search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலையில் புதுகோணத்தில் விசாரணை
    X

    இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலையில் புதுகோணத்தில் விசாரணை

    இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலையில் கொலையாளிகளை பிடிக்க முதலில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கூடுதலாக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விசாரணை புதுகோணங்களில் முடுக்கி விட்டுள்ளனர்.
    கோவை:

    கோவை மாவட்ட இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கடந்த 22-ந் தேதி கொலை செய்யப்பட்டார்.

    இவருக்கு ஏற்கனவே மிரட்டல்கள் இருந்த வந்தது. மேலும், சசிகுமார் இந்து முன்னணி தொடர்பான அனைத்து செய்திகளையும் பேஸ்புக்கில் பதிவு செய்து வந்தார். இதை பிடிக்காதவர்கள் அவரை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் விசாரணையை தொடங்கினர்.

    சசிகுமார் மொபட்டில் சென்ற மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளின் அடிப்படையிலும், சசிகுமார் மரண தருவாயில் கொலையாளிகள் பற்றி கூறிய தகவல்களின் அடிப்படையிலும் விசாரணை நடத்தப்பட்டது.

    கடந்த 13-ந் தேதி கோவை ஜெயிலில் ஒரு கைதியிடம் இருந்து செல்போன் கைப்பற்றப்பட்டிருந்தது. அந்த செல்போன் அழைப்புகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. மேலும், சசிகுமார் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தி வந்த செல்போனில் இருந்து யார்-யாருக்கு பேசி உள்ளார்? அவரது செல்போனுக்கு வந்த அழைப்புகள் என்னென்ன? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    கொலை நடந்து 5 நாட்கள் ஆகியும் கொலையாளிகள் குறித்து உறுதியான எந்த தகவலும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. எனவே தற்போது போலீசார் விசாரணை கோணங்களை விரிவுபடுத்தி உள்ளனர்.

    கொலையாளிகளை பிடிக்க முதலில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கூடுதலாக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விசாரணை புதுகோணங்களில் முடுக்கி விட்டுள்ளனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    சசிகுமார் கொலையில் செல்போன் அழைப்புகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கிடைத்த காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது. அதேநேரம் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    சசிகுமாருக்கு ஏற்கனவே மிரட்டல் விடுத்தவர்கள் யார்-யார்? சசிகுமாருக்கு தொழில் ரீதியாக ஏதாவது பிரச்சினைகள் இருந்ததா? அவருக்கு யாருடனெல்லாம் முன்விரோதம் இருந்தது? என்பது உள்பட 5 கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சசிகுமார் கொலையை தொடர்ந்து பதட்டம் நிலவியதால் கடந்த 23-ந் தேதி கூடுதல் டி.ஜி.பி. திரிபாதி கோவைக்கு வந்து போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தார். இதனால் மறுநாளே கோவையில் இயல்பு நிலை திரும்பியது.

    இன்று 5-வது நாளாக கோவையில் முகாமிட்டுள்ள ஏ.டி.ஜி.பி. திரிபாதி போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சசிகுமார் கொலையில் தனிப்படையினரின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்த அவர் கொலையாளிகளை கண்டு பிடிப்பதற்கான வழிமுறைகள் குறித்தும், தொடர்ந்து அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்க செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனைகளை வழங்கி உள்ளார்.

    இதற்கிடையே கோவை மாநகரில் நீண்ட காலமாக பணியாற்றி தற்போது வெளி மாவட்டங்களில் பணியாற்றி வரும் போலீஸ் அதிகாரிகள் இந்த வழக்கு விசாரணைக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர்.

    அவர்கள் தனிப்படை போலீசாருடன் இணைந்து கொலையாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
    Next Story
    ×