search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவள்ளூர் மாவட்டத்தில் ரே‌ஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தீவிரம்
    X

    திருவள்ளூர் மாவட்டத்தில் ரே‌ஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தீவிரம்

    திருவள்ளூர் மாவட்டத்தில் ரே‌ஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்று வருகின்றது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-

    திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரே‌ஷன் கடைகளில் ‘POINT OF SALE’ என்ற இயந்திரம் பொருத்தப்பட்டு ரே‌ஷன் கடைகளில் உள்ள அனைத்து குடும்ப அட்டைகளும், இயந்திரத்தில் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகின்றது.

    இந்த எந்திரத்தில் பதிவு செய்ய குடும்ப அட்டைகளுடன் குடும்பத் தலைவர் கைபேசி எண் மற்றும் குடும்ப நபர்கள் அனைவருடைய ஆதார் எண் போன்றவை குடும்ப அட்டையில் இயந்திரத்தில் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகின்றது.

    அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் தங்களது ஆதார் எண்களை குடும்ப அட்டையுடன் இணைக்கும் பணிக்கு ரே‌ஷன் கடை ஊழியர்களுக்கு முழு ஒத்துழைப்பினை வழங்கி தங்களது ஆதார் எண்ணை தங்கள் குடும்ப அட்டையுடன் இணைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    மேலும் ரே‌ஷன் கடைக்கு சென்று வரிசையில் நிற்க முடியாதவர்கள் ஸ்மார்ட் போனில் கூகுள் பிளே ஆப்ஸ்ல் இலவச செயலியை பதிவிறக்கம் செய்தால், அது நமது ஸ்மார்ட்போன் ஸ்கிரீனில் வந்துவிடும். பின் அதற்குள் செல்ல, ஏற்கெனவே ரே‌ஷன் கடையில் பதிவு செய்யப்பட்டுள்ள குடும்பத் தலைவரின் செல்போன் எண்ணை உள்ளீடு செய்தால், உடனே ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய எஸ்.எம்.எஸ். நமது தொலை பேசிக்கு வரும்.

    அந்த எண்களை செயலியில் இட்டவுடன் செயலி திறக்கப்படும். அதில் ஆதார் எண்ணை பதிவு செய்யும் இடத்தை தொட்டவுடன் ஸ்கேன் செய்ய ஏதுவாக கேமரா திறக்கும் பின் நமது ஸ்மார்ட் போன் கேமரா முன்பு நம் ஆதார் அட்டையில் உள்ள (கருப்பு புள்ளிகள் நிறைந்த பெட்டி போன்ற படத்தை) காட்டினால் ஸ்கேன் செய்யப்பட்டு நமது ஆதார் எண் திரையில் தோன்றும்.

    உடனே நாம் “சமர்ப்பி” என்ற பட்டனை அழுத்தினால் நமது ஆதார் எண் பதிவாகிவிடும். பதிவான ஆதார் எண் அதில் தோன்றும். முதலில் குடும்ப தலைவர் ஆதார் அட்டையும், அதன்பின் ரே‌ஷன் கார்டில் உள்ள வரிசைப்படி குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டைகளையும் வரிசையாக பதிவு செய்ய வேண்டும். இது மிக எளிதான செயல் விரைவாக பதியப்பட்டுவிடும்.

    இந்த செயலியின் மூலம் நமது ரே‌ஷன் கார்டுக்குரிய பல்வேறு செயல்களை வீட்டில் இருந்தே நாம் கண்காணிக்கலாம். விவரம் தெரிந்தவர்கள் தாமும் பயன்பெற்று மற்றவர்களுக்கும் பதிவு செய்து கொடுக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×