search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராணிப்பேட்டை அருகே கடன் தொல்லையால் 2 மகன்களை கொன்று தந்தை தற்கொலை
    X

    ராணிப்பேட்டை அருகே கடன் தொல்லையால் 2 மகன்களை கொன்று தந்தை தற்கொலை

    ராணிப்பேட்டை அருகே கடன் தொல்லையால் 2 மகன்களை வி‌ஷம் கொடுத்து கொன்று தந்தை தற்கொலை செய்த கொண்டார்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அருகே உள்ள புளியங்கண்ணுவை சேர்ந்தவர் வீரராகவன் (வயது 40). அந்த பகுதியில் மளிகைக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி ஈஸ்வரி (28). இவர்களுக்கு தினேஷ் குமார் (8), விக்னேஷ் (7) ஆகிய 2 மகன்கள். தினேஷ்குமார் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பும், விக்னேஷ் அதே பள்ளியில் 3-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

    மனைவி, மகன்களுடன் வீரராகவன் அந்த பகுதியை சேர்ந்த அண்ணாமலை என்பவரது வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார். இன்று காலை இவர்கள் வசித்த வீடு திறந்து கிடந்தது. இதனை பக்கத்து வீட்டை சேர்ந்த பாஸ்கரன் என்பவர் பார்த்தார். வீடு திறந்து கிடப்பதும், வீட்டில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததும் பாஸ்கரனுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

    எனவே அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தார். அங்கு ஒரு அறையில் வீரராகவன், ஈஸ்வரி, தினேஷ்குமார், விக்னேஷ் ஆகியோர் மயங்கிய நிலையில் கிடந்தனர். அவர்கள் அருகில் வி‌ஷ பாட்டில் கிடந்தது.

    எனவே தினேஷ்குமார், விக்னேஷ் ஆகியோருக்கு வி‌ஷம் கொடுத்து வீரராகவனும், ஈஸ்வரியும் குடித்திருப்பது தெரியவந்தது. இதில் வீரராகவன் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். மற்ற 3 பேரும் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தனர். உடனடியாக அக்கம் பக்கத்தினர் சேர்ந்து 3 பேரையும் மீட்டு ராணிப்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி தினேஷ்குமார் பரிதாபமாக இறந்தார். விக்னேஷ் ஆபத்தான நிலையில் இருந்தார். எனவே அவரை மேல் சிகிச்சைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு விக்னேஷை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ஈஸ்வரிக்கு ராணிப்பேட்டை தனியார் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    வீரராகவன் புளியங்கண்ணுவுக்கு வரும் முன்பு சென்னை பெரம்பூரில் போட்டோ ஸ்டுடியோ வைத்திருந்தார். சமீபத்தில் தான் அவர் இங்கு வந்து மளிகைக்கடை வைத்தார்.

    அவர் சிலரிடம் ரூ. 3 லட்சம் வரை கடன் பெற்றிருந்ததாக தெரிகிறது. வீரராகவனுக்கு மது அருந்தும் பழக்கமும் இருந்ததாக தெரிகிறது. இது போன்ற காரணங்களால் கடன் பெற்ற பணத்தை திருப்பி கொடுக்க முடியாத நிலையில் வீரராகவனின் வாழ்க்கை இருந்தது.

    ஆனால் பணம் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு நச்சரித்துக்கொண்டே இருந்தனர். இது வீரராகவனுக்கு தர்ம சங்கடத்தையும், மன உளைச்சலையும் கொடுத்தது. இந்த கடன் தொல்லையால் கடந்த சில நாட்களாக வீரராகவனும், அவரது மனைவியும் சோகமாக இருந்தனர். இதனால்தான் அவர்கள் மகன்களுக்கு வி‌ஷம் கொடுத்து கொன்று தாங்களும் வி‌ஷம் குடித்தது தெரியவந்தது.

    இது குறித்து ராணிப்பேட்டை சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும், பரிதாபத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×