search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் மாணவர் துரைராஜ்.
    X
    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் மாணவர் துரைராஜ்.

    விழுப்புரத்தில் பிளஸ்-2 மாணவர் தற்கொலை முயற்சி: பள்ளி ஆசிரியர்களிடம் கல்வி அதிகாரி விசாரணை

    விழுப்புரத்தில் பிளஸ்-2 மாணவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து பள்ளி ஆசிரியர்களிடம் கல்வி அதிகாரி விசாரணை மேற்கொண்டனர்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலை இந்திராநகரை சேர்ந்தவர் பத்மநாபன். ஓட்டல் தொழிலாளி. இவரது மகன் துரைராஜ் (வயது 17). விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    நேற்று பள்ளிக்கு வந்த துரைராஜ் மதியம் கழிவறைக்கு சென்றார். பின்னர் மற்ற மாணவர்களிடம் பள்ளியில் ஆங்கிலம், இயற்பியல் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் என்னை அடிக்கடி திட்டுகிறார்கள். இதனால் மனமுடைந்த நான் எறும்பு மருந்தை தின்றுவிட்டேன் என்று கூறினார்.

    இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் ஆசிரியர்களிடம் தெரிவித்தனர்.

    தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் ஆகியோர் மாணவர் துரைராஜை மீட்டு விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு துரைராஜூக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து விழுப்புரம் நகர போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து சென்று மாணவர் துரைராஜிடம் விசாரணை நடத்தினர். அவர் சட்டைபையில் வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றினர்.

    அதில் ஆங்கிலம், இயற்பியல் பாடம் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள் என்னை திட்டியதால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று துரைராஜ் குறிப்பிட்டிருந்தார்.

    மாணவர் துரைராஜ் மீது தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    இந்த சம்பவம் குறித்து விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர் இதுதொடர்பாக விசாரணை நடத்துமாறு மாவட்ட கல்வி அலுவலர் மோகனுக்கு உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து கல்வி அதிகாரி மோகன் தலைமையில் ஒரு குழுவினர் கீழ்பெரும்பாக்கம் அரசு மேல்நிலைபள்ளிக்கு நேற்று மாலை வந்தனர். நடந்த சம்பவம் குறித்து தலைமை ஆசிரியர் மற்றும் ஆங்கிலம், இயற்பியல் ஆசிரியர்களிடம் விசாரித்தனர்.

    மாணவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இன்று 2-வது நாளாக அந்த பள்ளிக்கு கல்வி அதிகாரி மோகன் வந்தார். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டார்.

    இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸிடம் கேட்டபோது பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன்.

    மாவட்ட கல்வி அலுவலர் மோகன் விசாரணை நடத்தி வருகிறார். விசாரணை முடிந்த பின் அவர் என்னிடம் அறிக்கை தாக்கல் செய்வார். அந்த அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
    Next Story
    ×