search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    • வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் அலுவலகத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
    • தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தினமும் அறிவிக்கப்படவில்லை.

    ஈரோடு:

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19-ந் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. மேலும் சுயேட்சையாக போட்டியிட பலரும் ஆர்வமாக உள்ளனர்.

    இந்நிலையில் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் ஈரோடு கலெக்டர் அலுவலகம், ஈரோடு ஆர்.டி.ஓ. அலுவலகம் ஆகிய 2 இடங்களில் நடக்கிறது. பகல் 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வேட்பு மனு தாக்கலுக்கான முன்னேற்பாடு பணிகள் ஈரோடு கலெக்டர் அலுவலகம் மற்றும் ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் தீவிரமாக நடந்து வருகிறது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக செல்லும் வழியை காண்பிக்கும் அறிவிப்பு பலகை சுவற்றில் ஒட்டும் பணி நடந்தது.

    இது குறித்து தேர்தல் அதிகாரிகள் கூறுகையில்,

    வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் அலுவலகத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். இதில் ஊர்வலமாகவோ, கூட்டமாகவோ வந்து வேட்புமனு தாக்கல் செய்யக்கூடாது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு போடப்படும் என்றனர்.

    தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தினமும் அறிவிக்கப்பட வில்லை. இதனால் நாளை முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய மாட்டார்கள். அதே சமயம் சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • தே.மு.தி.க. யாருடன் கூட்டணி என்பது குறித்த விபரம் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும்.
    • இன்றும், நாளையும் விருப்பமனு வழங்கப்படுகிறது.

    சென்னை :

    பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் இன்று காலை முதல் நாளை மாலை வரை விருப்ப மனு அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இதனால் இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்திற்கு வந்த பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தே.மு.தி.க. யாருடன் கூட்டணி என்பது குறித்த விபரம் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும். இன்றும், நாளையும் விருப்பமனு வழங்கப்படுகிறது என்று கூறினார்.

    • இறந்தவர்களின் ஆன்மா சுற்றி திரிவதாக அந்த பகுதியில் பீதி ஏற்பட்டுள்ளது.
    • பொதுமக்கள் விபத்து நடந்த பகுதியில் மாலை 6 மணிக்கு மேல் கடந்து செல்ல அச்சப்படுகின்றனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்-பெங்களூர் செல்லும் சாலையில் அந்தனூர் பக்கிரிப்பாளையம் கிராமங்களுக்கு அருகே அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மேல்மலையனூர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு சென்ற கார் விபத்தில் சிக்கியது. அதில் பயணம் செய்த குழந்தை, பெண்கள் உட்பட 7 பேர் இறந்தனர்.

    இதை தொடர்ந்து அதே பகுதியில் சுமார் 100 மீட்டர் தூரத்தில் கடந்த 23-ம் தேதி இரவு நடந்த சாலை விபத்தில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.

    மேலும் இந்த பகுதியில் அடுத்தடுத்து நடந்த விபத்துகளால் 20-க்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகி விட்டனர்.

    விபத்து நடந்த பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசுக்கு சொந்தமான விவசாய பண்ணை ஒன்று செயல்பட்டு வந்தது. தற்போது அந்த பண்ணை செயல்படவில்லை.

    சாலையின் இருபுறமும் அடர்ந்த தைலம் மரங்கள் கருவேல மரங்கள், காட்டு மரங்கள் அதிகமாக உள்ளன. அதனால் மாலை 6 மணிக்கு மேல் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. 20-க்கும் மேற்பட்டோர் பலியான பகுதியில் இறந்தவர்களின் ஆன்மா சுற்றி திரிவதாக அந்த பகுதியில் பீதி ஏற்பட்டுள்ளது.


    மாலை 6 மணிக்கு மேல் அந்த பகுதியில் திடீரென சுழல் காற்று வீசுகிறது. அலறல் சத்தம் கேட்கிறது. சாலையின் குறுக்கே வெள்ளை மற்றும் கருப்பு நிறத்தில் மர்ம உருவம் நடமாடுவது போல அமானுஷ்ய சக்திகள் நடமாட்டம் உள்ளது என அந்த பகுதி மக்களிடையே தகவல் பரவியது.

    இதனால் பொதுமக்கள் விபத்து நடந்த பகுதியில் மாலை 6 மணிக்கு மேல் கடந்து செல்ல அச்சப்படுகின்றனர். அவ்வழியாக செல்வதை தவிர்த்து வருகின்றனர்.

    இந்த பேய் பீதி நாளுக்கு நாள் அங்குள்ள மக்களை முடங்க செய்து வருகிறது. இதனால் வீடுகளின் முன்பு வேப்பிலை கட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று அப்பகுதியில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டும். விபத்தில் உயிர் சேதம் நடைபெறாமல் இருக்க வேண்டியும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    பம்பை மேளத்துடன் கோவிலில் இருந்து சாமி ஆயுதங்களுடன் ஊர்வலமாக சென்றனர்.

    விபத்து நடந்த சாலையின் குறுக்கே மஞ்சள், குங்குமம், விபூதி, கற்பூரம் ஏற்றி பூசணிக்காய் உடைத்தனர். மேலும் கோழி பலி கொடுத்து வழிபாடு செய்தனர்.

    • மதுரை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • தேர்தல் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

    உசிலம்பட்டி:

    பாராளுமன்றத் தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. பணபட்டு வாடாவை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தற்போது இருந்தே தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்துச் சென்றால் அதற்குரிய ஆவணங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும், இல்லை என்றால் பறிமுதல் செய்யப்படும் என தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களில் தமிழக முழுவதும் தேர்தல் பறக்கும் படை என நடத்திய சோதனைகளில் கோடிக்கணக்கில் பணம் மற்றும் தங்கம் உள்ளிட்ட பொருட்கள் சிக்கியுள்ளன.

    மதுரை மாவட்டத்திலும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி உசிலம்பட்டி அருகே உள்ள ஏழுமலை பிரிவில் அதிகாரிகள் வாகன சோதனைகள் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது அ.தி.மு.க. கொடி கட்டிய கார் அந்த வழியாக வந்தது. உடனே அதிகாரிகள் அந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த காரில் உசிலம்பட்டி அருகே உள்ள எருமார்பட்டியை அடுத்துள்ள காராம்பட்டி யைச் சேர்ந்த அ.தி.மு.க. கிளை செயலாளர் கிருபாகரன் (வயது 29) இருந்தார்.

    தொடர்ந்து அதிகாரிகள் காரை சோதனை செய்தனர். அப்போது அதில் ரூ.3 லட்சம் ரொக்கம் இருந்தது. ஆனால் அதற்குரிய ஆவணங்கள் கிருபாகரனிடம் இல்லை. இதையடுத்து தேர்தல் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்து மொத்த விலையில் துணிகளை கொள்முதல் செய்து செல்வார்கள்.
    • வெளி மாநில வியாபாரிகள் ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை பணத்தை எடுத்து வந்து மொத்த விலைக்கு துணிகளை வாங்கி செல்வார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க், சென்ட்ரல் தியேட்டர், அசோகபுரம் பகுதிகளில் வாரம் தோறும் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெறும் ஜவுளி வாரச்சந்தை தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமானது.

    இந்த வாரச்சந்தைக்கு கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்து மொத்த விலையில் துணிகளை கொள்முதல் செய்து செல்வார்கள்.

    சாதாரண நாட்களில் நடைபெறும் வாரச்சந்தையில் ரூ.2 கோடி ரூபாய்க்கும், பண்டிகை காலங்களில் நடைபெறும் ரூ.5 கோடி ரூபாய் வரையிலும் வர்த்தகம் நடைபெறும். வெளி மாநில வியாபாரிகள் ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை பணத்தை எடுத்து வந்து மொத்த விலைக்கு துணிகளை வாங்கி செல்வார்கள்.

    இந்நிலையில் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த 16-ந் தேதி முதல் அமலுக்கு வந்ததால் ரூ.50 ஆயிரம் மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். இதற்காக நிலை கண்காணிப்பு குழுவினர், பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக நேற்று இரவு கூடிய வார ஜவுளி சந்தைக்கு வெளி மாநில வியாபாரிகள் வரத்து வெகுவாக குறைந்தது. இதனால் மொத்த வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

    இது குறித்து ஜவுளி வியாபாரிகள் கூறியதாவது:-

    தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் வெளி மாநில வியாபாரிகள் அச்சத்தில் உள்ளனர். இன்று வார ஜவுளி சந்தை நடைபெறும் நாளில் வெளி மாநில வியாபாரிகள் வரவில்லை. ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.

    இதற்கு அஞ்சி வெளி மாநில வியாபாரிகள் வரவில்லை. குறிப்பாக சிறு குறு வியாபாரிகள் ரொக்க பணத்திற்கு உரிய ஆவணங்கள் எடுத்து வருவதில் சிரமம் உள்ளதால், இரவு நடைபெற்ற ஜவுளி சந்தைக்கு வெளி மாநில வியாபாரிகள் வருகை குறைந்தது.

    இதனால் மொத்த வியாபாரம் பாதிக்கப்பட்ட நிலையில், சில்லரை வர்த்தகம் மட்டும் வழக்கம் போல் நடைபெற்றது. வழக்கமான விற்பனையில் 50 சதவீதம் மட்டுமே இருந்ததாக தெரிவித்த வியாபாரிகள். இனி தேர்தல் முடியும் வரை இதே நிலைமைதான் நீடிக்கும் என்றும், வியாபாரிகளுக்கு தேர்தல் கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பா.ஜனதா மின்னணு எந்திரத்தை நம்பியே தேர்தலில் நிற்கிறார்கள்.
    • பிரதமர் மோடி தமிழகத்துக்கு 6, 7 முறை படையெடுத்துள்ளார். ஆனால் தேர்தல் பத்திரம் பற்றி ஏன் வாய் திறக்கவில்லை.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சத்திய மூர்த்தி பவனில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வெற்றி வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் 2 அல்லது 3 நாட்களில் வெளியிடப்படும். கன்னியாகுமரி தொகுதியில் விஜய் வசந்த் போட்டியிடுவது பற்றி கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும். தம்பியை எதிர்த்து அக்கா தமிழிசை போட்டியிட்டால் டெபாசிட் கூட வாங்க மாட்டார்.

    பாரதிய ஜனதாவுடன் பா.ம.க. கூட்டணி அமைந்திருப்பதன் மூலம் மூழ்கும் கப்பலில் ஏறி அந்த கட்சி மூழ்கப் போகிறது. தமிழகம் புதுவையில் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் 40 பேரையும் ஆதரித்து ராகுல் காந்தி சூறாவளி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் பிரசாரம் செய்ய உள்ளார். இவர்களது சுற்றுப்பயண தேதியை விரைவில் அறிவிப்போம்.

    பா.ஜனதா மின்னணு எந்திரத்தை நம்பியே தேர்தலில் நிற்கிறார்கள். நாங்கள் மக்களை நம்பியே நிற்கிறோம். தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையம் மீண்டும் வெளியிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்திருப்பதை வரவேற்கிறோம். மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தமிழக மக்களை பிச்சைக்காரர்கள் என்று கூறியதை வன்மையாக கண்டிக்கிறோம்.

    இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதியாக மத்திய அரசு ஒரு பைசா கூட வழங்கவில்லை. இதன் மூலம் மத்திய அரசு தமிழக மக்களை அவமதித்துள்ளது.

    தேர்தல் பத்திரம் தொடர்பாக பா.ஜனதா ஆதாரங்களை கொடுக்க மறுப்பது ஏன்? பிரதமர் மோடியின் ஆட்சி முடிவுக்கு வரப்போகிறது. பா.ஜனதாவின் முகத்திரை தினம் தினம் கிழிந்து வருகிறது.

    பிரதமர் மோடி தமிழகத்துக்கு 6, 7 முறை படையெடுத்துள்ளார். ஆனால் தேர்தல் பத்திரம் பற்றி ஏன் வாய் திறக்கவில்லை.

    இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறினார்.

    பேட்டியின் போது முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் ராஜேஷ்குமார், பொருளாளர் ரூபி மனோகரன், அசன் மவுலானா எம்.எல்.ஏ., கோபண்ணா, அனந்த சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • மார்ச் 9ஆம் தேதி தொடங்கிய விழா வருகின்ற மார்ச் 22ஆம் தேதி வரை வெகு விமர்சையாக நடைபெறுகிறது.
    • பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கேளூர் சித்தேரி கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க அருள்மிகு ஸ்ரீ பூங்காவனத்தம்மன் ரத உற்சவ விழா விமர்சையாக நடைபெற்றது.

    மார்ச் 9ஆம் தேதி தொடங்கிய விழா வருகின்ற மார்ச் 22ஆம் தேதி வரை வெகு விமர்சையாக நடைபெறுகிறது இந்நிலையில் இன்று பங்குனி ஐந்தாம் நாள் ரத உற்சவ தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது இந்நிகழ்வில் அலங்கரிக்கப்பட்ட பூங்காவனத்தம்மன் தேரில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    இந்நிகழ்வை காண போளூர், கேளூர், துறிஞ்சிகுப்பம், சந்தவாசல், தேப்பனந்தல் அணைப்பேட்டை விளக்கனந்தல், கஸ்தம்பாடி, சமத்துவபுரம், கட்டிப்பூண்டி, ஆத்துவம்பாடி பால்வார்த்து வென்றான் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • பொதுமக்களின் ஆரவாரத்தால் மோடியும் உற்சாகமானார்.
    • இனி, தி.மு.க.வை ஆதரிக்கும் மனநிலையில் மக்கள் இல்லை.

    கோவை:

    பிரதமர் மோடி கோவையில் நேற்று ரோடுஷோ மேற்கொண்டு பாரதிய ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். சாய்பாபா காலனியில் உள்ள சாய்பாபா கோவில் முன்பிருந்து அவர் வாகன பேரணியை தொடங்கினார். இதில் லட்சக்கணக்கான பொதுமக்கள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

    பொதுமக்களின் ஆரவாரத்தால் மோடியும் உற்சாகமானார். இதனால் மோடியின் வாகனம் மெதுவாக வந்தது. 2 ½ கிலோ மீட்டர் தூரமுடைய ஆர்.எஸ்.புரம் வந்தடைய சுமார் ஒரு மணி நேரம் ஆனது. ரோடு ஷோ முடிந்த பின்னர் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் கோவை சுற்றுப்பயணம் குறித்து பதிவிட்டார். அந்த பதிவு தமிழில் அமைந்திருந்தது. அதில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:-

    கோவை மக்கள் என் மனதை வென்று விட்டார்கள். இன்று (நேற்று) மாலை நடந்த ரோடு ஷோ பல ஆண்டுகள் நினைவில் நிற்கும். இதில் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டது சிறப்பு. இந்த வாழ்த்துக்கள் பெரிதும் போற்றப்படத்தக்கவை. தமிழகத்தின் தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தப்போகிறது. எங்கள் கட்சி மாநிலம் முழுவதும் வலுவான சக்தியாக உருவாகி வருகிறது. இனி, தி.மு.க.வை ஆதரிக்கும் மனநிலையில் மக்கள் இல்லை.

    கோவையில் கடந்த 1998-ம் ஆண்டில் நடந்த குண்டு வெடிப்புகளில் நம்மை விட்டு பிரிந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினேன்.

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    அத்துடன் ரோடுஷோ நிகழ்ச்சியின் புகைப்படங்களையும் இணைத்துள்ளார்.

    • தி.மு.க. வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
    • கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் பணிகள் மற்றும் பிரசாரம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 30 நாட்களே உள்ளதால் அரசியல் கட்சிகள் வேட்பாளர் தேர்வில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தி.மு.க. கூட்டணியில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அவர்களும் வேட்பாளர்களை அறிவித்து விட்டனர். தி.மு.க. வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறுகிறது.

    நாளை நண்பகல் 12 மணிக்கு காணொலி வாயிலாக கூட்டம் நடைபெறும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

    கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் பணிகள் மற்றும் பிரசாரம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    • ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • மாவட்டம் முழுவதும் 18 பறக்கும் படை அமைக்கப்பட்டு அவர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நாகர்கோவில்:

    பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் முதல் கட்டமாக ஏப்ரல் 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

    அதன்படி பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் பொருட்டு ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனை கண்காணிக்க பறக்கும் படை, கண்காணிப்பு குழு போன்றவை அமைக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. எனவே மாவட்டம் முழுவதும் 18 பறக்கும் படை அமைக்கப்பட்டு அவர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் ஈடுபட்டு இருந்த பறக்கும் படையினரின் சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1 லட்சம் சிக்கியது.

    இதேபோல் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியிலும் ரூ.1 லட்சம் சிக்கியுள்ளது. உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்டதால் அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

    • வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள் வறட்சியின் பிடியில் சிக்கி தவித்து வருகின்றன.
    • ஒரு சில வாகன ஓட்டிகள் அதிக சத்தத்தை எழுப்பி யானைகளுக்கு தொந்தரவு கொடுக்கிறார்கள்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஆனைமலை புலிகள் காப்பகம் உள்ளது. இங்குள்ள உடுமலை, அமராவதி உள்ளிட்ட வனச்சரகங்களில் யானை, புலி, சிறுத்தை, கடமான், காட்டெருமை, கரடி, கருஞ்சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    அவற்றிற்கு தேவையான உணவு தேவையை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளும், தண்ணீர் தேவையை அடர்ந்த வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகளும் பூர்த்தி செய்து தருகின்றன. இதனால் வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியை அதிகம் நம்பி உள்ளது.

    தற்போது கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள் வறட்சியின் பிடியில் சிக்கி தவித்து வருகின்றன. இதனால் வனவிலங்குகளுக்கான உணவு தண்ணீர் தேவை பூர்த்தி அடைவதில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அடிவாரப்பகுதிக்கு வந்துவிட்டன.

    அமராவதி அணையில் நீர்இருப்பு உள்ளதால் அணைப் பகுதிக்குள் வனவிலங்குகள் முகாமிட்டு வருகின்றன. இதனால் அவற்றுக்கான உணவு தண்ணீர் தேவை தற்காலிகமாக பூர்த்தி அடைந்து உள்ளது.

    மேலும் யானைகள் காலை நேரத்தில் உடுமலை - மூணாறு சாலையை கடந்து வனப்பகுதிக்குள் செல்வதும் மாலையில் அணைப்பகுதிக்கு வருவதுமாக உள்ளது. அப்போது ஒரு சில வாகன ஓட்டிகள் அதிக சத்தத்தை எழுப்பி யானைகளுக்கு தொந்தரவு கொடுக்கிறார்கள். இதன் காரணமாக யானைகள் மிரண்டு வாகனஓட்டிகளை துரத்திச் சென்ற சம்பவமும் நிகழ்ந்து உள்ளது.

    இதனால் உடுமலை மூணாறு-சாலையில் யானைகள் நடமாட்டம் இருந்தால் அவை சாலையை கடக்கும் வரையிலும் வாகன ஓட்டிகள் அமைதியாக இருந்து பயணத்தை மேற்கொள்ள வேண்டும். யானைகள் அங்கிருந்து செல்லும் வரை ஒலி எழுப்புவதோ, அவற்றின் மீதுகற்களை வீசுவதோ, செல்பி, புகைப்படம் எடுப்பதற்கோ முயற்சி செய்யக் கூடாது என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். அத்துடன் உடுமலை மூணாறு- சாலை மலைஅடிவாரப் பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • சுவர்களில் எழுதப்பட்ட கட்சி விளம்பரங்களும் அழிக்கப்பட்டு வருகின்றன.
    • சென்னையில் 3 தொகுதிகளிலும் 944 இடங்களில் 3,719 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன.

    சென்னை :

    பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து சென்னையில் கட்சி கொடிகள், பதாகைகள், போஸ்டர்கள் அகற்றப்பட்டு வருகின்றன. சுவர்களில் எழுதப்பட்ட கட்சி விளம்பரங்களும் அழிக்கப்பட்டு வருகின்றன.

    கடந்த 2 தினங்களில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கட்சிக்கொடிகள், பதாகைகள் அகற்றப்பட்டுள்ளன. விதிகளை மீறி சுவர்களில் எழுதப்படும் கட்சி விளம்பரங்களும் அழிக்கப்பட்ட பிறகு அந்த கட்சி நிர்வாகிகளுக்கு தேர்தல் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    சென்னையில் 3 தொகுதிகளிலும் 944 இடங்களில் 3,719 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. அந்த பகுதிகளில் உள்ள கொடி கம்பங்கள் முழுமையாக அகற்றப்பட்டு வருகின்றன.

    அதுபோல சென்னையில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் ராணிமேரி கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம், லயோலா கல்லூரி ஆகிய 3 இடங்கள் அருகிலும் கட்சி கொடிகள் இல்லாதவாறு விளம்பரங்களை அகற்றும் பணி நடந்து வருகிறது.

    நேற்று மட்டும் சுமார் 5,200 இடங்களில் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன. 2931 போஸ்டர்கள், 149 பேனர்கள் அதிரடியாக சென்னை மாநகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டது.

    ×