search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேப் டவுன் டெஸ்ட்: ஹர்திக் பாண்டியா ஆட்டத்தால் இந்தியா 209 ரன்கள் சேர்த்து ஆல்அவுட்
    X

    கேப் டவுன் டெஸ்ட்: ஹர்திக் பாண்டியா ஆட்டத்தால் இந்தியா 209 ரன்கள் சேர்த்து ஆல்அவுட்

    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்டில் ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடி 93 ரன்கள் எடுத்ததன் மூலம் இந்தியா முதல் இன்னிங்சில் 209 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. #SAvIND #HardikPandya
    இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா புவனேஸ்வர் குமாரின் அபார பந்து வீச்சால் 286 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் தென்ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 11 ஓவரில் 28 ரன்னுக்குள் 3 விக்கெட்டுக்களை இழந்தது.

    இன்றைய 2-வது நாள் ஆட்டத்திலும் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறினார்கள். புஜாரா ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடினார். ஆனால் அவரால் ரன்கள் குவிக்க இயலவில்லை. இதனால் இந்தியாவின் ஸ்கோர் உயர்வதற்குள் விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தன.

    ரோகித் சர்மா 11 ரன்னிலும், அஸ்வின் 12 ரன்னிலும், சகா ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இந்தியா 92 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டை இழந்து திணறியது.

    இதனால் இந்தியா 150 ரன்கள் தாண்டினாலே பெரிய விஷயம் என்ற சூழ்நிலை உருவானது. இந்த நிலையில்தான் ஹர்திக் பாண்டியா உடன் புவனேஸ்வர் குமார் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இந்தியாவை சரிவில் இருந்து மீட்டது. ஹர்திக் பாண்டியா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த புவனேஸ்வர் குமார் நிதானமாக விளையாடினார். இதனால் இந்தியாவின் ஸ்கோர் 200-ஐ நெருங்கியது.



    இந்தியாவின் ஸ்கோர் 191 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. 86 பந்துகளை சந்தித்து 25 ரன்கள் எடுத்த நிலையில் புவனேஸ்வர் குமார் ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்டியா - புவனேஸ்வர் குமார் ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 25.1 ஓவரில் 99 ரன்கள் குவித்தது.

    புவனேஸ்வர்குமார் அவுட்டாகிய சிறிது நேரத்தில் இந்தியாவின் ஸ்கோர் 199 ரன்னாக இருக்கும்போது ஹர்திக் பாண்டியா 93 ரன்னில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். அடுத்து வந்த பும்ரா 2 ரன்னில் ஆட்டமிழக்க இந்தியா 73.4 ஓவரில் 209 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் ரபாடா, பிலாண்டர் தலா 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

    இந்தியா முதல் இன்னிங்சில் 77 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. 77 ரன்கள் முன்னிலையுடன் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை தொடங்கியுள்ளது. #SAvIND #HardikPandya #INDvSA
    Next Story
    ×