search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் இருந்து மாற்றப்பட்ட போட்டி: மராட்டிய ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்
    X

    சென்னையில் இருந்து மாற்றப்பட்ட போட்டி: மராட்டிய ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்

    சென்னையில் இருந்து புனேக்கு மாற்றப்பட்ட ஏ.டி.பி. டென்னிஸ் போட்டி மராட்டிய ஓபன் என்ற பெயருடன் இன்று தொடங்குகிறது.
    புனே:

    சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் கடந்த 21 ஆண்டுகளாக நடந்து வந்தது. தெற்காசியாவில் நடைபெறும் ஒரே ஏ.டி.பி. தொடர் என்பதால் இதில் நட்சத்திர வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்பது உண்டு. போட்டியை வெற்றிகரமாக நடத்துவதற்கு தமிழக அரசும் தனது பங்களிப்பாக ரூ.2 கோடி வழங்கி வந்தது.

    சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக வர்ணிக்கப்பட்ட இந்த போட்டி கடந்த ஜூலை மாதம் திடீரென மராட்டிய மாநிலம் புனேக்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது. வர்த்தக நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. போட்டி கட்டணம் மற்றும் பரிசுத்தொகையை உயர்த்த வேண்டும் என்று வீரர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், போதுமான அளவுக்கு ஸ்பான்சர்ஷிப்பை திரட்டுவதில் தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் தளர்ந்து விட்டதாலேயே இந்த போட்டியை தொடர்ந்து நடத்தும் வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள முடியாமல் போய் விட்டது.

    ஆண்டுதோறும் புத்தாண்டை டென்னிஸ் திருவிழாவோடு கொண்டாடும் சென்னை ரசிகர்கள் இந்த முறை நிச்சயம் வருத்தம் அடைந்திருப்பார்கள்.

    இந்த நிலையில் மராட்டிய ஓபன் டென்னிஸ் என்ற புதிய பெயருடன் இந்த போட்டி புனேயில் உள்ள பலேவாடி ஸ்டேடியத்தில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற 6-ந்தேதி வரை நடக்கிறது.

    இதில் உலக தரவரிசையில் 6-வது இடம் வகிக்கும் முன்னாள் சாம்பியனான மரின் சிலிச் (குரோஷியா), நடப்பு சாம்பியன் ராபர்ட்டா பாவ்டிஸ்டா அகுத் (ஸ்பெயின்), பெனோய்ட் பேர் (பிரான்ஸ்), பிரெஞ்ச் ஓபனில் 2-வது இடம் பிடித்த கெவின் ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா) ஆகிய முன்னணி வீரர்கள் களம் காணுகிறார்கள். இவர்கள் நேரடியாக 2-வது சுற்றில் அடியெடுத்து வைக்கும் வகையில் ‘பை’ சலுகை பெற்றுள்ளனர். சென்னையில் 4 முறை வாகை சூடிய சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா, தொடர்ந்து 2-வது ஆண்டாக இந்த போட்டிக்கு வரவில்லை.

    ‘வைல்டு கார்டு’ மூலம் பிரதான சுற்றில் விளையாடும் வாய்ப்பை பெற்றிருக்கும் தமிழகத்தை சேர்ந்த ராம்குமார், தனது முதல் சுற்றில் ஸ்பெயினின் ராபர்ட்டோ கார்பல்லேசுடன் மோதுகிறார். மற்றொரு இந்திய வீரர் யுகி பாம்ப்ரி சக நாட்டவர் அர்ஜூன் காடேவை எதிர்கொள்கிறார். ‘இளம்புயல்’ ராம்குமார் முதல் தடையை வெற்றிகரமாக கடந்தால் 2-வது சுற்றில் மரின் சிலிச்சை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும்.

    இரட்டையர் பிரிவில் நடப்பு சாம்பியன் ரோகன் போபண்ணா- ஜீவன் நெடுஞ்செழியன், லியாண்டர் பெயஸ்- புராவ் ராஜா, யுகி பாம்ப்ரி- திவிஜ் ஷரண், ஸ்ரீராம் பாலாஜி- விஷ்ணு வர்தன் ஆகிய இந்திய ஜோடிகள் வரிந்து கட்டுவதற்கு தயாராகி வருகிறார்கள்.

    போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.3½ கோடியாகும். மாலை 5 மணிக்கு தொடங்கும் போட்டியை சோனி டென்2 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    #tamilnews
    Next Story
    ×