search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்: சரிவில் இருந்து மீளுமா இந்திய அணி?
    X

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்: சரிவில் இருந்து மீளுமா இந்திய அணி?

    இந்தியா - தென்ஆப்பிரிக்கா மோதும் 2-வது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் இன்று தொடங்குகிறது. இந்திய அணி சரிவில் இருந்து மீண்டு பதிலடி கொடுக்குமா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.
    செஞ்சூரியன்:

    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. கேப்டவுனில் நடந்த முதலாவது டெஸ்டில் 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென்ஆப்பிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது.

    வேகப்பந்துவீச்சின் சொர்க்கபுரியாக திகழ்ந்த கேப்டவுனில் இந்திய அணி 208 ரன்கள் இலக்கை நெருங்க கூட முடியாமல் 135 ரன்களில் சுருண்டது. எதிரணியின் வேகப்பந்து வீச்சாளர் வெரோன் பிலாண்டர் 6 விக்கெட்டுகளை சாய்த்து, இந்திய அணியை முழுமையாக சீர்குலைத்து விட்டார். வேகப்பந்து எந்த அளவுக்கு திரும்புகிறது என்பதை இந்திய பேட்ஸ்மேன்களால் துல்லியமாக கணித்து செயல்பட முடியவில்லை. குறிப்பாக தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானின் ‘ஷாட்’ இரண்டு இன்னிங்சிலும் மோசமாக அமைந்தது. அதாவது இந்திய ஆடுகளங்கள் போல் நினைத்து விளையாடி விக்கெட்டை தாரை வார்த்தார்.

    2-வது டெஸ்ட் நடக்கும் செஞ்சூரியன் ஆடுகளமும் வேகத்துடன் கூடிய பவுன்சுக்கு ஒத்துழைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் கேப்டவுன் போன்று பந்து களத்தில் விழுந்து எழும்பும் போது காற்றிலேயே நகருவது பெரிய அளவில் இருக்காது என்று பிட்ச் பராமரிப்பாளர் பிரையன் பிளாய் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கடைசி இரு நாட்களில் ஆடுகளத்தன்மையில் ஓரளவு மாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு

    இது போன்ற அம்சங்கள் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கக்கூடியவை ஆகும். முந்தைய போட்டியில் செய்த தவறுகளை திருத்திக்கொண்டு நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய நெருக்கடியில் நமது வீரர்கள் உள்ளனர்.

    அணியில் நிச்சயம் சில மாற்றங்கள் இருக்கும். லோகேஷ் ராகுல், வெளிநாட்டு மண்ணில் நன்றாக ஆடியிருப்பதால் ஷிகர் தவானுக்கு பதிலாக அவர் சேர்க்கப்படலாம். இதே போல் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவை கழற்றிவிட்டு பார்த்தீவ் பட்டேலை களம் இறக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக அணியின் நெருங்கிய வட்டாங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் ரோகித் சர்மாவுக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அணி சவாலான ஸ்கோரை எட்ட வேண்டும் என்றால் தொடக்க வரிசை பேட்ஸ்மேன்கள் அசத்த வேண்டியது முக்கியம். முரளிவிஜய், புஜாரா, கேப்டன் விராட் கோலி ஆகியோர் தான் இந்திய அணியின் தூண்களாக பார்க்கப்படுகிறார்கள். இவர்கள் தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சு தாக்குதலை சமாளித்து நிலைத்து நின்று ஆடுவதை பொறுத்தே இந்திய அணியின் ஸ்கோர் அமையும். கேப்டவுன் டெஸ்டில் முதலாவது இன்னிங்சில் 93 ரன்கள் விளாசிய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா மீதும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    தொடர்ச்சியாக 9 டெஸ்ட் தொடர்களை கைப்பற்றி சாதனை படைத்த இந்திய அணி அந்த பெருமையை நீட்டிக்க வேண்டும் என்றால் இந்த டெஸ்டில் கட்டாயம் வென்றாக வேண்டும்.

    இதே போல் தென்ஆப்பிரிக்க மண்ணில் முதல் டெஸ்டில் தோற்ற வெளிநாட்டு அணி அதன் பிறகு தொடரை கைப்பற்றிய வரலாறு ஒரே ஒரு முறை மட்டுமே நிகழ்ந்துள்ளது. 1922-23-ம் ஆண்டில் இங்கிலாந்து அணி அங்கு தொடக்க டெஸ்டில் தோற்று அதன் பிறகு 5 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் வசப்படுத்தியது. அந்த சரித்திர பட்டியலில் இந்திய அணி இடம் பிடிக்க வேண்டும் என்றால் இந்த போட்டியில் தென்ஆப்பிரிக்க அணியை புரட்டி எடுத்தாக வேண்டும்.

    தென்ஆப்பிரிக்காவில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு நேற்று முன்தினம் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் விருந்து அளிக்கப்பட்டது. அப்போது வீரர்கள் போட்டோவுக்கு உற்சாகமாக போஸ் கொடுத்த காட்சி

    உள்ளூர் அணியான தென்ஆப்பிரிக்க வீரர்களை பொறுத்தவரை, இந்த டெஸ்டிலும் இந்திய அணியை போட்டுத்தாக்க ஆயத்தமாக உள்ளனர். ஸ்டெயின் காயத்தால் ஒதுங்கி விட்டதால் அவருக்கு பதிலாக ஆல்-ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் இடம் பெறுவார் என்று தெரிகிறது. எனவே இந்த போட்டியிலும் 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் ஆக்ரோஷமாக வரிந்து கட்டி நிற்பார்கள்.

    தொடக்க டெஸ்டில் டிவில்லியர்ஸ் (65 மற்றும் 35 ரன்) பாப் டு பிளிஸ்சிஸ் (62 ரன், 0) ஆகியோரின் பொறுப்பான ஆட்டம் தென்ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு உதவிகரமாக இருந்தது. அவர்களை சீக்கிரம் காலி செய்யாவிட்டால் அதன் பிறகு அபாயகரமான வீரர்களாக உருவெடுத்து விடுவார்கள்.

    மொத்தத்தில் உள்ளூர் சீதோஷ்ண நிலை, பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் வலுவான நிலை என்று தென்ஆப்பிரிக்காவின் கையே ஓங்கி இருக்கிறது. அவர்களின் ஆதிக்கத்திற்கு இந்திய வீரர்கள் அணை போடுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    செஞ்சூரியன் மைதானத்தில் இந்திய அணி இதற்கு முன்பு ஒரே ஒரு டெஸ்டில் விளையாடி இருக்கிறது. 2010-ம் ஆண்டு நடந்த அந்த டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் தோல்வி கண்டது குறிப்பிடத்தக்கது.

    போட்டிக்கான இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: முரளிவிஜய், லோகேஷ் ராகுல் அல்லது தவான், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, விருத்திமான் சஹா அல்லது பார்த்தீவ் பட்டேல், ஹர்திக் பாண்ட்யா, அஸ்வின், முகமது ஷமி, பும்ரா, புவனேஷ்வர்குமார் அல்லது இஷாந்த் ஷர்மா.

    தென்ஆப்பிரிக்கா: மார்க்ராம், டீன் எல்கர், அம்லா, டிவில்லியர்ஸ், பாப் டு பிளிஸ்சிஸ் (கேப்டன்), குயின்டான் டி காக், கேஷவ் மகராஜ், வெரோன் பிலாண்டர், ரபடா, மோர்னே மோர்கல், கிறிஸ் மோரிஸ் அல்லது நிகிடி.

    இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி டென்1, சோனி டென்3 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. #tamilnews
    Next Story
    ×