search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ‘ஸ்விங்’ பந்தால் இந்தியாவை திணறடிக்க செஞ்சூரியன் குரேட்டரை வரவழைத்த தென்ஆப்பிரிக்கா
    X

    ‘ஸ்விங்’ பந்தால் இந்தியாவை திணறடிக்க செஞ்சூரியன் குரேட்டரை வரவழைத்த தென்ஆப்பிரிக்கா

    கேப் டவுன் டெஸ்டில் ஸ்விங் பந்தால் இந்தியாவை திணறடிக்க செஞ்சூரியன் குரேட்டரை வரவழைத்து தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் ஆடுகளத்தை அமைத்துள்ளது. #INDvSA #ViratKohli #DuPlessis
    இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் கேப் டவுனில் நாளை தொடங்குகிறது. இந்திய அணி கடந்த 1992-ம் ஆண்டில் இருந்து 25 ஆண்டுகளாக தென்ஆப்பிரிக்கா மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றது கிடையாது.

    கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதனால் தொடர்ந்து 9 டெஸ்ட் தொடர்களை வென்று சாதனைப் படைத்துள்ளது. விராட் கோலி, ரகானே, புஜாரா, தவான், முரளி விஜய், கேஎல் ராகுல், புவனேஸ்வர் குமார், மொகமது ஷமி, உமேஷ் யாதவ் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

    இதனால் தென்ஆப்பிரிக்கா மண்ணில் தற்போதைய இந்திய அணி சாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் போட்டி கேப் டவுனில் நடைபெறுகிறது. இந்த ஆடுகளத்தில் ஸ்விங் அதிக அளவில் இருக்காது. பவுன்ஸ் அதிகமாக இருக்கும். இந்திய தொடக்க வீரர் முரளி விஜய் பவுன்சரை எதிர்கொள்ள தயார் என்று வெளிப்படையாக கூறினார். அதேவேளையில் இந்திய அணியும் சவாலுக்குத் தயார் என்று மார்தட்டி வருகிறது.

    தென்ஆப்பிரிக்கா தொடர் குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி, ‘‘முதல் போட்டியில் தோல்வியடைந்தால், அதில் இருந்து மீண்டு வருவது கடினம்’’ என்பதை அடிக்கடி கூறிவருகிறார்.



    இந்திய அணி பவுன்சரை தாக்குப்பிடித்து விளையாடிவிட்டால்?.... என்ற அச்சம் தென்ஆப்பிரிக்காவிற்கு வந்துள்ளது. இதனால் பவுன்ஸ், ஸ்விங், கேரி ஆகியவற்றுடன் முதல் போட்டியிலேயே இந்திய அணியை மோசமாக தோல்வியடையச் செய்து, அவர்களின் தன்னம்பிக்கையை நிலைகுலைய வைக்க தென்ஆப்பிரிக்கா திட்டமிட்டுள்ளது.

    தற்போது கேப் டவுனில் அதிக அளவில் வறட்சி காணப்படுகிறது. இதனால் ஆடுகளம் ஈரத்தன்மையுடன் புற்கள் அதிக அளவில் வைப்பதில் சிரமம். ஆகவே ஸ்விங் ஆடுகளம் தயாரிப்பில் பிரபலமான செஞ்சூரியன் சூப்பர்ஸ்போர்ட்ஸ் பார்க் ஆடுகள பராமரிப்பாளர் (Curator) பிரையன் ப்ளாய் உதவியை நாடியுள்ளது.

    அவர் கேப் டவுன் விரைந்து நியூலேண்ட்ஸ் ஆடுகள பராமரிப்பாளருக்கு ஸ்விங் ஆகும் வகையில் ஆடுகளத்தை தயார் செய்ய உதவி புரிந்துள்ளார்.

    இதுகுறித்து தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில் ‘‘தென்ஆப்பிரிக்க வீரர்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை மட்டுமே விரும்பவில்லை. பந்து ஸ்விங் ஆக வேண்டும் என்று விரும்புகிறார்கள். தென்ஆப்பிரிகாவின் வலு இந்தியாவின் குறைபாடு அடிப்படையில் உருவான திட்டம்தான் இது. கேப் டவுன் குரேட்டர் பிளின்டிற்கு பிளாய் உதவியாக இருந்தார். தற்போதைய கிரிக்கெட்டில் சொந்த நாட்டு அணிக்கு சாதகமான வகையில் ஆடுகளத்தை தயார் செய்யும் முடிவை நான் விரும்புகிறேன். 2015-ல் இந்தியாவில் நாங்கள் விளையாடும்போது ஆடுகளம் எப்படி அமைக்கப்பட்டது?’’ என்றார்.

    இதனால் முதல் டெஸ்ட் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×