search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேலும் 1 வாரம் தங்கி இருப்பார்: ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து மருத்துவ பரிசோதனை
    X

    மேலும் 1 வாரம் தங்கி இருப்பார்: ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து மருத்துவ பரிசோதனை

    முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதால் மேலும் ஒரு வாரம் மருத்துவமனையில் தங்கியிருப்பார் என தெரிகிறது.
    சென்னை:

    முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 22-ந்தேதி இரவு உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அவருக்கு காய்ச்சல், நீர் சத்து இழப்பு ஏற்பட்டது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதனால் காய்ச்சல் உடனடியாக குணப்படுத்தப்பட்டது. வழக்கமான உணவுகளை சாப்பிட்டார்.

    ஜெயலலிதாவுக்கு எடுக்கப்பட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனை முடிவுகளை வைத்து அவரது உடல் நிலையை டாக்டர்கள் தினமும் கண்காணித்து வந்தனர். இதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.

    இதனால் ஆஸ்பத்திரியில் இருந்தபடியே வழக்கமான அலுவல் பணிகளை கவனித்தார்.

    உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல், பொதுத்துறை ஊழியர்களுக்கான போனஸ் உள்ளிட்ட அறிவிப்புகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபடியே வெளியிட்டார்.

    காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக இரு மாநில முதல்வர்கள் பேச்சு வார்த்தை குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆலோசனையும் நடத்தினார்.

    இந்த நிலையில் நேற்று மாலையில் இருந்து ஜெயலலிதா உடல்நிலை பற்றி தேவையற்ற வதந்திகள் பரவியது.

    மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து பலர் சென்னையில் தொடர்பு கொண்டு ஜெயலலிதாவின் உடல்நிலையை கேட்டறிந்தனர்.

    ஆனாலும் வதந்தி காட்டுத்தீ போல் பரவியதால் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் இருந்து நேற்றிரவு 10.30 மணிக்கு அதிகாரபூர்வ செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது.

    அப்பல்லோ ஆஸ்பத்திரியின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் சுப்பையா விஸ்வநாதன் வெளியிட்டிருந்த அந்த மருத்துவ அறிக்கையில் கூறி இருந்ததாவது:-

    காய்ச்சல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் நல்ல பலன் கிடைத்துள்ளது. தேவையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    அவர் பூரண நலம் அடையும் வகையிலான சிகிச்சைக்காக மேலும் சில நாட்கள் ஆஸ்பத்திரியில் தங்கி இருக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.





    முதல்-அமைச்சர் ஜெயலலிதா பூரண குணமடைய அப்பல்லோ மருத்துவமனை முன்பு பூஜையில் ஈடுபட்ட சாமியார்.



    இதே போல் அ.தி.மு.க. வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருந்ததாவது:-

    முதல்-அமைச்சர் ஜெயலலிதா பூரண குணமடைந்து நலமுடன் உள்ளார். மருத்துவர் ஆலோசனைப்படி, மருத்துவமனையில் ஓய்வெடுத்து வருகிறார். மருத்துவமனையில் அரசு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையை கேட்டறியும் ஆவலில் ஏராளமான கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் தினமும் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்து சென்ற வண்ணம் உள்ளனர்.

    இதனால் ஆஸ்பத்திரி முன்பு எப்போதும் தொண்டர்கள் கூட்டம் நிற்கிறது.

    முதல்-அமைச்சர் ஜெயலலிதா பூரண குணம் அடைந்து விட்டாலும் தேவையான மருத்துவ பரிசோதனைகள் அவ்வப்போது எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் அவர் இன்னும் 1 வாரம் ஆஸ்பத்திரியிலேயே தங்கி இருப்பார் என்று ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    Next Story
    ×