search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்ஆப்பிரிக்கா 258 ரன்னில் ஆல்அவுட்: இந்தியாவிற்கு 287 ரன்கள் இலக்கு
    X

    தென்ஆப்பிரிக்கா 258 ரன்னில் ஆல்அவுட்: இந்தியாவிற்கு 287 ரன்கள் இலக்கு

    செஞ்சூரியன் டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் 258 ரன்னில் ஆல்அவுட் ஆனதால், இந்தியாவின் வெற்றிக்கு 287 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. #SAvIND
    இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்திருந்தது. டி வில்லியர்ஸ் 50 ரன்னுடனும், டீன் எல்கர் 36 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். டீன் எல்கர் அரைசதம் அடித்தார். டி வில்லியர்ஸ் 80 ரன்கள் எடுத்த நிலையில் மொகமது ஷமி பந்தில் ஆட்டமிழந்தார். டீன் எல்கர் 61 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். டி காக் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த மூன்று விக்கெட்டுக்களையும் மொகமது ஷமி வீழ்த்தினார். இதனால் தென்ஆப்பிரிக்கா 163 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுக்களை இழந்தது.

    6-வது விக்கெட்டுக்கு டு பிளிசிஸ் உடன் பிலாண்டர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. தென்ஆப்பிரிக்கா அணி 55 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்திருந்தது. டு பிளிசிஸ் 12 ரன்னுடனும், பிலாண்டர் 3 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    மதிய உணவு இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. இருவரும் நிலைத்து நின்று விளையாடினார்கள். இதனால் தென்ஆப்பிரிக்காவின் ஸ்கோர் மெல்ல மெல்ல உயர்ந்து கொண்டே இருந்தது.

    தென்ஆப்பிரிக்காவின் ஸ்கோர் 209 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. பிலாண்டர் 26 ரன்கள் எடுத்த நிலையில் இசாந்த் சர்மா பந்தில் ஆட்டமிழந்தார். 6-வது விக்கெட்டுக்கு டு பிளிசிஸ் - பிலாண்டர் ஜோடி 46 ரன்கள் எடுத்தது. தென்ஆப்பிரிக்காவிற்கு இந்த ஜோடி அடித்த ரன்கள் மிகமிக முக்கியமானதாக அமைந்தது.

    அடுத்து வந்த மகாராஜ்-ஐ 6 ரன்னில் இசாந்த் சர்மா வெளியேற்றினார். 8-வது விக்கெட்டுக்கு டு பிளிசிஸ் உடன் ரபாடா ஜோடி சேர்ந்தார். ரபாடா 29 பந்துகள் சந்தித்து 4 ரன்கள் எடுத்தாலும், 8-வது விக்கெட்டுக்கு டு பிளிசிஸ் உடன் இணைந்து தென்ஆப்பிரிக்கா 30 ரன்கள் எடுக்க காரணமாக இருந்தார்.



    டு பிளிசிஸ் 9-வது விக்கெட்டாக 48 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது தென்ஆப்பிரிக்கா 9 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி விக்கெட்டாக நிகிடி 1 ரன் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் ஆட்டமிழக்க தென்ஆப்பிரிக்கா 91.3 ஓவரில் 258 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இந்திய அணி சார்பில் மொகமது ஷமி 4 விக்கெட்டும், பும்ரா 3 விக்கெட்டும், இசாந்த் சர்மா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    முதல் இன்னிங்சில் 28 ரன்கள் முன்னிலைப் பெற்றதுடன் தென்ஆப்பிரிக்கா ஒட்டுமொத்தமாக 286 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என இந்தியாவிற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது. #SAvIND #INDvSA #ViratKohli #DuPlessis
    Next Story
    ×