search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • நேற்றைய போட்டியின் நடுவே நாய் ஒன்று மைதானத்துக்குள் நுழைந்தது.
    • உடனே சுற்றியிருந்த ரசிகர்கள் ஹர்திக்.. ஹர்திக் என முழக்கமிட்டனர்.

    ஐபிஎல் கிரிக்கெட்டின் தொடரில் 5-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் 169 ரன்கள் சேர்த்தது.

    இதனையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்தது. இதனால் குஜராத் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் தொடக்கம் முதல் முடிவு வரை சில சம்பவங்கள் அரங்கேறியது. மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டது ரசிகர்களிடையே கோபத்தையும் வருத்தத்தையும் கொடுத்தது. அந்த கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக ரசிகர்கள் நேற்றைய போட்டியில் ஹர்திக் பாண்ட்யாவை கலாய்த்து தள்ளினர்.

    அந்த வகையில் இந்த போட்டிக்கான டாஸ் போடும் போது மும்பை அணியின் கேப்டன் பாண்ட்யா என அழைக்கும் போது, சுற்றியிருந்த ரசிகர்கள் ரோகித்.. ரோகித் என முழக்கமிட்டனர். இதனால் ஹர்திக் பாண்ட்யா முகம் சற்று மாறியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

    அதை தொடர்ந்து பாண்ட்யா பீல்டிங் சரி செய்யும் போது மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவை பல இடங்களில் மாற்றி மாற்றி பீல்டிங் நிற்க சொன்னார். இந்த சம்பவத்தை பார்த்த ரசிகர்கள் பாண்ட்யாவை திட்டி வருகின்றனர். இந்த வீடியோவும் வைரலானது.

    இதனையடுத்து போட்டியின் போது நாய் ஒன்று மைதானத்துக்குள் நுழைந்தது. ரோகித்.. ரோகித் என முழக்கமிட்ட ரசிகர்கள் நாயை பார்த்ததும் ஹர்திக் ஹர்திக் என முழக்கமிட்டனர்.

    மேலும் அவர் பெவிலியனுக்கு செல்லும் போது அவரை ரசிகர்கள் திட்டி தீர்த்தனர். ரோகித் தான் எப்போதுமே மும்பை கேப்டன் என பாண்ட்யாவுக்கு எதிராக ரசிகர்கள் பேனர் வைத்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ரோகித் ரசிகர்கள் மட்டுமின்றி சிஎஸ்கே ரசிகர்கள் உள்பட ஐபிஎல் ரசிகர்கள் என அனைவரும் ரோகித் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

    • குஜராத் அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா முதல் ஓவரை வீசவில்லை.
    • 3-வது பவுலராக ஆட்டத்தின் 4-வது ஓவரில்தான் பந்து வீச வந்தார்.

    அகமதாபாத்:

    ஹர்த்திக் பாண்ட்யா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் முதல் ஆட்டத்தில் தோல்வியை தழுவியது. சுப்மன்கில் தலைமையிலான குஜராத் அணி தொடக்க ஆட்டத்திலேயே வெற்றி பெற்றது.

    குஜராத் அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா முதல் ஓவரை வீசவில்லை. 3-வது பவுலராக ஆட்டத்தின் 4-வது ஓவரில்தான் பந்து வீச வந்தார். ஹர்த்திக் பாண்ட்யா, லுகே வுட் ஆகியோருக்கு பிறகே வீசினார்.

    ஹர்த்திக் பாண்ட்யாவின் இந்த முடிவு தொடர்பாக டெலிவிஷன் வர்ணனையாளர்களான கவாஸ்கர், பீட்டர்சன் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    பும்ரா முதல் ஓவரை வீசாதது ஏன்? எனக்கு இது புரியவில்லை என்று பீட்டர்சன் குறிப்பிட்டுள்ளார். இதற்கு கவாஸ்கர் பதில் அளிக்கும்போது, மிக நல்ல கேள்வி, மிக மிக நல்ல கேள்வி என்றார்.

    • மோகித் சர்மா, ரஷித் கான் 16, 17-வது ஓவர்களில் முறையே 4 மற்றும் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தனர்.
    • மும்பை அணிக்கு கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவை என்ற நிலையில் 12 ரன்களே அடிக்க முடிந்தது.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கியது.

    மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு கட்டத்தில் 15 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்திருந்தது. டெவால்டு பிரேவிஸ் 37 பந்தில் 46 ரன்களும், திலக் வர்மா 10 பந்தில் 15 ரன்கள் எடுத்தும் களத்தில் இருந்தனர்.

    மும்பை இந்தியன்ஸ் வெற்றிக்கு கடைசி 5 ஓவரில், அதாவது கடைசி 30 பந்தில் 43 ரன்கள் தேவைப்பட்டது. இது எளிதான இலக்குதான். மேலும் பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் குஜராத் பந்து வீச்சாளரக்ள் துல்லியமாக பந்து வீச இயலாது என கருதப்பட்டது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 11 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் போட்டியில் வெற்றி பெற்றிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் 16-வது ஓவரில் மோகித் சர்மா 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து பிரேவிஸ்-ஐ அவுட்டாக்கினார். அடுத்து டிம் டேவிட் களம் இறங்கினார். அந்த நேரத்தில் 25 பந்தில் 40 ரன்கள் தேவைப்பட்டது. அதிரடியாக களம் இறங்கி ஹர்திக் பாண்ட்யா சிக்ஸ், பவுண்டரி பறக்க விடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், டிம் டேவிட் களம் இறக்கப்பட்டார். 17-வது ஓவரை ரஷித் கான் வீசினார். இந்த ஓவரில் ரஷித் கான் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இந்த ஓவரில் அவர் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்ததன் காரணமாகவே மும்பை அணிக்கு நெருக்கடி அதிகமானது.

    அதன்பின் 3 ஓவரில் மும்பைக்கு அணிக்கு 36 ரன்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரில் மோகித் சர்மா 9 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். 27 ரன் தேவை என்ற நிலையில் 19-வது ஓவரில் ஜான்சன் 8 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.

    19 ரன்கள் தேவை என்ற நிலையில் கடைசி ஓவரில் உமேஷ் யாதவ் 12 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். மும்பை இந்தியன்ஸ் அணி 6 ரன்னில் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தது.

    இந்த நிலையில் மும்பை அணி தோல்விக்கு ஹர்திக் பாண்ட்யா எடுத்த முடிவுதான் காரணம் என இர்பான் பதவி விமர்சனம் செய்துள்ளார்.

    டிம் டேவிட்டிற்குப் பதிலாக ஹர்திக் பாண்ட்யா களம் இறங்கியிருக்க வேண்டும். ஆனால், ரஷித் கான் பந்தை எதிர்கொள்ள ஹர்திக் பாண்ட்யா விரும்பவில்லை. இதனால் டிம் டேவிட்டை களம் இறக்கினார். இது மும்பை அணியின் தோல்விக்கு வழி வகுத்தது. இது மோசமான கேப்டன்சி என விமர்சித்துள்ளார்.

    18-வது ஓவரின் கடைசி பந்தில் டிம் டேவிட் (10 பந்தில் 11 ரன்) ஆட்டமிழந்ததும் ஹர்திக் பாண்ட்யா களம் இறங்கினார். இவர் கடைசி ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடித்து ஆட்டமிழந்தார்.

    • ரோகித் சர்மா பொதுவாக ஸ்லிப், மிட்ஆஃப், மிட்ஆனில் பீல்டிங் செய்வார்.
    • நேற்று லாங்ஆன் திசையில் ரோகித் சர்மா பீல்டிங் செய்து கொண்டிருந்தார்.

    மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா திடீரென நீக்கப்பட்டு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டார். இது தொடர்பாக ரோகித் சர்மா மனைவி அணி நிர்வாகத்திற்கு எதிராக கருத்துக்கூட தெரிவித்திருந்தார்.

    மூன்று விடிவிலான இந்திய கிரிக்கெட் அணிகளுக்கும் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மாவை நீக்கியதற்கு ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

    இந்த அறிவிப்பிற்குப் பிறகு ஐபிஎல் போட்டிக்கான முகாமில்தான் இருவரும் சந்தித்து கொண்டனர். அப்போது இருவரும் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவிக் கொண்டனர்.

    இந்த நிலையில்தான் நேற்றைய போட்டியின்போது ஹர்திக் பாண்டியா ரோகித் சர்மாவை அலைக்கழித்ததாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவிட்டு விமர்சனம் செய்து வருகின்றனர்.

    பொதுவாக ரோகித் சர்மா ஸ்லிப், மிட்-ஆன் அல்லது மிட்-ஆஃப் திசையில்தான் பீல்டிங் செய்வார். அவரது உடல்வாகு பவுண்டரி லைன் அருகே பீல்டிங் செய்ய ஒத்துழைக்காது என்பது எல்லோருக்கும் தெரியும். மேலும் ரிவியூ கேட்க வேண்டுமென்றால் வசதியாக இருக்கும் என்பதால் அருகில் நிற்பார்.

    ஆனால் நேற்று பெரும்பாலும் லாங்-ஆன் திசையில் ரோகித் சர்மா பீல்டிங் செய்ததை பார்க்க முடிந்தது. கடைசி ஓவர் கோட்ஸி வீசினார். இந்த ஓவரின்போது திடீரென ஹர்திக் பாண்ட்யா லாங்-ஆன் திசையில் நின்ற பீல்டரை அருகில் அழைத்தார். மிட்-ஆன் அருகில் நின்றிருந்த ரோகித் சர்மாவை லாங்-ஆன் திசைக்கு போகும்படி கேட்டுக்கொண்டார்.

    அப்போது ரோகித் சர்மா தன்னை எங்கே போகச் சொல்வார் என சாதாரணமாக நின்று கொண்டிருந்தார். ஆனால் ஹர்திக் பாண்ட்யா ரோகித் சர்மாவை அழைத்து நீங்கள் அங்கே செல்லுங்கள் என்பதுபோல் சைகை காட்டுவார். அதற்கு ரோகித் சர்மா, நானா... எனக் கேட்க, ஹர்திக் பாண்ட்யா நீங்கள்தான்... என வலியுறுத்துவார். உடனே ரோகித் சர்மா சற்று புன்னகையுடன் லாங்ஆன் நோக்கி ஓடுவார்.

    இதுபோன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும், ரோகித் சர்மாவை அலைக்கழிப்பதாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

    போட்டி முடிந்த பிறகு ஹர்திக் பாண்ட்யா, இஷான் கிஷன் உள்ளிட்டோர் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் சஜகமாக சிரித்து பேசிக்கொண்டிருந்தபோது ரோகித் சர்மா பும்ரா, திலக் வர்மா உள்ளிட்டோருடன் இருக்கையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். இதனால் அணி இரண்டு குழுவாக உள்ளதா? என ரசிகர்கள் முணுமுணுத்தனர்.

    பிசிசிஐ உடன் மோதல் போக்கை கடைபிடித்த இஷான் கிஷன் இந்திய அணியில் இடம் பிடிக்க முடியாமல் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • வெயின் பிராவோ 33 விக்கெட்டுகள் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார்.
    • அஸ்வின் 26 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். சாஹல் 25 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் 169 ரன்கள் சேர்த்தது. மும்பை இந்தியன்ஸ் அணியால் 162 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் 12-வது முறையாக முதல் போட்டியில் தோல்வியை சந்தித்தது.

    இந்த போட்டியின் கடைசி கட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மோகித் சர்மா சிறப்பாக பந்து வீசினார். அவர் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 33 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

    இதற்கு முன்னதாக வெயின் பிராவோ 33 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். தற்போது மோகித் சர்மா பிராவோ உடன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையை பகிர்ந்தள்ளார்.

    அஸ்வின் 26 விக்கெட்டுகளும், சாஹல், சாவ்லா, அமித் மிஸ்ரா ஆகியோர் தலா 25 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர்.

    • கமிந்து மெண்டிஸ் முதல் இன்னிங்சில் 102 ரன்கள் விளாசினார்.
    • 2-வது இன்னிங்சில் 164 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    இலங்கை- வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சியால்ஹெட்டில் நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் சதம் விளாசிய இலங்கை வீரர் கமிந்து மெண்டிஸ் 2-வது இன்னிங்சிலும் சதம் விளாசினார்.

    முதல் இன்னிங்சில் 7-வது வீரராக களம் இறங்கிய மெண்டிஸ் 102 ரன்கள் விளாசினார். தனஞ்ஜெயா டி சில்வா உடன் சேர்ந்து 202 ரன்கள் சேர்த்தார். தனஞ்ஜெயா டி சில்வாவும் (102) சதம் விளாசினார்.

    2-வது இன்னிங்சில் மீண்டும் தனஞ்ஜெயா டி சில்வா உடன் இணைந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த முறை 8-வது வீரராக களம் இறங்கிய 164 ரன்கள் விளாசினார். இந்த இன்னிங்சிலும் தனஞ்ஜெயா டி சில்வா (108) சதம் விளாசினார். இந்த ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 173 ரன்கள் குவித்தது.

    இதன்மூலம் 147 வருட கிரிக்கெட் வரலாற்றில் 7-வது அல்லது அதற்கும் கீழ் வரிசையில் களம் இறங்கி இரண்டு இன்னிங்சிலும் சதம் கண்ட முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    மேலும் தனஞ்ஜெயா டி சில்வா- கமிந்து மெண்டிஸ் ஆகிய இரண்டு பேரும் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த 3-வது ஜோடி என்ற பெருமையையும் பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக கிரோக் சேப்பல்- கிரேக் சேப்பல், மிஸ்பா-உல்-ஹக்- அசார் அலி ஜோடி இந்த சாதனையைப் படைத்துள்ளது.

    • மும்பை அணிக்கு கடைசி ஐந்து ஓவரில் 43 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.
    • கைவசம் ஏழு விக்கெட் இருந்த நிலையில் தோல்வியை சந்தித்தது.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் குஜராத்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய குஜராத் அணி 169 ரன்கள் எடுத்தது. பின்னர் 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியால் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களே அடிக்க முடிந்தது. இதனால் குஜராத் அணி 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த தோல்வியுடன் தொடர்ச்சியாக 12-வது சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது.

    போட்டி முடிந்த பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியதாவது:-

    ஐந்து ஓவர்களில் 42 நாட்கள் என்பது கடைசி நேரத்தில் மிகவும் குறைவு எனப் பார்க்கும் நாட்களில் இதுவும் ஒன்று. ஆனால் நாங்கள் எங்களுடைய வேகத்தை சற்று இழந்துவிட்டோம். அதனால் உண்மையிலேயே நாங்களாகவே சேஸிங்சில் இருந்து பின்வாங்கி விட்டோம்.

    ரசிகர்கள் மைதானம் முழுவதும் நிரம்பி இருந்தார்கள். இந்த மைதானத்தில் ரசிகர்கள் மிகவும் சிறந்த சூழ்நிலையை உணர முடிவும். ரஷித்கான் ஓவரில் திலக் வர்மா ஒரு ரன் எடுக்க மறுத்தது, அந்த நேரத்தில் அவருக்கு அது சிறந்த யோசனையாக இருந்திருக்கும். அந்த விசயத்தில் அவருக்கு ஆதரவாக இருக்கிறேன். இது பெரிய விசயம் இல்லை. எங்களுக்கு இன்னும் 13 போட்டிகள் உள்ளன.

    இவ்வாறு ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.

    வெற்றி குறித்து சுப்மன் கில் கூறுகையில் "எங்கள் அணி வீரர்கள் பதட்டத்தை கட்டுப்பிடித்திய விதம், பனிப்பொழிவு இருந்த போதிலும் கடைசி நான்கு ஓவர்களில் பந்து வீசிய விதம் மிகவும் சிறப்பானது. பனிப்பொழிவு இருந்தபோதிலும் சுழற்பந்து வீச்சாளர்கள் பந்து வீசிய விதம், நாங்கள் தொடர்ந்து போட்டியில் வெற்றிக்காக இருக்கிறோம் என்பதை உறுதி செய்தார்கள். இது எல்லாம் நெருக்கடி கொடுப்பதாக அமைந்தது.

    நெருக்கடியில் விளையாடி கொண்டிருக்கிறோம் என்ற உணர்வை மும்பை வீரர்ளுக்கு ஏற்படுத்த விரும்பினோம். அவர்களை நெருக்கடிக்குள் கொண்டு வந்து தவறு செய்ய வைக்க வேண்டும் என்பதுதான் எங்களது திட்டமாக இருந்தது" என்றார்.

    • மும்பை அணி தரப்பில் டெவால்ட் ப்ரீவிஸ் 46 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
    • குஜராத் அணி தரப்பில் ஓமர்சாய், ஸ்பென்சர் ஜான்சன், மோகித் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ஐபிஎல் தொடரின் 5-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய குஜராத் அணி 168 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 45 ரன்கள் எடுத்தார்.

    இதனையடுத்து மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித்- இஷான் கிஷன் களமிறங்கினர். இஷான் 0 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த நமன் அதிரடியாக விளையாடி 20 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ரோகித்- ப்ரீவிஸ் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் 43 ரன்களிலும் ப்ரீவிஸ் 46 ரன்களிலும் அவுட் ஆகினர்.

    இதனையடுத்து திலக் வர்மா 25, டிம் டேவிட் 11, ஜெரால்ட் கோட்ஸி 1 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தை பாண்ட்யா சிக்சருக்கும் 2-வது பந்தை பவுண்டரிக்கும் விரட்டினார். 3-வது பந்தில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில் குஜராத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குஜராத் அணி தரப்பில் ஓமர்சாய், ஸ்பென்சர் ஜான்சன், மோகித் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை தோல்வியடைவது தொடர்கிறது.

    • வங்காளதேச வீரர் கலீட் அஹ்மத் விக்கெட் கிடைக்காத விரக்தியில் மெண்டிஸை மன்கட் முறையில் ரன் அவுட் செய்ய முயற்சித்தார்.
    • இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    வங்காளதேசம் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டி மார்ச் 22-ம் தேதி தொடங்கியது. அதில் டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

    அதை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை முதல் இன்னிங்சில் 280 ரன்கள் சேர்த்தது. குறிப்பாக அந்த அணிக்கு மதுசங்கா 2, கருணரத்னே 17, குசால் மெண்டிஸ் 16, ஏஞ்சலோ மேத்யூஸ் 5, சந்திமால் 9 என முக்கிய பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் அவுட்யாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். ஆனால் மிடில் ஆர்டரில் ஜோடி சேர்ந்து அசத்திய கேப்டன் தனஞ்செயா டீ சில்வா சதமடித்து 102 ரன்களும் கமிண்டு மெண்டிஸ் சதமடித்து அதே 102 ரன்களும் எடுத்தனர்.வங்காளதேசம் சார்பில் நகித் ராணா, கலிட் அகமது தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

    அதைத் தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசம் முதல் இன்னிங்சில் 188 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதைத்தொடர்ந்து 92 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இலங்கை தங்களுடைய இரண்டாவது இன்னிங்சில் 418 ரன்கள் குவித்தது. மிடில் ஆர்டரில் அசத்திய கேப்டன் டீசல் வா சதமடித்து 108 ரன்களும் கமிண்டு மெண்டிஸ் 164 ரன்களும் குவித்து காப்பாற்றினர்.

    இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் வங்காளதேச வீரர் கலீட் அஹ்மத் விக்கெட் கிடைக்காத விரக்தியில் மெண்டிஸை மன்கட் முறையில் ரன் அவுட் செய்ய முயற்சித்தார். ஆனால் பந்து ஸ்டெம்பில் படவில்லை. இதை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து முகமது அமீர் ஓய்வை அறிவித்தார்.
    • பாகிஸ்தான் அணிக்காக முகமது அமீர் கடந்த 2009-ம் ஆண்டு அறிமுகமானார்.

    2024-ம் ஆண்டு ஐசிசி டி20 உலக கோப்பை வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 20 அணிகள் இந்த டி20 உலக கோப்பையில் பங்கேற்கிறது.

    இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த சில பாகிஸ்தான் வீரர்கள் தங்களது ஓய்வுமுடிவை திரும்பப்பெற்று பாகிஸ்தான் அணிக்காக விளையாட ஆர்வம் காட்டி வருகின்றன. அந்தவகையில் நடைபெற்று முடிந்த பிஎஸ்எல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்காக விளையாடிய இமாத் வசிம் தனது ஓய்வு முடிவை திரும்பப்பேற்று உலகக்கோப்பை தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார்.

    அவரைப் தொடர்ந்து நடப்பாண்டு பிஎஸ்எல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் முகமது அமீரும் தனது ஓய்வு முடிவை திரும்பப்பெற்று டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து முகமது அமீர் ஓய்வை அறிவித்தார்.

    அதன்பின் அவர் இங்கிலாந்தில் குடியேறி உலகின் பல்வேறு டி20 லீக்குகளில் பங்கேற்று வந்தார். இந்நிலையில் அவர் தனது ஓய்வு முடிவை திரும்பப்பெற்றுள்ளதால் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடம்பிடிப்பார் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.

    பாகிஸ்தான் அணிக்காக கடந்த 2009-ம் ஆண்டு அறிமுகமான முகமது அமீர் 36 டெஸ்ட், 61 ஒருநாள் மற்றும் 50 டி20 போட்டிகளில் விளையாடி 259 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • லக்னோ அணிக்கு எதிராக ராஜஸ்தான் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • சந்தீப் சர்மா அந்த 3 ஓவர்களை சிறப்பாக பந்து வீசாமல் போயிருந்தால் நான் ஆட்டநாயகனாக வந்திருக்க மாட்டேன்.

    ஐபிஎல் தொடரின் 4-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் - லக்னோ அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் சஞ்சு சாம்சன் 82 ரன்கள் எடுத்தார். லக்னோ சார்பில் அதிகபட்சமாக நவீன்-உல்-ஹக் 2 விக்கெட்டுகள் சாய்த்தார்.

    அதைத்தொடர்ந்து ஆடிய லக்னோ 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் சேர்த்தது. கடைசி வரை போராடிய பூரான் 64* (41) ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ட்ரெண்ட் போல்ட் 2 விக்கெட்டுகள் எடுத்தார். இந்த போட்டியில் ஆட்டநாயகனாக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டார்.

    இந்நிலையில் டெத் ஓவரில் சிறப்பாக பந்து வீசி சந்தீப் சர்மா தான் ஆட்டநாயகன் விருதுக்கு தகுதியானவர் என்று சஞ்சு சாம்சன் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    எப்போதும் களத்தில் நேரத்தை செலவிடுவது வேடிக்கையாக இருக்கும். அதில் வெற்றி பெறுவது இன்னும் ஸ்பெஷலாக இருக்கும்.

    எங்களிடம் சற்று வித்தியாசமான கலவை இருப்பதால் இம்முறை எனக்கு வித்தியாசமான வேலை கொடுக்கப்பட்டுள்ளது. சங்ககாரா சில பரிந்துரைகளை பின்பற்றுவதற்கு கொடுத்தார். 10 வருடங்களாக ஐபிஎல் தொடரில் விளையாடும் எனக்கு சில அனுபவங்கள் வந்துள்ளது. தற்போது சூழ்நிலைகளை புரிந்து கொள்ள நான் அதிக நேரம் செலவிட வேண்டும் என்று கருதுகிறேன். ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடியதும் எனக்கு உதவியது.

    இவை அனைத்தும் உங்களுடைய பலம் பலவீனத்தை புரிந்து கொள்வதாகும். நான் எப்போதும் பந்தை பார்த்து ரியாக்சன் கொடுக்கும் பேட்ஸ்மேன். அது முதல் பந்தாக இருந்தாலும் கடைசி பந்தாக இருந்தாலும் கவலையில்லை. இந்த விருதை நான் சந்தீப்புக்கு கொடுக்க வேண்டும். அவர் அந்த 3 ஓவர்களை சிறப்பாக பந்து வீசாமல் போயிருந்தால் நான் ஆட்டநாயகனாக வந்திருக்க மாட்டேன். அழுத்தமான நேரங்களில் திறமை மட்டுமல்ல கேரக்டரரும் முக்கியம் என்று அஸ்வின் பாய் சொல்லி கேட்டுள்ளேன்.

    இவ்வாறு சாம்சன் கூறினார்.

    • குஜராத் தரப்பில் அதிகபட்சமாக சுதர்சன் 45 ரன்கள் எடுத்தார்.
    • மும்பை தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ஐபிஎல் தொடரின் 5-வது லீக் போட்டியில் மும்பை- குஜராத் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில் - சகா களமிறங்கினர். 15 ரன்களில் சகா பும்ரா பந்து வீச்சில் போல்ட் ஆனார். அவர் அவுட் ஆன சிறிது நேரத்தில் கில் 31 ரன்னில் வெளியேறினார்.

    நிதானமாக விளையாடிய சுதர்சன் 45 ரன்னிலும் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஓமர்சாய் 17, மில்லர் 12, தெவாட்டியா 22 என வெளியேற இறுதியில் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் சேர்த்தது. மும்பை தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ×