search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓசூரில் விசுவ இந்து பரி‌ஷத் பிரமுகர் கொலையால் பதட்டம் - கடைகள் அடைக்கப்பட்டன
    X

    ஓசூரில் விசுவ இந்து பரி‌ஷத் பிரமுகர் கொலையால் பதட்டம் - கடைகள் அடைக்கப்பட்டன

    ஓசூரில் விசுவ இந்து பரி‌ஷத் பிரமுகர் கொலையால் பதட்டம் நிலவுகிறது. சில பகுதிகளில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன. போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா அலுவலக சாலையில் வசித்தவர் சூரி என்ற சுரேஷ் (வயது 40). இவர் தமிழ்நாடு விசுவ இந்து பரி‌ஷத் அமைப்பில் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளராக இருந்து வந்தார். இவரது அலுவலகம் ஓசூர் நேரு நகரில் உள்ளது.

    நேற்று இரவு 8 மணிக்கு அலுவலக வேலைகளை முடித்துக் கொண்டு வீட்டிற்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தை எடுக்க வந்தார். அப்போது மோட்டார் சைக்கிள்களில் முகமூடி அணிந்து வந்த 4 பேர் கும்பல் இவரை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இவர் தப்பி ஓடினார். என்றாலும் ஓடஓட விரட்டி கொடூரமாக கொலை செய்தனர்.

    இந்த கொலை குறித்து தகவல் கிடைத்ததும் ஓசூர் துணை சூப்பிரண்டு ஆறுமுகம், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து அவரது பிணத்தைக் கைப்பற்றி ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை காரணமாக ஓசூர் பகுதியில் பதட்டம் நிலவுகிறது. நேற்று இரவும், இன்றும் ஓசூர் நேரு நகர், ராம்நகர், அண்ணா நகர், தாலுகா அலுவலக சாலை, எம்.ஜி. ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன. போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

    கொலை செய்யப்பட்ட சூரி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இதில் ஏற்பட்ட முன்விரோதத்தின் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

    கடந்த 2007-ம் ஆண்டு ஓசூரில் உள்ள தளி சாலையில் கிருஷ்ணகிரி மாவட்ட தே.மு.தி.க. துணை செயலாளர் அம்மன் பாலாஜி அவரது அலுவலகத்தில் கொலை செய்யப்பட்டார். ரியல் எஸ்டேட் தொழில் பிரச்சினையில் ஏற்பட்ட இந்த கொலையில் சூரி உள்பட சிலரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த கொலை வழக்கில் இருந்து சூரி விடுதலை ஆனார். இதனால் ஏற்பட்ட முன் விரோதத்தில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

    ஏற்கனவே கொலை செய்யப்பட்ட அம்மன் பாலாஜியின் கூட்டாளிகள் இந்த கொலையை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

    கொலையாளிகளை பிடிக்க ஓசூர் டவுன் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    முதல்கட்ட விசாரணையில் 4 பேர் கொண்ட கும்பல் இந்த கொலையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. 4 பேர் முகமூடி அணிந்துக்கொண்டு 2 மோட்டார் சைக்கிள்களில் பயங்கர ஆயுதங்களுடன் வந்தது ஓசூர் நேரு நகரில் ஒரு வீட்டில் வைக்கப்பட்டிருந் சி.சி.டிவி. கேமிராவில் பதிவாகி உள்ளது. இந்த காட்சிகளை சாட்சியாக வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொலை கும்பலுக்கு மூளையாக இருந்து செயல்பட்டது யார் என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட சூரி ஏற்கனவே ரவுடியாக செயல்பட்டு உள்ளார். அவரது பெயர் ஓசூர் காவல் நிலைய குற்ற பதிவேட்டில் இடம் பெற்றுள்ளது.

    ரியல் எஸ்டேட் தொழில் கொடி கட்டி பறந்த சூரி கேபிள் தொழிலிலும் ஈடுபட்டு தன்னை தொழில் அதிபராக காட்டிக் கொண்டார்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விசுவ இந்து பரி‌ஷத் அமைப்பில் அவருக்கு மாவட்ட செயலாளர் பதவி தேடி வந்தது. அப்போது முதல் ஓசூரில் வினாயகர் சதுர்த்தி விழாவை பிரமாண்டமாக கொண்டாடி வந்தார்.

    கடந்த வாரம் ஓசூரில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தை சிறப்பாக நடத்தி காட்டினார். இந்த நிலையில் தான் சூரி கொலை செய்யப்பட்டுள்ளார்.

    கொலை செய்யப்பட்ட சூரிக்கு ராதிகா என்ற மனைவியும், ரித்திகா, லைஷ்ணவி என்ற மகள்களும் லகுவேஷ் என்ற மகனும் உள்ளனர்.
    Next Story
    ×