search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க. நிர்வாகி தற்கொலை: உடலை அடக்கம் செய்யாமல் உறவினர்கள் போராட்டம்
    X

    அ.தி.மு.க. நிர்வாகி தற்கொலை: உடலை அடக்கம் செய்யாமல் உறவினர்கள் போராட்டம்

    முத்துப்பேட்டை அருகே அ.தி.மு.க. தொழிற்சங்க பொருளாளர் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யும் வரை உடலை அடக்கம் செய்ய மாட்டோம் என உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள செம்படவன் காடு பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (45). இவர் பட்டுக்கோட்டை அரசு போக்குவரத்து கழகத்தில் கணக்காளராக வேலை பார்த்து வந்தார்.

    மேலும் அ.தி.மு.க. தொழிற்சங்கத்தில் பொருளாளராகவும இருந்தார். சம்பவத்தன்று நாகராஜன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அவர் எழுதி வைத்திருந்த டைரியில் பஸ் டெப்போ கிளை மேலாளர் மற்றும் 2 பேர் தான் தனது தற்கொலைக்கு காரணம் என குறிப்பிட்டு இருந்தார். இது குறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் நாகராஜன் உடல் பரிசோதனைக்கு பின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    எடையூர் அருகே நாகராஜன் உடல் வந்த ஆம்புலன்சை தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் உறவினர்கள் மறித்தனர். போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர்.

    இதையடுத்து மங்களூர் பைபாஸ் சாலையில் ஆம்புலன்ஸ் வந்து கொண்டிருந்த போது உடலுடன் வந்த உறவினர் பாஸ்கர் அதில் இருந்து இறங்கி போராட்டம் நடத்தினார்.

    பின்னர் நாகராஜன் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனை பெற்றுக் கொண்ட உறவினர்கள் டெப்போ மானேஜர் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்யும் வரை உடலை அடக்கம் செய்ய மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்தனர்.

    அவர்களிடம் டி.எஸ்.பி.(பொறுப்பு) தினகரன், இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். ஆனால் பலன் கிடைக்கவில்லை.

    இதனை தொடர்ந்து செம்படவன் காடு பைபாஸ் சாலையில் மறியல் செய்ய முயன்றவர்கள் போலீசார் தடுத்து நிறுத்தினர். தற்கொலை செய்து கொண்ட அரசு போக்குவரத்து கழக ஊழியர் உடலை அடக்கம் செய்யாமல் போராட்டம் நடத்தி வரும் சம்பவம் முத்துப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×