search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேடந்தாங்கல் சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகள் குவிந்தன
    X

    வேடந்தாங்கல் சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகள் குவிந்தன

    வேடந்தாங்கல் சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகள் முன்கூட்டியே வந்துள்ளதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் அவற்றை பார்வையிட வந்தபோது அனுமதி வழங்கப்படாததால் ஏமாற்றம் அடைந்தனர்.
    மதுராந்தகம்:

    மதுராந்தகம் அருகே உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் வடகிழக்கு பருவ மழைக்கு பின்னர் அக்டோபர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு வெளி நாடுகளில் இருந்து 32 வகையான பறவைகள் தங்கி குஞ்சு பொறித்து மீண்டும் சொந்த இடங்களுக்கு செல்வது வழக்கம்.

    தற்போது பெய்து வரும் மழையால் உத்திரமேரூர், கிளியாற்று ஏரியில் இருந்து வேடந்தாங்கல் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் வேடந்தாங்கல் சரணாலயப் பகுதி பச்சைபசேல் என்று பறவைகள் தங்கும் சீதோ‌ஷன நிலைக்கு மாறி உள்ளது.

    இதையடுத்து இலங்கை, பாகிஸ்தான், பர்மா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஏராளமான பறவைகள் வேடந்தாங்கல் சரணாலயத்தில் குவிந்துள்ளன.

    மரத்தின், உச்சியில் பறவைகள் அமர்ந்து இருப்பது கண்கொள்ளா காட்சியாக உள்ளது. இதில் நத்தை கொத்தி நாரை, சாம்பல் அரிவாள் மூக்கன், வெள்ளை அரிவாள் மூக்கன், வக்கா, நீர் காகம், பாம்பு தாரா, மிளிர் உடல் அரிவாள் மூக்கன், சாட்பல் நாரை ஆகிய பறவைகள் முக்கியமானவை. மொத்தம் 2500 பறவைகள் தற்போது சரணாலயத்தில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சுற்றுலா பயணிகளுக்கு அக்டோபர் மாத இறுதியில் பறவைகள் சரணாலயத்தை பார்க்க அனுமதி வழங்கப்படும். இப்போது முன்கூட்டியே பறவைகள் வந்துள்ளதால் ஏராளமானோர் அவற்றை பார்வையிட வந்து செல்கின்றனர். ஆனால் அனுமதி வழங்கப்படாததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து வனச்சரக கோட்ட அலுவலர் சுப்பையாவிடம் கேட்ட போது வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு முன் கூட்டியே பறவைகள் வரத் தொடங்கி உள்ளன. இதுபற்றி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உள்ளோம். சுற்றுலா பயணிகள் பார்வையிட விரைவில் அனுமதி வழங்கப்படும் என்றார்.
    Next Story
    ×