search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரிமியர் பேட்மிண்டன் லீக்: லக்னோ அவாதே வாரியர்சை வீழ்த்தியது ஐதராபாத் ஹன்டர்ஸ்
    X

    பிரிமியர் பேட்மிண்டன் லீக்: லக்னோ அவாதே வாரியர்சை வீழ்த்தியது ஐதராபாத் ஹன்டர்ஸ்

    பிரிமியர் பேட்மிண்டன் லீக் தொடரின் லீக் ஆட்டத்தில் லக்னோ அவாதே வாரியர்சை 6-(-1) என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி ஐதராபாத் ஹன்டர்ஸ் அணி வெற்றி பெற்றது. #VodafonePBL #HyderabadHunters #AwadheWarriors
    லக்னோ:

    3-வது பிரிமியர் பேட்மிண்டன் லீக் (பி.பி.எல்.) போட்டிகள் கடந்த 23-ம் தேதி தொடங்கியது. இப்போட்டிகள் ஜனவரி 14-ந் தேதி வரை சென்னை, கவுகாத்தி, டெல்லி, லக்னோ, ஐதராபாத் ஆகிய நகரங்களில் நடக்கிறது. இதில் சென்னை ஸ்மாஷர்ஸ், ஆமதாபாத் ஸ்மாஷ் மாஸ்டர்ஸ், லக்னோ அவாதே வாரியர்ஸ், பெங்களூரு பிளாஸ்டர்ஸ், டெல்லி டாஷர்ஸ், ஐதராபாத் ஹன்டர்ஸ், மும்பை ராக்கெட்ஸ், நார்த் ஈஸ்டர்ன் வாரியர்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

    நான்காவது சுற்று ஆட்டங்கள் சென்னையில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் லக்னோ அவாதே வாரியர்சும், ஐதராபாத் ஹன்டர்சும் மோதின.



    முதல் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் லக்னோவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், ஐதராபாத்தின் சாய் பிரனீத் ஆகியோர் மோதினர். இப்போட்டியை அவாதே வாரியர்ஸ் அணி துருப்பு ஆட்டமாக தேர்ந்தெடுத்தது. இதில் 15-10, 15-10 என்ற நேர் செட்களில் சாய் பிரனீத் வெற்றி பெற்றார்.

    இரண்டாவது ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் லக்னோ வாரியர்ஸ் அணியின் லீ ஹியூன் இல், ஐதராபாத்தின் காஷ்யப் ஆகியோர் மோதினர். இதில் லீ ஹியூன் இல், 13-15, 15-9, 15-14 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் லக்னோ அணியின் சாய்னா நேவால், ஐதராபாத் அணியின் கரோலினா மரினை எதிர்த்து விளையாடினார். இந்த போட்டியை ஐதராபாத் அணி துருப்பு ஆட்டமாக தேர்ந்தெடுத்து விளையாடியது. இதில் அதிரடியாக விளையாடிய கரோலினா 15-5,15-7 என்ற நேர் செட்களில் எளிதாக வென்றார்.

    ஆண்கள் இரட்டையர் பிரிவு போட்டியில் லக்னோவின் ஆர் சின் சங் - தங் சுன் மென் ஜோடி, ஐதராபாத்தின் மார்கிஸ் கிடோ - யோ இயான் சியாங் ஜோடியை எதிர்கொண்டது. இதில், 14-15,15-6,15-11 என்ற செட்களில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.

    கலப்பு இரட்டையர் பிரிவு போட்டியில் லக்னோவின் கிறிஸ்டினா பெடர்சன் - ஹெண்ட்ரா செட்டிவன் ஜோடி, ஐதராபாத் அணியின் சட்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி - பியா செபாதியா பெர்னடெத் ஜோடியை எதிர்கொண்டது. இதில் 15-9, 15-9 என்ற நேர் செட்களில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.

    நேற்று நடைபெற்ற ஒரு போட்டியில் கூட லக்னோ அவாதே வாரியரஸ் அணி வெற்றி பெறவில்லை. இறுதியில் 6-(-1) என்ற புள்ளிக்கணக்கில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் பெங்களூரு பிளாஸ்டர்ஸ் - சென்னை ஸ்மாஷர்ஸ் அணிகள் விளையாட உள்ளன. #PBL #HyderabdHunters #AwadheWarriors
    Next Story
    ×