search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிக் பாஷ் 2017-18: லீக் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்சை வீழ்த்தியது பிரிஸ்பேன் ஹீட்
    X

    பிக் பாஷ் 2017-18: லீக் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்சை வீழ்த்தியது பிரிஸ்பேன் ஹீட்

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் தொடரின் இரண்டாவது லீக் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணி வீழ்த்தியது.
    பிரிஸ்பேன்:

    இந்தியாவில் ஐ.பி.எல். தொடர் நடத்தப்படுவது போல் ஆஸ்திரேலியாவில் 2017-18-க்கான பிக் பாஷ் லீக் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் - பிரிஸ்பேன் ஹீட் அணிகள் பிரிஸ்பேன் மைதானத்தில் மோதின.

    டாஸ் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி பிரிஸ்பேன் ஹீட் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜிம்மி பியர்சன் - பிரெண்டன் மெக்கல்லம் ஆகியோர் களமிறங்கினர். பியர்சன் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சாம் ஹீஸ்லெட் 14 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் மெக்கல்லம்-உடன், ஜோ பர்ன்ஸ் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக விளையாடிய மெக்கல்லம் 22 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அப்போது 6.3 ஓவரில் பிரிஸ்பேன் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 61 ரன்கள் எடுத்திருந்தது.



    அடுத்ததாக அலெக்ஸ் ரோஸ் களமிறங்கினார். சிறப்பாக விளையாடிய ஜோ பர்ன்ஸ், அலெக்ஸ் ரோஸ் இருவரும் அரைசதம் அடித்தனர். ஜோ பர்ன்ஸ் 50 ரன்களிலும், அலெக்ஸ் ரோஸ் 51 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பென் கட்டிங் 35 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். பிரிஸ்பேன் அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது. மெல்போர்ன் அணிதரப்பில் மார்கஸ் ஸ்டோயின்ஸ் 3 விக்கெட்டும், மைக்கெல் பீர் 2 விக்கெட்டும், ஸ்காட் போலண்ட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பிரிஸ்பேன் ஹீட் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் பென் டங் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து லூக் ரைட் 19 ரன்களிலும், கெவின் பீட்டர்சன் 10 ரன்களிலும், கிளென் மேக்ஸ்வெல் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அப்போது மெல்போர்ன் அணி 6.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் மார்கஸ் ஸ்டோயின்ஸ் - ஜேம்ஸ் பால்க்னர் ஆகியோர் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்க போராடினர்.

    சிறப்பாக விளையாடிய ஸ்டாயின்ஸ் அரைசதம் அடித்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அவர் 51 பந்துகளில் 99 ரன்கள் எடுத்திருந்த நிலையில் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. பால்க்னர் 47 ரன்களுடன் களத்தில் இருந்தார். இதனால் 15 ரன்கள் வித்தியாசத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணி வெற்றி பெற்றது. பிரிஸ்பேன் அணி பந்துவீச்சில் ஷதப் கான் 2 விக்கெட்டும், ஜோஷ் லலோர், மார்க் ஸ்டிகெட், பிரெண்டன் டோகட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    அதிரடியாக விளையாடி 51 பந்துகளில் 99 ரன்கள் (6 பவுண்டரி, 6 சிக்ஸர்) மற்றும் 3 விக்கெட்கள் வீழ்த்திய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் மார்கஸ் ஸ்டோயின்ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார். இன்று நடைபெறும் போட்டியில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் - மேர்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன.
    Next Story
    ×