search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செஞ்சூரியன் டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா 135 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி: தொடரையும் வென்றது
    X

    செஞ்சூரியன் டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா 135 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி: தொடரையும் வென்றது

    செஞ்சூரியன் டெஸ்டில் இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பலால் தென்ஆப்பிரிக்கா 135 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் 2-0 எனக் கைப்பற்றியது. #SAvIND #Ngidi
    இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் செஞ்சூரியனில் கடந்த 13-ந்தேதி தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.



    மார்கிராம் (94), ஹசிம் அம்லா (82), டு பிளிசிஸ் (63) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 113.5 ஓவரில் 335 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இந்திய அணி சார்பில் அஸ்வின் 4 விக்கெட்டும், இசாந்த் சர்மா 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. விராட் கோலி (153), முரளி விஜய் (46), அஸ்வின் (38) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா 307 ரன்கள் சேர்த்தது. தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் மோர்கல் 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.



    28 ரன்கள் முன்னிலையுடன் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை தொடங்கியது. டீன் எல்கர் (61), டி வில்லியர்ஸ் (80), டு பிளிசிஸ் (48) ஆகியோரின் ஆட்டத்தால் 258 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இந்திய அணி சார்பில் மொகமது ஷமி 4 விக்கெட்டும், பும்ரா 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.



    முதல் இன்னிங்சில் 28 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்ததால் ஒட்டுமொத்தமாக தென்ஆப்பிரிக்கா 286 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்தது.

    இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 287 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 23 ஓவரில் 35 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்து திணறியது.



    4-வது விக்கெட்டுக்கு புஜாரா உடன் பார்தீவ் பட்டேல் ஜோடி சேர்ந்தார். நேற்றைய ஆட்ட முடிவில் புஜாரா 11 ரன்னுடனும், பார்தீவ் பட்டேல் 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று ஐந்தாவது நாள் ஆட்டம் தொடங்கியது. புஜாரா, பார்தீவ் பட்டேல் ஆட்டத்தை தொடர்ந்தனர். 3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இந்த ஜோடி 26.1-வது ஓவரில் பிரிந்தது. புஜாரா 19 ரன்கள் எடுத்து ரன்அவுட் ஆனது.

    புஜாரா அவுட்டாகி மற்ற இந்திய பேட்ஸ்மேன்களுக்கு வழிவிட்டார். பின்னர் வந்த வீரர்கள் ஒருவர் பின்னர் ஒருவராக சென்று கொண்டிருந்தனர். 30-வது ஓவரின் 5-வது பந்தில் பார்தீப் பட்டேல் 19 ரன்கள் எடுத்த நிலையில் ரபாடா பந்தில் ஆட்டமிழந்தார்.

    அதன்பின் வந்த ஹர்திக் பாண்டியா (6), அஸ்வின் (3), மொகமது சமி (28) ஆகியோரை நிகிடி வீழ்த்தினார். விக்கெட் விரைவாக வீழ்ந்ததால் அடித்து விளையாடிய ரோகித் சர்மா 47 ரன்கள் எடுத்த நிலையில் ரபாடா பந்தில் வெளியேறினார். கடைசி விக்கெட்டாக பும்ராவை நிகிடி வீழ்த்த இந்தியா 50.2 ஓவரில் 151 ரன்னில் சுருண்டது. இதனால் தென்ஆப்பிரிக்கா 135 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



    ஏற்கனவே முதல் போட்டியில் வெற்றி பெற்றிருந்ததால் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-0 எனக் கைப்பற்றி தொடரில் முன்னிலை வகிக்கிறது. புதுமுக வீரர் நிகிடி 12.2 ஓவரில் 39 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் சாய்த்தார். 27.3 ஓவர்கள் மட்டுமே சந்தித்த இந்தியா 8 விக்கெட்டுக்களை இழந்து தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. 2-வது இன்னிங்சில் 6 விக்கெட் வீழ்த்திய நிகிடி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

    இரு அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் வருகிறது 24-ந்தேதி ஜோகன்னஸ்பர்க்கில் நடக்கிறது. #SAvIND #Ngidi
    Next Story
    ×