search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    287 ரன் இலக்கு: 3 விக்கெட்டை இழந்து இந்தியா திணறல்- 4-வது நாள் முடிவில் 35-3
    X

    287 ரன் இலக்கு: 3 விக்கெட்டை இழந்து இந்தியா திணறல்- 4-வது நாள் முடிவில் 35-3

    செஞ்சூரியன் டெஸ்டில் 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்தியா 35 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்து திணறி வருகிறது.
    இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 335 ரன்களில் ஆல்அவுட் ஆனது.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா முதல் இன்னிங்சில் 307 ரன்கள் சேர்த்தது. 28 ரன்கள் முன்னிலையுடன் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை தொடங்கியது. இந்தியாவின் நேர்த்தியான பந்து வீச்சால் தென்ஆப்பிரிக்கா 258 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் இந்தியாவிற்கு 287 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. முரளி விஜய், லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 8-வது ஓவரில் முரளி விஜய் ரபாடா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து புஜாரா களம் இறங்கினார். மறுமுனையில் விளையாடிய லோகேஷ் ராகுல் 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    3-வது விக்கெட்டுக்கு புஜாரா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். விராட் கோலி 5 ரன்கள் எடுத்த நிலையில் நிகிடி பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். அப்போது இந்தியா 26 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்து திணறியது.

    4-வது விக்கெட்டுக்கு புஜாரா உடன் பார்தீவ் பட்டேல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இன்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. இந்தியா இன்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 11 ரன்னுடனும், பார்தீவ் பட்டேல் 5 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    நாளைய கடைசி நாளில் இந்தியாவின் வெற்றிக்கு 252 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் 7 விக்கெட்டுக்கள் உள்ளன. கடைசி நாளில் 252 ரன்கள் என்பது மிகவும் கடினமான ஒன்று. ஒருவேளை இந்த ஜோடி நாளை காலை செசன் (மதிய உணவு இடைவேளை) வரை நிலைத்து நின்றால், ஒருவேளை இந்தியாவிற்கு வாய்ப்புள்ளது. இல்லையெனில் இந்தியா தோல்வியை சந்திக்கும். #SAvIND #INDvSA #CenturionTest #Ngidi
    Next Story
    ×