search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செஞ்சூரியன் டெஸ்ட்: தென்ஆப்ரிக்கா 335 ரன்களுக்கு ஆல்-அவுட் - அஷ்வின் 4 விக்கெட்
    X

    செஞ்சூரியன் டெஸ்ட்: தென்ஆப்ரிக்கா 335 ரன்களுக்கு ஆல்-அவுட் - அஷ்வின் 4 விக்கெட்

    செஞ்சூரியனில் நடந்து வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்ஆப்ரிக்கா அணி அணி முதல் இன்னிங்சில் 335 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது.
    செஞ்சூரியன்:

    தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் வீழ்ந்த இந்தியா, 0-1 என, தொடரில் பின் தங்கியுள்ளது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட், நேற்று செஞ்சூரியனில் துவங்கியது.

    'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க அணி கேப்டன் டு பிளசி, பேட்டிங் தேர்வு செய்தார். இந்த அணியில் லுங்கே நிதிடி அறிமுக வாய்ப்பு பெற்றார். இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டன.

    நன்றாக விளையாடிய புவனேஷ்வர் குமார், சகா நீக்கப்பட்டு, இஷாந்த் சர்மா, பார்த்திவ் படேல் சேர்க்கப்பட்டனர். துவக்க வீரர் ஷிகர் தவானுக்குப் பதில், லோகேஷ் ராகுல் இடம் பிடித்தார்.

    தென் ஆப்ரிக்க அணிக்கு மார்க்ரம், எல்கர் ஜோடி நிதான துவக்கம் கொடுத்தது. பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் என, இந்திய 'வேகங்களை' சமாளித்து நின்ற இந்த ஜோடி, முதல் ஒரு மணி நேரத்தில் ரன் எடுக்க வேண்டும் என்பதையே மறந்து விட்டது. இதனால், முதலில் வீசப்பட்ட 121 பந்துகளில் (20.1 ஓவர், 42 ரன்), 102 பந்துகளில் (17 ஓவர்) ரன்கள் எதுவும் எடுக்காமல் 'டாட்' பந்தாக அமைந்தது.

    இதன் பின் சற்று வேகம் காட்டத் துவங்கினர். பும்ரா வீசிய 21 வது ஓவரில் மூன்று பவுண்டரி அடித்தார் மார்க்ரம். தொடர்ந்து பாண்ட்யா ஓவரில் 2 பவுண்டரி அடித்த இவர், டெஸ்ட் அரங்கில் 2வது அரைசதம் எட்டினார். முதல் விக்கெட்டுக்கு 86 ரன்கள் சேர்த்த நிலையில் அஷ்வின் 'சுழலில்', எல்கர் (31) சிக்கினார்.

    அடுத்து வந்த ஆம்லா, பும்ரா, அஷ்வின் பந்துகளை எல்லைக் கோட்டுக்கு விரட்டினார். ஆடுகளமும் பேட்டிங்கிற்கு சாதகமாக அமைய, தென் ஆப்ரிக்க அணியின் ஸ்கோர் சீராக உயர்ந்தது. இந்நிலையில், 94 ரன்கள் எடுத்த மார்க்ரம், அஷ்வினிடம் சிக்கி, சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். பின் வந்த 'அபாய' டிவிலியர்சை, 20 ரன்னில் போல்டாக்கினார் இஷாந்த். மறுபுறம், ஆம்லா அரைசதம் அடித்தார். இவர் 82 ரன் எடுத்த போது, பாண்ட்யாவின் 'த்ரோவில்' ரன் அவுட்டாக, போட்டியில் திருப்புமுனை ஏற்பட்டது.

    அஷ்வின் பந்தில், குயின்டன் டி காக் 'டக்' அவுட்டானார். மீண்டும் அசத்திய பாண்ட்யா, இம்முறை, பிலாண்டரை (0) ரன் அவுட் செய்ய, கடைசி ஒரு மணி நேரத்தில் 5 ரன்னுக்கு 3 விக்கெட்டுகள் சரிந்தன. முதல் நாள் முடிவில், தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 269 ரன்கள் எடுத்திருந்தது. டுபிளசி (25), மகராஜ் (10) அவுட்டாகாமல் இருந்தனர்.

    இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தில் மேற்கொண்டு 76 ரன்கள் எடுத்த நிலையில் தென் ஆப்பிரிக்கா 335 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியா சார்பில் அஷ்வின் அதிகபட்சம் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    இதனையடுத்து, இந்தியா தனது முதல் இன்னிங்சை விளையாட தொடங்கியுள்ளது. ராகுல், முரளி விஜய் களமிறங்கியுள்ளனர்.
    Next Story
    ×