search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபடியே அரசு அலுவல்களை ஜெயலலிதா கவனித்தார்
    X

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபடியே அரசு அலுவல்களை ஜெயலலிதா கவனித்தார்

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபடியே அரசு அலுவல்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா கவனித்து வருகிறார்.
    சென்னை:

    அ.தி.மு.க. பொது செயலாளரும், தமிழக முதல்-அமைச்சருமான ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 22-ந்தேதி இரவு சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைவு இருப்பது கண்டறியப்பட்டது.

    இதையடுத்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். டாக்டர்களின் கண்காணிப்பிலேயே அவருக்கு அவ்வப்போது பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜெயலலிதா வழக்கம்போல் உணவு சாப்பிடுகிறார்.

    ஜெயலலிதாவுக்கு 5-வது நாளாக நேற்று ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஏற்கனவே எடுக்கப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையில் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் சீரான இடைவெளியில் டாக்டர்கள் குழுவினர் அவருடைய உடல்நிலையை பரிசோதித்து வருகின்றனர்.

    சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் உடன் தங்கியிருந்து ஜெயலலிதாவை கவனித்து வருகின்றனர். சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க.வை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் வழக்கம்போல் நேற்றும் ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தனர். அவர்கள் ஜெயலலிதா உடல்நிலை குறித்து ஆவலோடு கேட்டறிந்து வருகின்றனர்.

    ஆஸ்பத்திரி உள்ளே சென்று விட்டு வெளியே வரும் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகளிடம் வெளியே திரண்டு நின்ற தொண்டர்கள் சூழ்ந்துகொண்டு ஜெயலலிதாவின் உடல்நிலையை ஆர்வத்தோடு கேட்டு அறிந்து வருகின்றனர். ஜெயலலிதா உடல்நலம் பூரண குணம் அடையவேண்டும் என்று அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கோவில்களில் பூஜை செய்து அந்த பிரசாதத்தையும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்திருந்தனர்.

    அப்பல்லோ ஆஸ்பத்திரியின் முன்பு அ.தி.மு.க.வை சேர்ந்த தொண்டர் ஒருவர் கையில் கற்பூரம் ஏந்தியும், அ.தி.மு.க. பேச்சாளர் ஒருவரின் 2 குழந்தைகள் ஜெயலலிதா உருவப்படத்தை வைத்துக்கொண்டு கற்பூரம் ஏந்தியும் அவர் விரைவில் பூரண குணம் அடையவேண்டும் என்று பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

    ஜெயலலிதா, தான் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தாலும் கூட அரசு அலுவலக பணிகள் ஒருபோதும் சுணக்கம் அடையக்கூடாது என்பதில் கண்டிப்போடு உள்ளார். இதனால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுக்கொண்டே நேற்று அவர் அரசு அலுவலக முக்கிய கோப்புகளை பார்வையிட்டு கையெழுத்திட்டார்.

    இதேபோல காவிரி பிரச்சினை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்தும் அவர் அரசு உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா வேகமாக குணம் அடைந்து வருகிறார். இன்னும் ஓரிரு தினங்களில் அவர் சிகிச்சை முடிந்து பூரண உடல்நலத்துடன் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஜெயலலிதா வீடு திரும்பும் தேதி இன்று (செவ்வாய்க்கிழமை) அல்லது நாளைக்குள் முடிவு செய்யப்படலாம் என்று ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.
    Next Story
    ×