search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுடுகாட்டுக்கு பாதை வசதி கேட்டு உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு
    X

    சுடுகாட்டுக்கு பாதை வசதி கேட்டு உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு

    அரக்கோணம் அருகே சுடுகாட்டுக்கு பாதை வசதி கேட்டு கிராம மக்கள் பரபரப்பு சுவரொட்டி ஒட்டியுள்ளனர்.
    அரக்கோணம்:

    அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய பகுதியை சேர்ந்த காவனூர் பகுதியில் ஆதிதிராவிடர் காலனி, அம்பேத்கர் தெருவில் தனிநபர் ஒருவர் 20 அடி நீளம், 6 அடி உயரத்திற்கு சுவர் எழுப்பி உள்ளார். இந்த சுவர் இருப்பதால் சுடுகாட்டுக்கு பிணத்தை எடுத்து கொண்டு செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    ஊரை சுற்றி கொண்டு வேறு ஒரு பாதையில் சுடுகாட்டுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஆகவே கட்டப்பட்டுள்ள சுவரை இடித்து தரவேண்டும் என காவனூர் ஊராட்சி சார்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதைத்தொடர்ந்து விசாரணைக்கு பின்னர் கோர்ட்டு அந்த சுவற்றை இடிக்க உத்தரவிட்டது. ஆனால் இன்றுவரை சுவர் இடிக்கப்படவில்லை.

    சுவரை அகற்றக்கோரி சாலை மறியல் போராட்டம் சில மாதங்களுக்கு முன்பாக நடைபெற்றது. அப்போது வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தேவையான நடவடிக்கை எடுப்பதாக கூறியதின் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.

    அதன்பின்னர் ஊராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மாவட்ட வருவாய் துறை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காவனூர் பொதுமக்கள் சுடுகாட்டிற்கு செல்லும் வழியில் கட்டப்பட்டுள்ள சுவற்றை இடிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கடந்த 3 வருடங்களாக போராடியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக்கூறி உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக முடிவு செய்து அரக்கோணம் பகுதியில் சுவரொட்டிகளை ஒட்டி உள்ளனர். இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    எனவே, ராணிப்பேட்டை உதவி கலெக்டர் முருகேசன் இந்த பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
    Next Story
    ×