search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்தில் சிக்கிய கார் நொறுங்கி கிடக்கும் காட்சி.
    X
    விபத்தில் சிக்கிய கார் நொறுங்கி கிடக்கும் காட்சி.

    புதுவை அருகே கார் மீது லாரி மோதி விபத்து: தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி

    புதுவை அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.
    சேதராப்பட்டு:

    புதுவை கிருமாம்பாக்கத்தில் தனியார் மருத்துவ கல்லூரி ஒன்று உள்ளது.

    இந்த கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்கும் 4 மாணவர்கள் இன்று அதிகாலை புதுவையில் இருந்து கார் மூலம் சென்னை நோக்கி சென்றனர். அதிகாலை 2 மணியளவில் அந்த கார் புதுவை அருகே உள்ள தமிழக பகுதியான பிள்ளைச்சாவடியில் சென்று கொண்டு இருந்தது.

    அப்போது எதிரே சென்னையில் இருந்து புதுவை நோக்கி சரக்கு லாரி ஒன்று வந்து கொண்டு இருந்தது. கண் இமைக்கும் நேரத்தில் அந்த லாரி கார் மீது பயங்கரமாக மோதியது.

    இதில், கார் அப்பளம் போல் நொறுங்கியது. இடிபாடுகளுக்குள் சிக்கிய 3 மாணவர்கள் உடல் நசுங்கி அந்த இடத்திலேயே உயிர் இழந்தனர். ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார்.

    இதுபற்றி ஆரோவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பிரதீப்குமார், சப்-இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் ஆகியோர் விரைந்து சென்றனர்.

    அவர்கள் காருக்குள் சிக்கி கிடந்தவர்களை மீட்க முயற்சித்தனர். ஆனால், கார் நொறுங்கி ஒன்றோடு ஒன்று பின்னி கிடந்தது. இதனால் அவர்களை வெளியே எடுப்பதற்கு மிகவும் சிரமம் ஏற்பட்டது. இதனால் கடப்பாரையால் நெம்பி அவர்களை வெளியே எடுத்தனர்.

    இறந்து போன 3 மாணவர்கள் உடல்களும் அங்குள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டன.

    காயம் அடைந்தவர் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    1. தங்ககுமரன் (வயது 26), தந்தை பெயர் தங்க நாடார், சித்த வைத்தியர். கன்னியாகுமரி மாவட்டம் தெங்கம்புதூரை சேர்ந்தவர்.

    2. அரவிந்த் (24), சென்னை கொளத்தூர். தந்தை பெயர் அசோக்குமார், ரியல் எஸ்டேட் அதிபர்.

    3. அரிபிரசாத், (24), சென்னை மத்திய கைலாஷ், தந்தை பெயர் அனந்தராமன், அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்.

    காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர் பெயர் பாலகிருஷ்ணன் (23), வேலூரை சேர்ந்தவர்.

    இவர்கள் அனைவரும் மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வந்தனர். விபத்து பற்றி அவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் புதுவை விரைந்துள்ளனர்.
    Next Story
    ×