிய மழை அடுத்த சில நிமிடத்தில் இடி-மின்னலுடன் கொட்டி தீர்த்தது.

    சுமார் ஒரு மணி நேரம் இந்த மழை பெய்தது. இந்த மழையால் ரோட்டில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழைவெள்ளம் சாக்கடைக்குள் பாய்ந்து சாக்கடை நீருடன் மழை வெள்ளம் கலந்து நிரம்பி ரோட்டிலும் ஓடியது.

    கொல்லம்பாளையம் ரெயில்வே மேம்பாலம் மணிக்கூண்டு பகுதி சூரம்பட்டி நால் ரோடு, மூலப்பாளையம், அன்னமார் பெட்ரோல் பங்க் மற்றும் திண்டல் பகுதி ரோடுகளில் மழை வெள்ளம் சீறி பாய்ந்து சென்றதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. பல இருசக்கர வாகனங்கள் மழை தண்ணீரில் சிக்கி பழுதானது.

    ஈரோடு மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் மட்டும் அதிகபட்சமாக 70 மி,மீ மழை பதிவாகி இருந்தது.

    மேலும் இந்த மழை ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக பெய்தது. பவானி, சென்னிமலை, மொடக்குறிச்சி, அரச்சலூர், ஒரத்துப்பாளையம் ஆகிய பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

    நிலத்தை மட்டுமல்ல மக்கள் மனதையும் இந்த மழை குளிரவைத்து உள்ளது.
    Next Story
    ×