search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவகாசி வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அமைச்சர்கள் நேரில் ஆறுதல்
    X

    சிவகாசி வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அமைச்சர்கள் நேரில் ஆறுதல்

    சிவகாசி வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திரபாலாஜி, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் நேரில் ஆறுதல் கூறி, தலா ரூ.2 லட்சம் வழங்கியதுடன் அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என உறுதி அளித்தனர்.
    விருதுநகர்:

    சிவகாசியில் நேற்று நடந்த வெடி விபத்தில் 8 பேர் உயிர் இழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். வெடி விபத்தில் காயம் அடைந்த மருத்துவ பரிசோதனை மைய டாக்டர் ஜானகிராமன் மதுரையில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்றவர்கள் சிவகாசியில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த வெடி விபத்து பற்றி தகவலறிந்த அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திரபாலாஜி, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் சிவகாசி விரைந்தனர்.

    வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து நேரில் ஆறுதல் கூறினர். மேலும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கினர். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் என அமைச்சர்கள் உறுதி கூறினர்.

    பின்னர், இந்த வெடிவிபத்தில் காயம் அடைந்து அரசு ஆஸ்பத்திரியிலும், தனியார் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள். அவர்களுக்கு தேவையான சிறப்பு சிகிச்சைகளை அளிக்கும்படி டாக்டர்களிடம் அறிவுறுத்தினர். பின்னர் வெடி விபத்து நடந்த இடத்தையும் பார்வையிட்டனர்.

    இதனைத்தொடர்ந்து சிவகாசி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் கலெக்டர் சிவஞானம், மாவட்ட வருவாய் அதிகாரி முத்துக்குமரன், போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் வெடி விபத்து குறித்து கேட்டறிந்ததுடன் இம்மாதிரியான வெடி விபத்துகளை தவிர்க்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

    இந்த வெடி விபத்து நடந்த பட்டாசு கடைக்கு உரிமம் வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று வருவாய்த்துறை உயர் அதிகாரியிடம் கேட்டதற்கு, இந்த கடைக்கான உரிமம் சென்னை வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை இணை இயக்குனர் மூலம் வழங்கப்பட்டு உள்ளது என்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் சிவஞானம் வெடி விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார். பின்னர் அவர் ஆஸ்பத்திரிக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    இந்த வெடி விபத்து சம்பவம் தொடர்பாக சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

    முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், முன்னாள் எம்.பி. மாணிக்கம் தாகூர் ஆகியோரும் ஆஸ்பத்திரிகளுக்கு சென்று காயம் அடைந்தவர்களை பார்த்து ஆறுதல் கூறினார்கள்.
    Next Story
    ×