search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விழுப்புரத்தில் வெடிகுண்டு வீசி பா.ஜனதா நிர்வாகி கொலை: புதுவை கூலிப்படை கைவரிசையா?
    X

    விழுப்புரத்தில் வெடிகுண்டு வீசி பா.ஜனதா நிர்வாகி கொலை: புதுவை கூலிப்படை கைவரிசையா?

    விழுப்புரத்தில் வெடிகுண்டு வீசி பா.ஜனதா நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் புதுவையைச் சேர்ந்த கூலிப்படையினருக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா குயிலாப்பாளையத்தை சேர்ந்தவர் ஜனா என்கிற ஜனார்த்தனன்(வயது 31). இவர் விழுப்புரம் கிழக்கு மாவட்ட பா.ஜனதா இளைஞர் அணி தலைவராக இருந்து வந்தார்.

    பிரபல ரவுடியான இவர் மீது கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. ஜனார்த்தனன் குயிலாப்பாளையத்தை சேர்ந்த தாதா மணிகண்டனின் ஆதரவாளராக இருந்து வந்தார்.

    கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருக்கோவிலூரை சேர்ந்த ஆசிரியர் செல்லபாண்டியன் என்பவரை காரில் கடத்தி சென்று பல லட்ச ரூபாய் பறித்த வழக்கில் மணிகண்டன், ஜனார்த்தனன் மற்றும் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு தாதா மணிகண்டன் ஆஜராகவில்லை. ஜனார்த்தனன், புதுவை ஆட்டுப்பட்டி சுரேஷ் உள்பட 10 பேர் ஆஜரானார்கள்.

    கோர்ட்டில் ஆஜராகிவிட்டு ஜனார்த்தனன் தனது ஆதரவாளர்களுடன் மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். விழுப்புரம் ரெயில்வே மேம்பாலம் அருகே வந்தபோது ஜனார்த்தனன் மீது மர்மகும்பல் நாட்டு வெடிகுண்டை வீசி அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் ஜனார்த்தனன் அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார். இதைதடுக்க வந்த சுரேசும் தாக்கப்பட்டார். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

    இதுகுறித்து விழுப்புரம் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த சுரேசை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஜனார்த்தனன் எதற்காக கொலை செய்யப்பட்டார்? அவரை கொன்ற கொலையாளிகள் யார்? என்பதை கண்டுபிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நரேந்திரன் நாயர் உத்தரவின் பேரில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.

    விழுப்புரம் மாவட்டம் குயிலாப்பாளையத்தில் 1996-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் தாதா மணிகண்டனும், அவரை எதிர்த்து அதே பகுதியை சேர்ந்த பூபாலனும் போட்டியிட்டனர். இருவரும் 2 அணியாக செயல்பட்டு வந்தனர்.

    பின்னர் பூபாலன் எந்த பிரச்சினைக்கும் செல்லாமல் ஒதுங்கி இருந்து வந்தார். இதையடுத்து குயிலாபாளையத்தில் ராஜ்குமார் என்பவர் தலைமையில் புதிய கோஷ்டி உருவானது.

    இதையடுத்து தாதா மணிகண்டன் தரப்பினருக்கும் ராஜ்குமார் தரப்பினருக்குமிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தாதா மணிகண்டனின் தம்பி ஆறுமுகத்தை ராஜ்குமார் தரப்பினர் கொலை செய்தனர்.

    இதனால் கோபம் அடைந்து ராஜ்குமார் தரப்பை சேர்ந்த கருணா, மதி ஆகியோரை தாதா மணிகண்டன் தரப்பினர் கொன்றனர். இதைத்தொடர்ந்து மணிகண்டன் தரப்பை சேர்ந்த ராஜேந்திரனை ராஜ்குமார் தரப்பினர் பதிலுக்கு கொலை செய்தனர்.

    இருதரப்பினருக்குமிடையே தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் 8 கொலைகள் நடந்தன. இந்தநிலையில் தாதா மணிகண்டன் ஆதரவாளரான ரவுடி ஜனார்த்தனன் நேற்று வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே ராஜ்குமார் தரப்பினர் பழிக்குபழி வாங்கும் விதமாக ஜனார்த்தனனை கொலை செய்தார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜ்குமார் ஒரு வழக்கில் கைதாகி தற்போது ஜெயிலில் உள்ளார். அவர் அங்கிருந்து திட்டமிட்டு கூலிப்படையை ஏவி இந்த கொலையை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

    இந்த கொலை சம்பவத்தில் புதுவையைச் சேர்ந்த கூலிப்படையினருக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.

    ஜனார்த்தனன் தற்போது குயிலாப்பாளையம் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு மனுதாக்கல் செய்திருந்தார். எனவே அவரது வளர்ச்சி பிடிக்காதவர்கள் ஜனார்த்தனனை கொலை செய்தார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    Next Story
    ×