search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் நலமாக உள்ளார்: அப்பல்லோ மருத்துவமனை தகவல்
    X

    முதலமைச்சர் நலமாக உள்ளார்: அப்பல்லோ மருத்துவமனை தகவல்

    முதலமைச்சர் நலமாக உள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் தகவல் தெரிவித்து உள்ளனர்.
    சென்னை:

    முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று முன் தினம் தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.

    உள்ளாட்சித் தேர்தல் பணிகள் தொடர்பாகவும் அவர் ஆலோசனை நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்றிரவு 11.30 மணி அளவில் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு காய்ச்சல் அடித்தது.

    இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். அப்போது அவருக்கு நீர்ச்சத்து இழப்பும் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா நள்ளிரவு 12 மணி அளவில் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதனால் அவர் உடல் நலம் சீரானது.

    இது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டார். அதில், “முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை சீராக உள்ளது. தொடர்ந்து அவர் உடல் நிலையை கண்காணித்து வருகிறோம்“ என்று கூறப்பட்டிருந்தது.

    இன்று காலை முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது. தற்போது அவர் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக டாக்டர்கள் அறிவித்துள்ளனர். இன்று அல்லது நாளை அவர் டிஸ்சார்ஜ் ஆவார் என்று தெரிகிறது.

    முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்ட தகவல் அறிந்ததும் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள், அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அப்பல்லோ மருத்துவமனை முன்பு திரண்டனர்.

    முதல்-அமைச்சர் ஜெயலலிதா நலமாக உள்ளார் என்ற தகவல் கேட்டதும் அ.தி.மு.க. தொண்டர்கள் மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்தனர்.

    ஜெயலலிதா குணம் அடைய வேண்டி அ.தி.மு.க.வினர் இன்று கோவில்களில் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்.
    Next Story
    ×