search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேசிய சீனியர் கூடைப்பந்து: பஞ்சாப், உத்தரகாண்ட் காலிறுதிக்கு தகுதி
    X

    தேசிய சீனியர் கூடைப்பந்து: பஞ்சாப், உத்தரகாண்ட் காலிறுதிக்கு தகுதி

    தேசிய சீனியர் கூடைப்பந்து காலிறுதி போட்டிக்கு பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய இரு அணிகள் தகுதி பெற்றுள்ளன.
    சென்னை:

    தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் சார்பில் அரைஸ் ஸ்டீல் நிறுவன ஆதரவுடன் 68-வது தேசிய சீனியர் கூடைப்பந்து போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.

    கடந்த முறை 2-வது இடத்தை பிடித்த தமிழக ஆண்கள் அணி ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்தியன் ரெயில்வே, பஞ்சாப், அரியானா, குஜராத் ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன.

    தமிழக அணி தொடக்க ஆட்டத்தில் அரியானாவை 113-58 புள்ளிக் கணக்கிலும், அதை தொடர்ந்து குஜராத்தை 102-63 என்ற கணக்கிலும், பஞ்சாப்பை 88-74 என்ற கணக்கிலும் வென்று ஏற்கனவே காலிறுதிக்கு தகுதி பெற்றது.

    நேற்றைய 4-வது ஆட்டத்தில் தமிழக அணி ரெயில்வேயை எதிர்கொண்டது. இதில் தமிழ்நாடு 95-85 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி 4-வது வெற்றியை பதிவு செய்து அந்த பிரிவில் முதல் இடத்தை பிடித்தது.

    இதேபிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் பஞ்சாப் அணி 101-57 என்ற கணக்கில் அரியானாவை வீழ்த்தியது.

    ‘பி’ பிரிவில் ரெயில்வே, பஞ்சாப் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இரு அணிகளும் 2 ஆட்டத்தில் வெற்றி பெற்றன. ஒரு போட்டியில் தோற்றன. இன்று இரவு நடைபெறும் போட்டியில் இரு அணிகளும் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி 2-வது இடத்தையும், தோல்வி அடையும் அணி 3-வது இடத்தை பிடிக்கும்.

    அரியானா, குஜராத் அணிகள் தான் மோதிய 3 ஆட்டத்திலும் தோற்றன. இன்று நடைபெறும் ஆட்டத்தில் இரு அணிகளும் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி 4-வது இடத்தை பிடித்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறும். தோல்வி அடையும் அணி வெளியேற்றப்படும்.

    ‘ஏ’ பிரிவை பொறுத்த வரை கர்நாடகா அணி தான் மோதிய 4 ஆட்டங்களில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறி அந்த பிரிவில் முதல் இடத்தை பிடித்தது.

    இதேபோல உத்தரகாண்ட், ராஜஸ்தான் அணிகளும் காலிறுதிக்கு தகுதி பெற்றன. இரு அணிகளும் 2 வெற்றி, 1 தோல்வியுடன் உள்ளன. இன்று மாலை நடைபெறும் ஆட்டத்தில் இரு அணிகளும் மோதுகின்றன. இதில் வெல்லும் அணி 2-வது இடத்தையும், தோல்வி அடையும் அணி 3-வது இடத்தை பிடிக்கும்.

    தமிழக பெண்கள் அணி ‘ஏ’ பிரிவில் உள்ளது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் மத்தியபிரதேசத்தை வீழ்த்தியது. 2-வது ஆட்டத்தில் சத்தீஷ்கரிடம் போராடி வீழ்ந்தது.

    நேற்றைய 3-வது ஆட்டத்தில் கேரளாவிடம் வீழ்ந்தது. 1 வெற்றி, 2 தோல்வியுடன் தமிழக அணி இருக்கிறது. இன்றைய கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் தமிழக அணி கர்நாடகாவை சந்திக்கிறது.

    தமிழக அணி காலிறுதிக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இழந்துவிட்டது. கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது கர்நாடகாவிடம் தோற்றாலும் பாதிப்பு இருக்காது.

    கர்நாடகா, கேரளா, சத்தீஷ்கர் ஆகிய அணிகள் இந்த பிரிவில் இருந்து காலிறுதிக்கு தகுதி பெற்றன. மத்திய பிரதேச அணி வெளியேற்றப்படுகிறது.

    ‘பி’ பிரிவில் ரெயில்வே 4 ஆட்டத்திலும் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டன. மராட்டியம் 2 வெற்றி, 1 தோல்வியுடனும், டெல்லி, தெலுங்கானா அணிகள் 1 வெற்றி, 2 தோல்வியுடனும் உள்ளன. ராஜஸ்தான் 3 தோல்வியுடன் இருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் டெல்லி- ராஜஸ்தான், மராட்டியம்- தெலுங்கானா மோதுகின்றன.
    Next Story
    ×