search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்ஆப்பிரிக்க தொடருக்கு இந்திய அணி சிறந்த முறையில் தயாராகவில்லை - ஹர்பஜன்சிங் சொல்கிறார்
    X

    தென்ஆப்பிரிக்க தொடருக்கு இந்திய அணி சிறந்த முறையில் தயாராகவில்லை - ஹர்பஜன்சிங் சொல்கிறார்

    தென்ஆப்பிரிக்க தொடருக்கு இந்திய அணி சிறந்த முறையில் தயாராகவில்லை என இந்திய மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் தெரிவித்துள்ளார்.
    கொல்கத்தா:

    இந்திய மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    தென்ஆப்பிரிக்க பயணத்துக்கு முன்பாக உள்நாட்டில் இலங்கை அணியுடன் விளையாடிய தொடரின் மூலம் நமது அணிக்கு பெரிய அளவில் எந்த பலனும் கிடைக்கவில்லை. அதற்கு பதிலாக சில வீரர்களை முன்கூட்டியே தென்ஆப்பிரிக்காவுக்கு அனுப்பி இருக்கலாம். இல்லாவிட்டால் தர்மசாலாவில் பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்திருக்கலாம். தர்மசாலா, மலைவாசஸ்தலமாகும். அங்கு நிலவும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை, வேகப்பந்து வீச்சுக்கு உகந்த சூழல் போன்றவை தென்ஆப்பிரிக்கா போன்ற கடினமான தொடருக்கு நம்மை தயார்படுத்திக்கொள்வதற்கு சரியான இடமாக இருந்திருக்கும்.

    எல்லோரும் ரஹானேவை களம் இறக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். விராட் கோலியின் தலைமையின் கீழ் ரஹானே விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் அவரது சராசரி 40-க்கும் குறைவாகவே உள்ளது. ரஹானே களம் கண்டும் இந்திய அணி 0-2 என்ற கணக்கில் பின்தங்கி இருந்தால், ரோகித் சர்மாவை அணிக்குள் கொண்டு வந்திருக்க வேண்டும் என்று சொல்வார்கள். எதற்காக கேப்டன் இந்த முடிவை எடுத்தார் என்பதை புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இஷாந்த் ஷர்மாவுடன் ஒப்பிடும் போது புவனேஷ்வர்குமாரே வெற்றி தேடித்தரக்கூடிய ஒரு பவுலர். அவர் களம் இறங்கிய போதெல்லாம் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது.

    அவரை 2-வது டெஸ்டில் இருந்து நீக்கியிருக்கக் கூடாது. கடைசி டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 1-2 என்ற கணக்கில் முடிக்கும் என்று நம்புகிறேன். தோல்வியால் துவண்டு விடாமல் நேர்மறையான எண்ணத்துடன் கடைசி டெஸ்டை இந்திய அணி எதிர்கொள்ள வேண்டும் என்பதே எனது அறிவுரையாகும்.

    இவ்வாறு ஹர்பஜன்சிங் கூறினார். 
    Next Story
    ×