search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்.
    X
    உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்.

    வேலூர் ஊரீசு கல்லூரியில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

    வேலூர் ஊரீசு கல்லூரியில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தால் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    வேலூர்:

    வேலூர் அண்ணா சாலையில் ஊரீசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் செயல்பட்டு வந்த கேன்டீனை கடந்த ஆகஸ்ட் மாதம் 8-ந் தேதி மாணவர்கள் சிலர் அடித்து, நொறுக்கி சூறையாடினர்.

    கேன்டீன் நடத்தியவர், கல்லூரி நிர்வாகத்தை மிரட்டியதாக புகார் கூறப்பட்டது. கேன்டீன் சூறையாடப்பட்டது குறித்து வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    இதையடுத்து, ஊரீசு கல்லூரியில் தொடர்ந்து கேன்டீன் நடத்துவதற்கான உரிமத்தை கல்லூரி நிர்வாகம் ரத்து செய்தது. இந்த நிலையில், கடந்த 19-ந் தேதி கேன்டீனை நடத்தியவர் கல்லூரி முதல்வரிடம் புகார் மனு அளித்தார்.

    அந்த மனுவில், கேன்டீன் சூறையாடப்பட்டபோது தனது பைக் திருடு போனதாகவும், அதை மீட்டு தரவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். பைக் திருடு போகவில்லை என கல்லூரி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், சிலர் கல்லூரி நிர்வாகத்திற்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருவதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஊரீசு மாணவர்கள் இன்று காலை கல்லூரி வளாகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு கல்லூரி நிர்வாகத்தை மிரட்டும் நபர்களை கைது செய்யக் கோரி கோ‌ஷம் எழுப்பினர்.

    அப்போது, 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரி கட்டிடத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ஆரோக்யம், பன்னீர்செல்வம் மற்றும் போலீசார் ஊரீசு கல்லூரியில் குவிந்தனர்.

    கட்டிடத்தின் மீது ஏறிய மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறக்கினர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களையும் சமரசம் செய்தனர். இதையடுத்து, கல்லூரி நிர்வாகத்துடன் போலீசார் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    இதனால் ஊரீசு கல்லூரியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×