search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ‘இந்திய கிரிக்கெட் சுவர்’ டிராவிட்டுக்கு இன்று பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்
    X

    ‘இந்திய கிரிக்கெட் சுவர்’ டிராவிட்டுக்கு இன்று பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்

    ‘இந்திய கிரிக்கெட்டின் சுவர்’ என்று அழைக்கப்படும் ராகுல் டிராவிட்டிற்கு இன்று பிறந்தநாள். முன்னாள், இன்னாள் வீரர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். #RahulDravid
    1996-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிங்கப்பூரில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியின்போது, இந்திய தேசிய கிரிக்கெட் அணியில் அறிமுகமானவர் ராகுல் டிராவிட். அதன்பின் லார்ட்ஸில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஜூன் 20-ந்தேதி அறிமுகமானார்.

    தனது அபாரமான ஆட்டத்தால் இந்திய கிரிக்கெட் அணியில் 2012-ம் ஆண்டு வரை 12 வருடங்கள் விளையாடினார். ஒரு நாள் போட்டியை விட டெஸ்ட் போட்டியில் நிலைத்து நின்று விளையாடும் திறமைப் படைத்த டிராவிட் இந்திய கிரிக்கெட்டின் சுவர் என்று அழைக்கப்பட்டார்.



    பேட்டிங் செய்ய கடினமான ஆடுகளங்களில் கூட கடைசி வரை நின்று போராடும் குணம் கொண்டனர். இவரது ஆட்டத்தால் இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் இந்தியா பல போட்டிகளில் தோல்வியில் இருந்து தப்பியுள்ளது.

    தென்ஆப்பிரிக்கா மண்ணில் இவரது தலைமையில்தான் இந்திய அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் 10 ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றவர்.

    164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 36 சதங்கள், 63 அரைசதங்களுடன் 13288 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 52.31 ஆகும். அதிகபட்சமாக 270 ரன்கள் குவித்துள்ளார். 1654 பவுண்டரிகள், 21 சிக்ஸ் உடன் 210 கேட்ச் பிடித்துள்ளார்.



    344 ஒருநாள் போட்டியில் 10889 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 39.16 ஆகும். 12 சதம், 83 அரைசதம் அடித்துள்ளார். இதில் 950 பவுண்டரிகளும், 42 சிக்சர்களுடன் அடங்கும். 196 பேரை கேட்ச் மூலமாகவும், 14 பேரை ஸ்டம்பிங் மூலமாகவும் வெளியேற்றியுள்ளார்.

    அபூர்வமாக பந்து வீசும் டிராவிட் டெஸ்ட் போட்டியில் ஒரு விக்கெட்டும், ஒருநாள் போட்டியில் 4 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார். ஒரேயொரு டி20 போட்டியில் மட்டும் விளையாடியுள்ளார்.



    2012-ம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றிருந்தபோது ராகுல் டிராவிட் சரியாக விளையாடவில்லை என்று விமர்சனம் எழுந்தது. இதனால் அடிலெய்டில் ஜனவரி 24-ந்தேதி தொடங்கிய டெஸ்ட் போட்டியோடு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

    அதன்பின் ஐபிஎல் தொடரில் பயிற்சியாளராகவும், ஆலோசகராவும் செயல்பட்டார். தற்போது 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராகவும், இந்தியா ‘ஏ’ அணியின் பயிற்சியாளராகவும் உள்ளார்.



    ராகுல் டிராவிட், இன்று 45 வயது முடிவடைந்து, 46-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். பிறந்த நாள் கொண்டாடும் இவருக்கு சச்சின் தெண்டுல்கர் உள்பட பலர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
    Next Story
    ×