search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லித்தோப்பு தொகுதியில் ஓம்சக்தி சேகர் 4-வது முறையாக போட்டி
    X

    நெல்லித்தோப்பு தொகுதியில் ஓம்சக்தி சேகர் 4-வது முறையாக போட்டி

    ஓம்சக்தி சேகர் அ.தி.மு.க. சார்பில் நெல்லித்தோப்பு தொகுதியில் 4-வது முறையாக போட்டியிடுகிறார்.

    புதுச்சேரி:

    சட்டமன்ற தேர்தலில் போட்டியிடாத நாராயண சாமி புதுவை மாநில முதல்- அமைச்சராக உள்ளார்.

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி 6 மாத காலத்திற்குள் எம்.எல்.ஏ.வாக வேண்டும். இதற்கு வசதியாக நெல்லித்தோப்பு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான் குமார் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    நெல்லித்தோப்பு தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் (நவம்பர்) 19-ந் தேதி நடக்கிறது. இடைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் முதல்-அமைச்சர் நாராயணசாமி போட்டியிட உள்ளார்.

    நாராயணசாமியை எதிர்த்து போட்டியிடும் அ.தி. மு.க. வேட்பாளராக ஓம்சக்தி சேகர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

    ஓம்சக்தி சேகர் அ.தி.மு.க. சார்பில் நெல்லித்தோப்பு தொகுதியில் 4-வது முறையாக போட்டியிடுகிறார். இவர் முதல் முறையாக கடந்த 2006-ம் ஆண்டு தி.மு.க. முன்னாள் முதல்-அமைச்சர் ஜானகிராமனை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    2-வது முறையாக மீண்டும் 2011-ம் ஆண்டு நெல்லித்தோப்பு தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ஓம்சக்தி சேகர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து 3-வது முறையாக கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு ஓம்சக்தி சேகர் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

    ஓம்சக்தி சேகரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ஜான் குமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மாநிலத்திலேயே அதிகபட்சமாக 12 ஆயிரத்து 141 வாக்குகள் அதிகம் பெற்று ஜான்குமார் வெற்றி பெற்றார்.

    ஜான்குமார் கடந்த சட்ட மன்ற தேர்தலில் நெல்லித் தோப்பு தொகுதியில் பெற்ற வாக்குக்காக 18 ஆயிரத்து 506 ஆகும். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஓம்சக்தி சேகர் 6 ஆயிரத்து 365 வாக்குகளே பெற்றார்.

    முன்னாள் ராணுவ வீரரான ஓம்சக்தி சேகர் புதுவை அரசு ஊழியராகவும் பணி புரிந்தவர். இவர் கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை ஜெயலலிதா பேரவை மாநில செயலாளராகவும் இருந்தார். நிலவணிகம் செய்து வருகிறார்.

    Next Story
    ×