search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி20 கிரிக்கெட் தொடர்: தமிழகத்திற்கு எதிராக 48 பந்தில் சதம் அடித்த கருண் நாயர்
    X

    டி20 கிரிக்கெட் தொடர்: தமிழகத்திற்கு எதிராக 48 பந்தில் சதம் அடித்த கருண் நாயர்

    டெஸ்ட் போட்டியில் முச்சதம் விளாசிய கருண் நாயர் தமிழக அணிக்கெதிரான டி20 போட்டியில் சதம் அடித்து அசத்தினார். #Karunnair #InterStateT20
    ரஞ்சி டிராபி தொடரில் விளையாடும் அணிகளுக்கு இடையில் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. சையத் முஷ்டாக் அலி டி20 லீக் தொடரான இதில், மண்டலம் வாரியாக அணிகள் பிரிக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

    தெற்கு மண்டலத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, ஐதராபாத், ஆந்திர பிரதேசம், கேரளா மற்றும் கோவா அணிகள் இடம்பிடித்துள்ளது. தமிழ்நாடு அணி தனது முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையிலும், கர்நாடகா அணிகள் தங்களது முதல் மூன்று போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்ற நிலையில் இன்று பலப்பரீட்சை நடத்தின.

    டாஸ் வென்ற தமிழக அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி கர்நாடகா அணியின் மயாங் அகர்வால், கருண் நாயர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஒரு பக்கம் விக்கெட் சரிந்து கொண்டிருக்க மறுமுனையில் கருண் நாயர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் கருண் நாயர் 48 பந்தில் சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து விளையாடிய அவர் 52 பந்தில் தலா 8 பவுண்டரி, சிக்சர்களுடன் 111 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    கருண் நாயர் ஆட்டத்தால் கர்நாடகா 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்தது. தமிழக அணி சார்பில் அதிசயராஜ் டேவிட்சன் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.



    பின்னர் தமிழ்நாடு 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. தொடக்க வீரர் வாஷிங்டன் சுந்தர் 26 பந்தில் 34 ரன்னும், கேப்டன் விஜய் சங்கர் 20 ரன்னும், சஞ்சய் யாதவ் 19 ரன்னும், ஜெகதீசன் 16 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் ஒற்றையிலக்க ரன்னில் வெளியேற தமிழ்நாடு 16.3 ஓவரிலேயே 101 ரன்னில் சுருண்டது. இதனால் கர்நாடகா 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கர்நாடகா அணி சார்பில் பிரவீண் டுபே 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    இந்த வெற்றியின் மூலம் கர்நாடகா 4 போட்டியில் 3 வெற்றிகள் பெற்று ரன்ரேட் அடிப்படையில் முதல் இடத்தையும், தமிழ்நாடு 3 வெற்றிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளது. #Karunnair #InterStateT20 #SyedMushtaqaliT20
    Next Story
    ×