search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.எஸ்.எல். கால்பந்து: லீக் போட்டிகளில் கோவா, ஜேம்ஷெட்பூர் அணிகள் வெற்றி
    X

    ஐ.எஸ்.எல். கால்பந்து: லீக் போட்டிகளில் கோவா, ஜேம்ஷெட்பூர் அணிகள் வெற்றி

    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டிகளில் எப்.சி. கோவா, ஜேம்ஷெட்பூர் எப்.சி. அணிகள் வெற்றி பெற்றன. #ISL2017 #FCGoa #JamshedpurFC

    புனே:

    10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. ஜேம்ஷெட்பூரில் மாலை 5:30 மணிக்கு தொடங்கிய 53-வது லீக் ஆட்டத்தில் ஜேம்ஷெட்பூர் எப்.சி. - டெல்லி டைனமோஸ் எப்.சி அணிகள் மோதின.

    விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் பாதிநேர ஆட்டத்தின் 20-வது மற்றும் 22-வது நிமிடங்களில் டெல்லி அணியின் கலு உச்சே அடுத்தடுத்து இரண்டு கோல்கள் அடித்தார். அதைத்தொடர்ந்து 29-வது நிமிடம் ஜேம்ஷெட்பூர் அணியின் திரி ஒரு கோல் அடித்தார். இதனால் முதல்பாதி நேர ஆட்டத்தில் ஜேம்ஷெட்பூர் அணி 2-1 என முன்னிலை பெற்றது.



    தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 54 -வது நிமிடம் ஜேம்ஷெட்பூரின் யும்னம் ராஜு கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 2-2 என சமனானது. அதைத்தொடர்ந்து 86-வது நிமிடம் ஜேம்ஷெட்பூரின் திரிண்டேட் கான்கிலேவ்ஸ் மேற்கொண்டு ஒரு கோல் அடித்தார். அதன்பின் இறுதிவரை மேற்கொண்டு கோல் அடிக்காததால் ஜேம்ஷெட்பூர் எப்.சி. அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

    அடுத்ததாக கொச்சியில் 8 மணிக்கு தொடங்கிய 54-வது லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. - எப்.சி. கோவா அணிகள் மோதின. இப்போட்டி தொடங்கிய 7-வது நிமிடமே கோவா அணியின் பெர்ரான் கொரோமினாஸ் கோல் அடித்தார். அதைத்தொடர்ந்து 29-வது நிமிடம் கேரளாவின் வினீத் கோல் அடித்தார். இதனால் முதல் பாதிநேர ஆட்டம் 1-1 என சமனில் இருந்தது. தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தின் 77-வது நிமிடத்தில் கோவாவின் ஈடு பெடியா கோல் அடித்தார். இந்த கோல் கோவா அணியின் வெற்றி கோலாக அமைந்தது. இப்போட்டியில் கோவா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.



    இன்றைய போட்டிகளில் வெற்றி பெற்ற கோவா அணி 19 புள்ளிகளுடன் 4-வது இடத்திற்கும், ஜேம்ஷெட்பூர் அணி 16 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திற்கும் முன்னேறின. அடுத்ததாக 24-ம் தேதி நடைபெறும் லீக் போட்டியில் ஜேம்ஷெட்பூர் எப்.சி. - எப்.சி புனே சிட்டி அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. #ISL2017 #FCGoa #JamshedpurFC
    Next Story
    ×