search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பட்டாசு வெடித்து 8 பேர் பலி: கடை உரிமையாளர்கள் 2 பேர் கைது
    X

    பட்டாசு வெடித்து 8 பேர் பலி: கடை உரிமையாளர்கள் 2 பேர் கைது

    பட்டாசு விபத்தில் 8 பேர் பலியான சம்பவத்தில் கடையின் உரிமையாளர் மற்றும் குத்தகைதாரர்கள் கைது செய்யப்பட்டனர்.

    விருதுநகர்:

    சிவகாசி - விருதுநகர் சாலையில் உள்ள சின்னத்தம்பி நகரில் ஆனந்த் (வயது38) என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடை உள்ளது. நேற்று மதியம் இந்த கடைக்கு மினி லாரியில் பட்டாசுகள் வந்தன.

    அவற்றை இறக்கிக் கொண்டிருந்த போது திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பட்டாசு வந்த லாரி, பட்டாசு கடை ஆகியவை தீப்பிடித்து எரிய தொடங்கின. மேலும் பட்டாசு கடையின் அருகில் இருந்த வாகன காப்பகத்துக்கும் தீ பரவ அங்கிருந்த இருசக்கர வாகனங்களும் தீ பிடித்து எரிந்தன. இதனால் ஏற்பட்ட கரும் புகை சுமார் ஒரு பனை உயரத்திற்கும் மேலே எழும்பியது.

    இந்த வெடி விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். அப்போது பட்டாசு கடையின் அருகே உள்ள ‘ஸ்கேன்’ மையத்தில் மூச்சுத்திணறி 8 பேர் பலியாகி இருப்பது தெரிய வந்தது. இவர்களில் 6 பேர் பெண்கள். பலியான 8 பேரின் பெயர் விவரம் வருமாறு:-

    1. பாஸ்கர் (வயது 42) வெங்கடாசலபுரம், சிவகாசி, ஸ்கேன் மருத்துவ பரிசோதனை மைய மேலாளர்.

    2. காமாட்சி (22) ரிசர்வ் லைன், நேருஜிநகர்.

    3. புஷ்பலட்சுமி (35), தாயில்பட்டி. (இவர்கள் 2 பேரும் ஸ்கேன் மைய நர்சுகள்.

    4. வளர்மதி (18) காந்திநகர் சிவகாசி.

    5. பத்மலதா (44) மணி நகர், சிவகாசி. (இவர்கள் 2 பேரும் ஸ்கேன் மைய டைபிஸ்ட்கள்).

    6. சொர்ண குமாரி (36) திருத்தங்கல்.

    7. தேவி (18).

    8. ராஜா, சொக்கலிங்க புரம்.

    இவர்கள் 3 பேரும் ஸ்கேன் எடுக்க வந்தவர்கள். இவர்களில் தேவி கர்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்தில் காயம் அடைந்த 15 பேர் சிகிச்சைக்காக சிவகாசியில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ஸ்கேன் மைய டாக்டர் ஜானகிராமன் (40) மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    வெடி விபத்து ஏற்பட்டதும், மினி லாரியில் இருந்து பட்டாசுகளை இறக்கிக் கொண்டிருந்த தொழிலாளர்களும், பட்டாசு கடை ஊழியர்களும் தப்பி ஓடி விட்டனர். ஆனால் ஸ்கேன் மையத்தில் இருந்தவர்கள் மூச்சுத் திணறி பலியாகி உள்ளது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஸ்கேன் மைய நுழைவு வாயில் சிறியதாக இருந் ததும், இதன் முன்பே லாரியை நிறுத்தி பட்டாசுகள் இறக்கப்பட்டதுமே, 8 பேரின் சாவுக்கு காரண் என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. விபத்து ஏற்பட்ட நேரத்தில் ஸ்கேன் மையத்தில் குளிரூட்டப்பட் அறையில் இருந்தவர்களுக்கு முதலில் எதுவும் தெரிய வில்லை. பட்டாசுகள் வெடித்து அருகில் உள்ள வாகன காப்பகத்திற்கு தீ பரவி, அங்குள்ள இரு சக்கர வாகனங்கள் எரிய தொடங்கியதும் தான் விபத்து பற்றி ஸ்கேன் மையத்தில் உள்ளவர்கள் அசம்பாவிதத்தை உணர்ந்துள்ளனர். விபரீதத்தை உணர்ந்த அவர்கள் அங்கிருந்து தப்பிக்க முயன்றபோது கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. இதனால் அங்கிருந்தவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

    இதனால் மூச்சுவிட சிரமப்பட்ட அவர்கள், மையத்தின் உள்ளேயே மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்துள்ளனர்.

    மேலும் மயங்கி கிடந்த ஸ்கேன் மைய டாக்டர் ஜானகிராமன் (23), சுப்பு லட்சுமி (52), மகேஸ்வரி (40), சரண்யா (29), முத்து பிரியா (23), சுமதி (26), லட்சுமி (55), கலைமணி (60), கருப்பாயி அம்மாள் (40), மாரீஸ்வரி (30), இசக்கியம்மாள் (53), சுப்பிரமணி (49), தெய்வ மலர் (42), ராக்கப்பன் (70) ஆகியோர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    ஸ்கேன் மையத்தில் பலர் சிக்கிக் கொண்டதை அறிந்த அந்த பகுதி மக்களும், சுமை தூக்கும் தொழிலாளர்களும் அந்த மையத்தின் பின் பக்க கண்ணாடி ஜன்னலை உடைத்து மீட்பு பணியில் இறங்கியதால் தான் பலரை காப்பற்ற முடிந்துள்ளது. இல்லாவிட்டால் உயிர் பலி இன்னும் அதிகரித்திருக்க கூடும்.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் விருதுநகர் மாவட்ட கலெக்டர் சிவ ஞானம், டி.ஐ.ஜி. ஆனந்த குமார் சோமானி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன், வருவாய் அலுவலர் முத்துக்குமரன் ஆகியோர் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து பட்டாசு கடை செயல்பட்ட கட்டிடத்தின் உரிமையாளர் சுதந்திர ராஜன், கடை உரிமையாளர் செண்பகராஜன், குத்தகை தாரர் ஆனந்தராஜன் மற்றும் 3 சுமை தூக்கும் தொழிலாளர் என 6 பேர் மீது சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்தனர்.

    இதில் பட்டாசு கடை உரிமையாளர் செண்பக ராஜன், குத்தகைதாரர் ஆனந்தராஜன் ஆகியோர் இன்று கைது செய்யப் பட்டனர். வெடி விபத்துக்கு காரணமான கடையில் அதிக அளவு பட்டாசு இருப்பு வைப்பதை ஸ்கேன் மைய மேலாளர் பாஸ்கரன் முன்கூட்டியே எச்சரித்ததாக கூறப்படுகிறது. இதனை பட்டாசு கடை குத்தகை தாரர் கவனத்தில் கொள்ளாததால் வெடி விபத்து ஏற்பட்டு 8 பேர் பலியாகி விட்டனர். இந்த சம்பவத்தில் புகார் கூறிய பாஸ்கரும் இறந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×