search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மகன் ஆசைப்பட்டதால் அவனை நாட்டுக்காக கொடுத்து விட்டேன்:  பலியான வீரரின் தந்தை
    X

    மகன் ஆசைப்பட்டதால் அவனை நாட்டுக்காக கொடுத்து விட்டேன்: பலியான வீரரின் தந்தை

    மகன் ஆசைப்பட்டதால் அவனை நாட்டுக்காக கொடுத்து விட்டதாக நக்சலைட்கள் தாக்குதலில் பலியான வீரரின் தந்தை உருக்கமான பேட்டி அளித்துள்ளார்.
    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் கெங்கவல்லியை அடுத்த நல்லூரை சேர்ந்தவர் சி.ஆர்.பி.எப். வீரர் திருமுருகன் (வயது 37). இவர் சத்தீஸ்கர் மாநில வனப்பகுதியில் நேற்று முன்தினம் நக்சலைட்கள் நடத்திய திடீர் தாக்குதலில் பலியானார்.

    சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் திருமுருகனின் உடல் நேற்று மாலை திருச்சிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து கமாண்டர் ரவீந்திரபிரசாத் தலைமையிலான துணை ராணுவப்படையினர் ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடலை சொந்த ஊருக்கு நேற்றிரவு 8.10 மணிக்கு கொண்டு வந்தனர்.

    உயர் கல்வி துறை அமைச்சர் அன்பழகன், சேலம் மாவட்ட கலெக்டர் சம்பத், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன், காமராஜ் எம்.பி., ராணுவ அதிகாரிகள், திருமுருகனின் மனைவி, பெற்றோர், குழந்தைகள், சகோதரர்கள், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் திரண்டு அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    பின்னர் தேசிய கொடியால் போர்த்தப்பட்ட திருமுருகனின் உடலை துணை ராணுவ படையினர் மயானத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு தேசிய கொடி எடுக்கப்பட்டு 21 குண்டுகள் முழங்க துணை ராணுவ படையினரின் முழு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.

    முன்னதாக திருமுருகனின் மனைவி செல்வியிடம் தமிழக அரசு சார்பில் அமைச்சர் அன்பழகன் ரூ.20 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

    திருமுருகனின் தந்தை நல்லதம்பி (55) விவசாய கூலி தொழிலாளி. தாய் பவுனாம்பாள் (47). செல்வி (28)என்ற மனைவியும், பிரதீபா (11), பிரியதர்ஷினி (10), ஸ்ரீகரன் (5) என்ற 3 குழந்தைகளும், தனசேகரன் (32), மருததுரை (30) என்ற 2 சகோதரர்களும் உள்ளனர்.

    வறுமையான குடும்பத்தில் பிறந்த திருமுருகன் சென்னையில் பி.எஸ்.சி. பட்டபடிப்பில் முதலாமாண்டு படித்து கொண்டிருந்த போது சி.ஆர்.பி.எப்.பணியில் சேர்ந்தார்.

    பள்ளி பருவத்தில் இருந்தே அறிமுகமாகி இருந்த சொந்த ஊரை சேர்ந்த செல்வியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். செல்வி பிளஸ்-2 வரை படித்துள்ளார்.


    சி.ஆர்.பி.எப். ஜவானாக டெல்லி, ஜம்மு, காஷ்மீர் உள்பட பல மாநிலங்களில் பணிபுரிந்த திருமுருகன் கடந்த 3 ஆண்டுகள் கோவையில் பணி புரிந்து வந்தார்.இதையடுத்து அவரது குடும்பத்தினருடன் கோவைக்கு குடி பெயர்ந்தார். மேலும் வங்கி கடன் பெற்று வீடு ஒன்றையும் கட்டி வந்தார்.

    இதனிடையே கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி கோவையில் இருந்து சத்தீஸ்கர் மாநிலத்திற்கு இட மாறுதலாகி சென்றார். அண்மையில் விடுமுறையில் கோவை வந்த அவர் தனது குடும்பத்தினருடன் தங்கியிருந்தார்.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் தன்னுடன் பணி புரியும் வீரர்கள் பலர் மாவோயிஸ்டுகள் தாக்குதலில் பலியாகி வருவதாக குடும்பத்தினருடன் தெரிவித்தார். இதனால் அச்சமடைந்த குடும்பத்தினர் குழந்தைகளின் நலன் கருதி வேலையை விட்டு விட வலியுறுத்தி உள்ளனர். வறுமையான நிலையில் வேலையை விட மறுத்த திருமுருகன் இன்னும் 3 ஆண்டுகள் மட்டும் பணி புரிவதாக கூறி உள்ளார்.

    திருமுருகனின் தம்பி தன சேகரன் நெல் அறுவடை வாகனத்தில் ஓட்டுனராக பணி புரிகிறார். இதனால் அவர் அடிக்கடி வேலைக்காக வெளியூர் சென்று விடுவார். ஆசிரியர் பயிற்சி முடித்துள்ள மற்றொரு தம்பியான மருத துரை வயதான பெற்றோரை கவனித்து வருவதோடு கிராமத்தில் விவசாயத்தை கவனித்து வருகிறார்.

    இது குறித்து அவரது தந்தை நல்லதம்பி கூறுகையில, பட்டப்படிப்பு படிக்கும் போதே திருமுருகன் ராணுவ வீரராக தேர்வானான். படிப்பை முடித்து விட்டு வேறு வேலைக்கு செல்லலாமே என கூறியதற்கு நாட்டிற்காக போராடுவதை பெருமையாக கருதுகிறேன்.

    உங்கள் மகன் ஒரு ராணுவ வீரர் என்பதை நினைத்து பெருமை படுங்கள். நாட்டுக்காகவே நான் பிறந்தேன், என்னை நாட்டுக்காக கொடுங்கள் என பிடிவாதமாக கூறி பணிக்கு சென்றான். அவன் கூறியதை போன்றே இன்று அவனை நாட்டுக்காகவே கொடுத்து விட்டேன் என்று கூறினார்.

    திருமுருகனின் மனைவி செல்வி கூறுகையில், அங்கு சண்டை நடக்கும் என்ற செய்தி கிடைக்கும் போதெல்லாம் இரவு முழுவதும் தூங்காமல் இறைவனை பிரார்த்தனை செய்து கொள்வேன். தந்தை எங்கே என்று கேட்டால் என் குழந்தைகளுக்கு நான் என்ன சொல்வது என்று தெரியவவில்லை என கூறி கண்ணீர் விட்டு கதறினார்.
    Next Story
    ×