search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து15 நாட்களே தண்ணீர் திறக்க வாய்ப்பு
    X

    டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து15 நாட்களே தண்ணீர் திறக்க வாய்ப்பு

    மேட்டூர் அணை நீர்மட்டம் 60 அடியாக சரிந்துள்ளதால் வடகிழக்கு பருவ மழை கைகொடுக்குமா? என்று விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
    மேட்டூர்:

    மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் டெல்டா மாவட்டங்களில் சுமார் 14 லட்சம் ஏக்கரில் ஆண்டுதோறும் சம்பா சாகுபடி செய்யப்படும்.

    இதற்காக ஜூன் மாதம் 12-ந் தேதி காவிரியில் வழக்கமாக தண்ணீர் திறந்து விடப்படும். இந்தாண்டு போதுமான நீர் இருப்பு இல்லாததால் 3 மாதம் தாமதமாக கடந்த மாதம் 20-ந் தேதி 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    அப்போது அணையின் நீர்மட்டம் 87.68 அடியாகவும், அணைக்கு நீர்வரத்து 10 ஆயிரத்து 92 கன அடியாகவும் இருந்தது.

    இதற்கிடையே கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் படிப்படியாக குறைக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு முற்றிலும் நிறுத்தப்பட்டது.

    இதனால் மேட்டூர் அணைக்கு நேற்று 2142 கன அடியாக இருந்த நீர்வரத்து முற்றிலும் சரிந்து இன்று 1017 கன அடியானது. 61.41 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று மேலும் குறைந்து 60.14 அடியானது.

    அணையில் இருந்து 12 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படும் நிலையில் அணைக்கு நீர்வரத்து 1000 கன அடியாக சரிந்துள்ளதால் நாள் ஒன்றுக்கு சுமார் ஒன்றரை அடி வீதம் நீர்மட்டம் தற்போது சரிந்து வருகிறது.

    குடிநீர் தேவைக்கு அணையில் நீர் இருப்பு வைக்க வேண்டியுள்ளதால் அணையின் நீர்மட்டம் 30 அடியாக இருக்கும் வரை மட்டுமே மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியும்.

    அணையில் நீரின் பரப்பளவு குறைந்துள்ள நிலையில் இனி வரும் நாட்களில் ஒரு நாளைக்கு 2 அடி வீதம் அணையின் நீர்மட்டம் சரியும் என்பதால் இன்னும் 15 நாட்களுக்கு மட்டுமே மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறக்க வாய்ப்புள்ளது.

    இதற்கிடையே வட கிழக்கு பருவமழை தொடங்கி நீர்வரத்து அதிகரித்தாலோ அல்லது சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விட்டாலோ ? தான் மேட்டூர் அணையின் இருந்து கூடுதல் நாட்கள் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியும்.

    இதனால் வடகிழக்கு பருவ மழை கை கொடுக்குமா? சம்பா சாகுபடியை காப்பாற்ற முடியுமா? என்று ஏக்கத்தில் விவசாயிகள் உள்ளனர்.

    Next Story
    ×