search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிக் பாஷ் கிரிக்கெட்: அடிலெய்டு ஸ்டிரைகர்ஸ் அணியை வீழ்த்தியது ஹோபார்ட் ஹரிகேன்ஸ்
    X

    பிக் பாஷ் கிரிக்கெட்: அடிலெய்டு ஸ்டிரைகர்ஸ் அணியை வீழ்த்தியது ஹோபார்ட் ஹரிகேன்ஸ்

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் தொடரின் லீக் போட்டியில் அடிலெய்டு ஸ்டிரைகர்ஸ் அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் விழ்த்தி ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி வெற்றி பெற்றது.
    ஹோபார்ட்:

    இந்தியாவில் ஐ.பி.எல். தொடர் நடத்தப்படுவது போல் ஆஸ்திரேலியாவில் 2017-18-க்கான பிக் பாஷ் லீக் தொடர் 19-ம் தேதி தொடங்கியது. இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் - அடிலெய்டு ஸ்டிரைகர்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி ஹோபார்ட் அணியின் அலெக்ஸ் டூலன், டார்கி ஷார்ட் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். டூலன் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து வந்த வீரர்களும் பெரிய அளவில் ரன்குவிக்க தவறினர். இருப்பிமும் எதிர்முனையில் சிறப்பாக விளையாடிய டார்கி ஷார்ட் அரைசதம் அடித்தார். ஷார்ட்  58 பந்துகளில் 96 ரன்கள் (9 பவுண்டரி, 4 சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழந்தார். ஹோபார்ட் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்தது. அடிலெய்டு அணி தரப்பில் பில்லி ஸ்டான்லேக், ரஷித் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.



    பின்னர் 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அடிலெய்டு ஸ்டிரைகர்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அலெக்ஸ் கேரி 2 ரன்களிலும், ஜேக் வெதரால்டு 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் டிராவிஸ் ஹெட்டுடன், கொலின் இங்கிராம் ஜோடி சேர்ந்து நிதானமாக ரன் குவித்தனர். ஹெட் 44 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து அரைசதம் அடித்த கொலின் இங்கிராமும் 66 ரன்களில் ஆட்டமிழந்தார். அடிலெய்டு அணி 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த போட்டியில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹோபார்ட் அணி பந்துவீச்சில் ஜோப்ரா ஆர்சர் 3 விக்கெட்களும், கிளைவ் ரோஸ், தைமால் மில்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    சிறப்பாக விளையாடி 96 ரன்கள் குவித்த ஹோபார்ட் அணியின் டார்கி ஷார்ட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் நான்கு புள்ளிகளுடன் ஆறாவது இடத்திற்கு முன்னேறியது. நாளை நடைபெறும் லீக் போட்டிகளில் பிரிஸ்பேன் ஹீட் - பெர்த் ஸ்கார்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன.
    Next Story
    ×