search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு சென்றால் ஆவணம் அவசியம்: தஞ்சை கலெக்டர் அறிவிப்பு
    X

    ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு சென்றால் ஆவணம் அவசியம்: தஞ்சை கலெக்டர் அறிவிப்பு

    தேர்தல் விதிமுறை அமலில் உள்ளதால் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால் ஆவணம் அவசியம் என்று தஞ்சை கலெக்டர் அறிவித்துள்ளார்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தஞ்சை சட்டசபை தொகுதியில் 100 சதவீதம் நேர்மையாக தேர்தல் நடைபெற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணமோ, பொருளோ வழங்குவதாக தெரியவந்தால் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். இதற்காக பறக்கும்படை(செல்போன்:83000-23856), கூடுதல் பறக்கும்படை(83000-23857), நிலையான கண்காணிப்புக்குழு(83000-23854), வீடியோ கண்காணிப்புக் குழு(83000-23844) அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையை 18004258036 மற்றும் 1077 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

    தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் 21 வாகன சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் 2 துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் குழு அமைக்கப்பட்டு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. தஞ்சை வருவாய் கோட்ட அலுவலகத்தில் வாக்காளர் சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுக்கூட்டம் நடத்துவதற்கும், வாகனங்களில் பிரசாரம் செய்வதற்கும் அரசியல் கட்சியினர் உரிய அனுமதி பெற வேண்டும். தஞ்சை சட்டசபை தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை ஆய்வு செய்ய 5 துணை கலெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இவர்கள் வாக்குச்சாவடி மையங்களில் குடிநீர் வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்வு தளவசதி, மின்சார வசதி போன்ற வசதிகள் இருக்கிறதா? என ஆய்வு மேற்கொள்வார்கள். வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணமோ, பரிசு பொருட்களோ கொண்டு சென்றால் பறக்கும்படையினர் பறிமுதல் செய்வார்கள். தீபாவளி பண்டிகையையொட்டி வணிகர்கள் அதிக அளவில் பணம் கொண்டு செல்வதாக இருந்தால் அதற்கு உரிய ஆவணங்களையும் அவசியம் வைத்திருக்க வேண்டும். ரூ.50 ஆயிரம் வரை எந்த பிரச்சனையும் இல்லை. அதற்கு மேல் வைத்திருந்தால் அந்த பணம் பறிமுதல் செய்யப்படும். உரிய ஆவணங்களை காண்பித்தால் பணம் திரும்ப ஒப்படைக்கப்படும்.

    தஞ்சை சட்டசபை தொகுதியில் யாருக்கு ஓட்டுப்போட்டோம் என்று அறியும் கருவி பயன்படுத்துவது குறித்து எந்த உத்தரவும் இதுவரை வரவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், மாவட்ட வருவாய் அதிகாரி சந்திரசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
    Next Story
    ×