search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பலத்த மழை: மணல் மூட்டைகள் உடைந்ததால் ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறியது
    X

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பலத்த மழை: மணல் மூட்டைகள் உடைந்ததால் ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறியது

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்ததால் இலப்ப கொட்டை ஏரியில் மதகில் அடைத்து வைத்திருந்த மணல் மூட்டைகள் உடைந்து தண்ணீர் வெளியேறி, வயல்களில் வெள்ளம் சூழ்ந்ததால் நெற்பயிர்கள் சேதமடைந்தது.
    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மற்றும் சுற்று வட்டார பகுதியில் இன்று அதிகாலை 4 மணி அளவில் பலத்த மழை பெய்தது. மேலும், மத்தூர் பகுதியில் இடைவிடாது பெய்த இந்த மழையினால் விவசாய நிலங்களில் மழை நீர் குளம்போல் தேங்கியது.

    சாலை ஓரங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மாரட அள்ளி, அத்திகானூர், பூச்சூர், கண்ணன்ட அள்ளி, வாலிபட்டி உள்ளிட்ட பகுதிகிளில் மழை பெய்தது. தொடர்ந்து 3 மணி நேரம் மழை பெய்தது. மேலும் கிருஷ்ணகிரி மற்றும் காவேரிப்பட்டணம், போச்சம்பள்ளி ஆகிய பகுதிகளில் விட்டு, விட்டு லேசான மழை பெய்தது.

    இதனால் போச்சம் பள்ளி அருகே உள்ள கீழ்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட இலப்ப கொட்டை ஏரியில் தண்ணீர் நிரம்பியது. தண்ணீர் முழுவதும் நிரம்பி உள்ளதால் ஏரி கடல் போல் காட்சி அளித்து வருகிறது.

    இந்த ஏரி சுமார் 40 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேற்றுவதற்கு ஒரே ஒரு மதகு தான் உள்ளது. 35 ஆண்டு காலமாக இந்த மதகுக்கு ‌ஷட்டர் கதவு இல்லை. இதனால் மதகு வழியாக தண்ணீர் வீணாக வெளியேறி வந்தது.

    இதையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஒன்று சேர்ந்து மதகில் மலைபோல் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து தண்ணீர் வீணாக வெளியேறுவதை தடுத்தனர்.

    விவசாயத்துக்கு தேவைப்படும் காலங்களில் மட்டும் மணல் மூட்டைகளை அப்புறப்படுத்தி, தண்ணீரை திறந்து விட்டு வந்தனர்.

    இந்த ஏரியின் சற்று அருகில் பாரூர் பெரிய ஏரி உள்ளது. இந்த பாரூர் பெரிய ஏரியில் இருந்து முதல் நெல் போக சாகுபடி செய்யவதற்காக தண்ணீர் திறந்து விட்டுள்ளனர். கால்வாய் மூலமாக இந்த தண்ணீர் விவசாய நிலங்களை சென்றடைகிறது.

    இந்த கால்வாயில் இருந்தும் நீர் கசிந்துள்ள காரணத்தினால் இலப்ப கொட்டை ஏரி மேலும் நிரம்பி, மதகில் அடைத்து வைத்திருந்த மணல் மூட்டைகளை உடைத்துக் கொண்டு தண்ணீர் வெளியேறி வருகிறது.

    இதனால் மதகின் அருகில் நெல் சாகுபடி செய்திருந்த விவசாய நிலத்தில் தண்ணீர் புகுந்தது. சுமார் 20 ஏக்கர் பரபளவில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. நெற்பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளன.



    இது பற்றிய தகவல் அறிந்ததும், போச்சம்பள்ளி தாசில்தார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார்.

    அப்போது அப்பகுதி விவசாயிகள், தண்ணீர் வெளியேற்றப்படவில்லை என்றால் நெற்பயிர்கள் முழுவதும் அழுகி விடும். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மதகில் இரும்பு ‌ஷட்டர் கதவை பொருத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    Next Story
    ×